உறவைக் காக்கும் உன்னதக் குர்ஆன்
வெளியூரில் இருக்கும் பிள்ளைகளை ஆண்டுக்கு ஒரு முறை ஊர் வரச் சொல்லி, அவர்களை அருகில் கொண்டு வந்து ஒன்றாகக் கூடி, ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுகிறோம். உணவு பரிமாறி, உறங்கிக் கிடந்த பாச உணர்வை உசுப்பி விட்டு, அடுத்த ஓராண்டு வரை தாக்குப் பிடிக்கின்ற வகையில் பாச உணர்வை, பாச உறவை உயிர்ப்பித்து திரும்ப ஊருக்கு அனுப்புகின்றோம்.
இத்தகைய கருணையும் கரிசனமும் கொண்ட நமது பெற்றோர்கள் செய்வது
போல், மறுமைச் சிந்தனையை விட்டும் தூரமாக இருக்கும் நம்மை அருகில்
அழைத்து, அரவணைத்து மறுமைச் சிந்தனையைக் கூர்மைப்படுத்துகின்ற வேலையை
நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் ஆண்டுக்கு ஒரு முறை புனித ரமளான் மாதத்தின் மூலம் செய்கின்றான்.
அருள்மிகு குர்ஆன் அருளப்பட்ட அந்தப் புனித ரமளான் இதோ வந்து விட்டது.
ரமளான் மாதம் வந்ததும் நோன்பை முன்னிட்டு ஜமாஅத்துடன் கூடிய
கடமையான தொழுகைகள், இரவுத் தொழுகை உள்ளிட்ட உபரியான தொழுகைகள், குறிப்பாக பிந்திய 10 இரவுகளில்
தொழுகின்ற இரவுத் தொழுகைகள், கடமையான ஜகாத்தைத் தாண்டி, உபரியான
தான தர்மங்கள்,
இஃப்தார் தொடர்பான தர்மங்கள், குர்ஆன்
ஓதுதல், கிராஅத்துகளைச் செவியுறுதல், தொடர்
சொற்பொழிவுகள்,
உம்ரா செய்தல், பள்ளியில்
இஃதிகாஃப் இருத்தல் எனப் பல்வேறு விதமான நன்மைகள்
முஸ்லிம்களுக்கிடையே பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் ஓடுகின்றன. இதற்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக
இருப்பது, உந்து சக்தியாக இருப்பது உன்னதமிகு குர்ஆன் தான்! உண்மையில், இந்த நல்லறங்கள் பீறிட்டு ஓடுவதைப் பார்க்கும் போது...
ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி எண்:1899
நபி (ஸல்) அவர்களின்
இந்த வார்த்தைகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகின்றன. சொர்க்க வாசல்கள் திறக்கப்படுவதையும், நரக வாசல்கள் மூடப்படுவதையும், மனிதனை ஆட்டிப் படைக்கின்ற அடங்காப் பிடாரியான நமது பிறவி எதிரியின்
ஆதிக்கம் அடக்கப்படுவதையும் நாம் நிதர்சனமாகக் காண முடிகின்றது.
பள்ளிவாசல் பக்கமே திரும்பிப் பார்க்காதவர்கள் கூட பள்ளியில்
தவமாகக் கிடப்பது, இறுகிய மனமுடையவர்கள் கூட இளகிய
மனமுடையவர்களாக மாறுவது போன்ற மகத்தான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் மக்களிடம் பொங்கி வழியச் செய்கிறது திருக்குர்ஆன்.
புனிதக் குர்ஆன் எழுத்தளவில் ஏட்டளவில் முடங்கி இறந்து கிடக்கும்
வேதமல்ல; அது இதயத்திலும், இரத்த நாளங்களிலும்
ஓடுகின்ற இரத்த ஓட்டத்திற்கு ஈடாக வேகமாக ஓடி இயங்குகின்ற ஈடு இணையற்ற வேதம் என்பதை
எடுத்துக் காட்டுகின்றது. அதாவது, இதை மறு வார்த்தையில் சொல்ல
வேண்டுமானால்,
அந்த அளவுக்கு அழைப்பாளர்கள், குர்ஆனை
மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இருப்பினும், இந்தக் குர்ஆனின்
ஒரு போதனை மட்டும் இன்னும் மக்களிடம் போய் சேரவில்லை. அதாவது அழைப்பாளர்கள் அதை இன்னும்
கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அந்த வகையில் வேதனையே மிஞ்சுகிறது.
ரமளான் மாதத்தில் தொழுகை, ஜகாத், உம்ரா, குர்ஆன் ஓதுதுல், குர்ஆன் கிராஅத் கேட்டல் போன்ற வணக்கங்கள் பொங்கி வழிந்து மக்களை
ஈர்த்த அளவிற்கு மக்களை இன்னும் ஈர்க்காத, மக்கள் இன்னும்
திரும்பிப் பார்க்காத ஓரிடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. அது தான் உறவினர்ளை ஆதரித்தல், சொந்த பந்தங்களை அரவணைத்தல் என்ற உன்னத வணக்கமாகும்.
உறவுகளைப் பேணுகின்ற விவகாரத்தை குர்ஆன் சொல்லும் போதே அதிக
வேகத்திலும்,
உயர் அழுத்தத்திலும் சொல்கின்றது.
அதை நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின்
பார்வைகளைக் குருடாக்கினான்.
அல்குர்ஆன் 47:22,23.
ஆம்! இந்தக் குர்ஆனைப் புறக்கணித்தாலே பூமியில் குழப்பமும், உறவைப் பகைப்பதும் தான் ஏற்படும் என்று திருக்குர்ஆன் அடித்துச்
சொல்கின்றது.
இதன் மாற்றுக் கருத்து என்ன? திருக்குர்ஆனை
ஏற்றுக் கொண்டால் பூமியில் அமைதியும், உறவுகளை ஆதரிப்பதும், அரவணைப்பதும் ஏற்படும் என்பது தான்.
குர்ஆனின் மறுபெயர் அமைதியும் அரவணைப்பும் தான் என்று குர்ஆன்
தனக்கே உரிய அழகிய பாணியில் அருமையாக எடுத்துரைக்கின்றது. அத்துடன், உறவைப் பகைப்பவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள், கண்ணிழந்த கபோதிகள், காதிழந்த செவிடர்கள்
என்று கடுமையாகக் கண்டிக்கின்றது.
அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத்
துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும்
சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.
அல்குர்ஆன் 13:25
உறவை முறிப்பவருக்கு இவ்வுலகில் அல்லாஹ்வின் சாபமும் மறுஉலகில்
கேவலமும், கேடும் உண்டு என்று உறுதி செய்கின்றது.
அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர்.
இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம்
விளைவிக்கின்றனர். அவர்களே நட்டமடைந்தவர்கள்.
அல்குர்ஆன் 2: 27
இந்த வசனமும் உறவை முறிப்பதை வெளுத்து வாங்குகின்றது. சொந்தங்களைப்
பகைப்பதை பூமியில் மக்கள் செய்கின்ற பெரிய குழப்பம் என்று மறுபதிவு செய்கின்றது. உறவை
முறிப்பதை மாபெரும் பாவம் என்று திருக்குர்ஆன் கடிந்துரைத்து, உறவுடன் இணங்கி வாழ்தல் என்று நேரிய நெறியைக் கடைப்பிடிக்கச்
சொல்கின்றது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை
அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம்
மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும்
(அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:1
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு அஞ்சச் சொல்லி விட்டு உறவினர்கள்
விஷயத்திலும் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று சொல்வதன் மூலம் உறவைப் பேணுவதின் பரிமாணத்தை
பெரிய அளவில் எடுத்துக் காட்டுகின்றான்.
உறவைப் பேணுதல் என்றால், நமது சமுதாயம்
கல்யாண வீட்டில் உறவுகளை அழைத்து விருந்து போடுதல் என்று தான் விளங்கி வைத்துள்ளது.
கோடான கோடி பணத்தை கல்யாணப் பந்தலில் காலி செய்வதைத் தான் உறவை அரவணைத்தல் என்று விளங்கி
வைத்திருக்கின்றது. வருகின்ற உறவினர்கள் வீசிய கையும் வெறுங்கையுமாக வந்து சாப்பிடுவதில்லை.
அன்பளிப்பு என்ற பெயரில் மனம் நொந்து, மொய் எழுதி
விட்டுப் போகின்றனர் என்பது தான் உண்மை.
இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், கல்யாண வீட்டில் விருந்து போடுவதை மட்டுமே உறவைப் பேணுதல் என்று
விளங்கி வைத்திருக்கின்ற இந்தச் சமுதாயம் அதையும் வெறுமனே போடவில்லை. அதற்குரிய அன்பளிப்பு
என்ற பெயரில் மொய்யாக ஒரு பகரத்தையும் பதிலையும் வாங்கிக் கொண்டு தான் விருந்து போடுகின்றது.
பின்னர் அவர் வீட்டில் விருந்து நடக்கும் போது இவரும் நொந்து
கொண்டு அன்பளிப்பு என்ற பெயரில் இதே மொய்யை திருப்பிச் செலுத்தி விட்டு வருகின்றார்.
அளிக்கப்படும் பொருள் பணமாகவும் இருக்கலாம், பண்டமாகவும்
இருக்கலாம். இதற்குப் பெயர் தான் உறவை அரவணைத்தல் என்பதா?
பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர்
அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி எண்: 5991
நபி (ஸல்) அவர்கள் இதற்குப்
பெயர் உறவை ஆதரிப்பது, அரவணைப்பது கிடையாது என்று சொல்லி
விட்டார்கள்.
அதாவது எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சொந்தங்களுக்கு
உதவி புரிவது தான் உறவைப் பேணுதல் என்பதை நபி (ஸல்) அவர்கள் இங்கு உணர்த்தி விடுகின்றார்கள்.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர்.
"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும்
(செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக.
அல்குர்ஆன் 2:215
அல்லாஹ்வின் இந்த வசனத்தில் குடும்பத் தலைவன் யாருக்காகச் செலவு
செய்ய வேண்டுமோ அந்தப் பட்டியலில் பெற்றோருக்கு அடுத்து இடம் பெறுபவர்கள் உறவினர்கள்
தாம்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா நகர அன்சாரிகளிலேயே நிறைய பேரீச்சந்
தோட்டங்களை சொத்துகளாகப் பெற்றிருந்தார். மஸ்ஜிதுந் நபவிக்கு எதிரே அமைந்திருந்த “பைருஹா” தோட்டம் தான் அவரது சொத்துக்களில் அவருக்கு மிகவும் விருப்பமானதாக
இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான)
தண்ணீரைப் பருகுவார்கள். "நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்னும் (3:92) இறைவசனம் அருளப்பட்ட போது
அபூதல்ஹா (ரலி) எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து (இறை வழியில்) செலவு செய்யாதவரை
நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்று அல்லாஹ்
கூறுகிறான். என் சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா' தான். அதை அல்லாஹ்வுக்காக நான்
தருமம் செய்து விடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும், (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன்.
ஆகவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகின்ற விஷயத்தில் அதைப் பயன்படுத்திக்
கொள்ளுங்கள்''
என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “ஆஹா! அது லாபம் தரும்
செல்வமாயிற்றே! நீ கூறியதை நான் கேட்டேன். அதை (உன்) நெருங்கிய உறவினர்களுக்கிடையே
நீ பங்கிட்டு விடுவதையே நான் உசிதமானதாகக் கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அவ்வாறே நான் செய்கிறேன், அல்லாஹ்வின்
தூதரே!'' என்று கூறி விட்டு, தம் நெருங்கிய
உறவினர்களுக்கும் தம் தந்தையின் உடன்பிறந்தார் மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டு விட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி எண்:2769
அல்லாஹ்வும், அவனது தூதரும்
குறிப்பிடுகின்ற அடிப்படையில் இன்று இஸ்லாமிய சமுதாயம் செலவு செய்கின்றதா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும்.
கல்யாணப் பந்தலிலும், பந்தியிலும்
கொட்டித் தீர்க்கும் காசு பணத்தை சொந்த பந்தங்களுக்குக் கொட்டிக் கொடுக்காவிட்டாலும், அதில் சிறிதளவு கொடுப்பதற்குக் கூட மனமில்லாமல் இருக்கின்றது.
அதிலும் குறிப்பாக நெருங்கிய உறவினர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுக்கு சல்லிக் காசு கூட இல்லாமல் கையறு நிலையில்
யாரிடமும் கேயேந்தாமல் கண்ணீர் வடிக்கும் போது கூட உறவினர்கள் கண்டு கொள்வதில்லை. கல்யாணத்தில்
செய்கின்ற நூறு சதவிகித ஆடம்பரச் செலவுகளில் ஒரு சதவிகிதம் கூட உறவினருக்குச் செய்வது
கிடையாது. அந்த உறவினர் மரணத்தைத் தழுவினாலும் சரி தான். அவரை அறவே ஏறெடுத்துக் கூட
பார்ப்பதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள்
அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்
(நூல்: புகாரி 2067)
என்று சொன்ன பிறகும் கூட இந்தச் சமுதாயம் இதற்கு மதிப்பளிக்கவில்லை.
பொதுவாக, உலகப் பயனைச் சொல்லி எந்த ஒரு
வணக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்ட மாட்டார்கள். ஆனால் உறவினர்களை ஆதரிக்கக்
கூடிய இந்த வணக்கத்தில் உலகப் பயனைச் சேர்த்துக். குறிப்பிட்டு ஆர்வமூட்டுகின்றார்கள்.
இந்த அரும் பயனைத் தான் இந்தச் சமுதாயம் அறவே கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.
இப்போது பள்ளிக்கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்படும் காலமாகும். பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம், சீருடைகள், பள்ளிப் பாடப் புத்தகங்கள் என்று
செலவு அள்ளிக் கொண்டு போகும் காலம் இது!
பள்ளிப்படிப்பு முடித்த மாணவர்கள் தகுதியிருந்தும் வசதியில்லாத
காரணத்தால் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில்
சேர வழியின்றி தவிக்கின்றார்கள். இதைக் கருத்தில் கொண்டே எல்லா அரசியல் கட்சிகளும்
மாணவர்களின் கல்விக் கடனை ரத்துச் செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளன. எனவே, ஓரளவு வசதியான உறவினர்கள் தங்கள் குடும்பத்திலுள்ள வசதியற்ற
மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உதவ முன்வர வேண்டும்.
கூடவே இப்போது ரமளானும் சேர்ந்தே வருகின்றது. ரமளான் செலவு, பெருநாள் உடைகள் என்று ஒரு பெரிய செலவு வேறு காத்திருக்கின்றது.
இதையெல்லாம் கவனித்து சமுதாயம் தங்கள் உறவினருக்காக உதவ முன் வர வேண்டும்.
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு
அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப்
பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக்
கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து
அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள்
எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:273
என்று அல்லாஹ் சொல்வது போன்று மக்களில் தன்மானத்துடன் கூடிய
உறவினர்கள் இருப்பார்கள். உறவினர்களுக்கு உதவ மிகவும் உற்ற நேரம், பிள்ளைகளை கல்விக்கூடத்தில் சேர்க்கின்ற கால கட்டமாகும். அப்படிப்பட்ட
உதவிக்கு உரியவர்களை, தேவையுடையவர்களை மற்றவர்கள்
அடையாளம் காண்பதற்கு முன்பாக சக உறவினர்கள் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
சுயமரியாதையுடன் உள்ள அத்தகைய சொந்தங்களுக்கு உதவ வேண்டும். இது திருக்குர்ஆன் மக்களிடம்
எதிர்பார்க்கின்ற உறவு இணைப்பு, ஆதரவு மற்றும் அரவணைப்பாகும்.
இந்தப் பண்பு மக்களிடம் வராத வரை, என்னதான் ரமளானில் மலையளவு வணக்கங்களை அள்ளிக் குவித்தாலும்
குர்ஆன் அவர்களிடமிருந்து வெகுதூரத்தில் விலகி நிற்கின்றது என்பது தான் அதன் பொருளாகும்.
அல்குர்ஆனின் உறவினர் ஆதரிப்பு, அரவணைப்பு போதனையை அழைப்பாளர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இதில் ஒரு மாற்றத்தை மக்கள் காண வேண்டும். இதற்கு ஏகத்துவவாதிகள் முழு முன் மாதிரிகளாகத்
திகழ வேண்டும்.
அந்த மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும்
இந்த ரமளான் நமக்கு அளிக்கட்டுமாக! குர்ஆன் கூறுகின்ற உறவு அரவணைப்பு சம்பந்தமான வசனங்கள்
வார்த்தையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் ஆக்கம் பெறட்டுமாக!
EGATHUVAM JUN 2016