May 11, 2017

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்! - புகாரியின் பெயரால் பொய்யும் புரட்டும்

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்! - புகாரியின் பெயரால் பொய்யும் புரட்டும்

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்:

உண்ணும் போதும், பருகும் போதும் வயிற்றை நிரப்புவதில் கவனமாக இருங்கள். திண்ணமாக அதிகமாகச் சாப்பிடுவது உடலுக்குக் கேடு விளைவிக்கும். தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். எனவே இவ்விரண்டிலும் (உண்ணுவதிலும் பருவதிலும்) கவனமாயிருப்பது உடலுக்கு நலன் தரும். செலவைக் குறைக்கும்.

நூல்: புகாரி

நோயற்ற வாழ்விற்கு... என்ற தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என்ற அறிவிப்பு, அதன் அடியில் புகாரி என நூல் குறிப்பு இவையனைத்தும் படிப்பவரை ஓர் உண்மையான ஹதீசுக்கு அழைத்துச் செல்கின்ற பிரமிப்பையும், பிரதிபலிப்பையும் பிம்பத்தையும் அளிக்கின்றது. ஆனால் உண்மையில் இந்தச் செய்தி, "ஒய்யாரக் கொண்டையாம்; அதன் உள்ளே இருப்பது ஈறும் பேனுமாம்' என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது.

இப்படி ஒரு பளபளப்பான பொய் ஹதீஸ், ஷரீஅத்துல் இஸ்லாமியா என்ற பத்திரிகையில் பிப்ரவரி 2013 மாத இதழில் களையுடனும் கம்பீரத்துடனும் வெளியாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என்று போடுகின்றோமே, இது நபி (ஸல்) அவர்கள் சொன்னது தானா? என்று ஒரு சிறிய, குறைந்தபட்ச கவனத்தைக் கூட எடுக்காமல் இந்தப் பொய்யான ஹதீஸை வெளியிட்டிருக்கின்றார்கள்.

"என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்''

என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையெல்லாம் இவர்கள் கால் காசுக்குக் கூட மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது. கடுகளவு கூட நரகத்தைப் பற்றிய பயமில்லை என்பதை இவர்களின் நடவடிக்கை விளக்குகின்றது.

இப்படி ஒரு ஹதீஸை இவர்கள் புகாரியிலிருந்து எடுத்துக் காட்டுவார்களா? என்று ஷரீஅத் என்ற பெயரில் அல்லாஹ்வின் தூதரின் பெயரால் பொய் சொல்லும் ஷரீஅத்துல் இஸ்லாமியா பத்திரிகைக்கு சவால் விடுக்கிறோம். இவர்களால் இப்படியொரு ஹதீஸை புகாரியிலிருந்து எடுத்துக்காட்டவே முடியாது.

வேறு எந்தக் காரணத்தைச் சொல்லியும் இவர்களால் இதைச் சமாளிக்கவே முடியாது. அந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் மீது இது பகிரங்கப் பொய்யாகும்.

பொய்யிலும் ஓர் இருட்டடிப்பு

சத்தியத்தைச் சொல்லாமல் இருட்டடிப்பு செய்கின்ற இவர்கள் இந்தப் பொய்யான ஹதீஸைக் கூட முழுமையாகச் சொல்லாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். இவர்களின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதற்காக இந்தப் பொய்யான ஹதீஸை வாசகர்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

உண்ணும் போதும், பருகும் போதும் வயிற்றை நிரப்புவதில் கவனமாக இருங்கள். திண்ணமாக அதிகமாகச் சாப்பிடுவது உடலுக்குக் கேடு விளைவிக்கும். தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். எனவே இவ்விரண்டிலும் (உண்ணுவதிலும் பருவதிலும்) கவனமாயிருப்பது உடலுக்கு நலன் தரும். செலவைக் குறைக்கும். உடல் கொழுத்த மார்க்க அறிஞர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்.

இது தான் இவர்கள் வெளியிட்டுள்ள பொய்யான ஹதீஸின் முழுமையான தோற்றமாகும். இந்த இறுதிப் பகுதியையும் சேர்த்து வெளியிட்டாலாவது இவர்களது திறந்த மனப்பான்மையைப் பாராட்டலாம். ஆனால் இதை அவர்கள் வெளியிட மாட்டார்கள். காரணம் அது இவர்களுக்கு பாதகத்தைத் தரக்கூடிய செய்தியாகும். சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள் பெரும்பாலும் உடல் கனத்தும் சதை வைத்தும் தான் காணப்படுகின்றார்கள். எனவே தான் இந்தப் பகுதியை மறைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் இது நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியா? என்றால் நிச்சயமாக இல்லை. இந்தச் செய்தி உமர் (ரலி) அவர்கள் கூறியதாக சில நூற்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதுவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தி தான்.

இஸ்பாஹுல் அஃமால், அல்ஜுஃவு போன்ற நூற்களில் இந்தச் செய்தி பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் கூபாவைச் சேர்ந்த அல்மஃலா பின் ஹிலால் அல் ஜுஃபி தஹாவீ என்வர் இடம்பெறுகின்றார்.

இவர் பொய்யர் என்று இப்னுல் மதீனி குறிப்பிடுவதாக அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ் துறையில் இவர் விடப்பட்டவர், இவருடைய ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ் ஆகும் என அஹ்மத் பின் ஹன்பல் குறிப்பிட்டதாக அல்ஜரஹ் வத்தஃதீல் தெரிவிக்கின்றது.

உமர் (ரலி) அவர்கள் சொன்னதாக வருகின்ற செய்தியே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றால், இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால் தைரியமாக இதை நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என்று அந்த மாதப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கின்றார்கள்.

முழுமையான மூன்று பொய்கள்

இதில் இவர்கள் மூன்று பொய்களைச் சொல்லியிருக்கின்றார்கள்.

1. நபி (ஸல்) அவர்கள் சொல்லாததை, அதாவது உமர் (ரலி) அவர்கள் சொன்னதாக வந்த செய்தியை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு பொய்.

2. உமர் (ரலி) அவர்களும் சொல்லாத, அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை வெளியிட்டிருப்பது இரண்டாவது பொய்.

3. இந்தப் பொய்யான செய்தியை இமாம் புகாரி பதிவு செய்திருப்பதாகக் கூறியது மூன்றாவது பொய்.

இப்படி மூன்று பொய்களை, மறுமை விசாரணை பற்றிய பயம் இல்லாமல் தங்கள் மாத இதழ்களில் அரங்கேற்றி வருகிறார்கள்.

இங்கு இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தச் செய்தியின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ள, "உடல் கொழுத்த மார்க்க அறிஞர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்' என்ற செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தப்ஸீர் தப்ரீயில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது முர்ஸல் என்ற தரத்தில் அமைந்த பலவீனமான செய்தியாகும். அத்துடன் இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமான அறிவிப்பாளர்களும் இடம் பெற்றிருக்கின்றார்கள். அதை இவர்கள் வெளியிடவில்லை என்பதால் அதுகுறித்து இங்கு விரிவாக வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று விட்டு விட்டோம்.


இனியாவாது இந்த மாத இதழ் ஆசிரியர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைக் கவனத்துடன் வெளியிடுவார் என்று நம்புகிறோம்.

EGATHUVAM JUL 2013