May 11, 2017

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்! - உயிர் காக்கும் உன்னத துஆ?

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்! - உயிர் காக்கும் உன்னத துஆ?

நபி மீது பொய்; நரகமே தங்குமிடம் என்ற ஏகத்துவத்தின் இந்தப் பகுதி மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் ஆற்றும் உரைகளிலும், அவர்கள் எழுதுகின்ற ஏடுகளிலும் இடம்பெறுகின்ற பொய்யான ஹதீஸ்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

அந்த அடிப்படையில் இஸ்லாமிய இனிய தென்றல் என்ற இதழில் பிப்ரவரி 2013 இதழில் இடம்பெற்ற ஒரு பொய்யான ஹதீஸைப் பார்ப்போம்.

எம்.எஸ்.பி. காஸிமி என்பவர் எழுதியுள்ள ஜுமுஆ சொற்பொழிவு என்ற கட்டுரையில், ஹயாத்துஸ் ஸஹாபா (நபித்தோழர்களின் வாழ்க்கை) என்ற நூலிலிருந்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஹயாத்துஸ் ஸஹாபா என்ற நூலை எழுதியவர் இந்தியாவைச் சேர்ந்த தப்லீக் இயக்கவாதியான முஹம்மது யூசுப் காந்தஹ்லவீ ஆவார்.

இஸ்லாமிய வரலாற்றில் பொய்யான, பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு தங்களது நூல்களை நிரப்பியவர் பலர் உண்டு. அவர்களில் தலைமை இடத்தைப் பிடிப்பவர் தமிழக ஆலிம்களால் கல்விக் கடல் என்று போற்றப்படுகின்ற கஸ்ஸாலி ஆவார். அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவர்கள் அமல்களின் சிறப்புகள் எழுதிய ஜக்கரியா மவ்லானா, அதே போன்று முஹம்மது யூசுப் காந்தஹ்லவீ ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அந்த அளவுக்கு வண்டி வண்டியாகப் பொய்யான, பலவீனமான ஹதீஸ்கள் இவர்களின் நூற்களில் மண்டிக் கிடக்கின்றன; மலிந்து காணப்படுகின்றன.

அந்த நூலிலிருந்து தான் இந்த எம்.எஸ்.பி. காஸிமி என்பவர் தனது ஜும்ஆ உரையில் ஒன்று விடாமல் ஒப்புவித்திருக்கின்றார்.

இத்தகையோருக்கு, "என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இங்கு சமர்ப்பிக்கின்றோம்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 6

இந்த ஹதீஸையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தக் கட்டுரையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போது இவர்கள் வெளியிட்டுள்ள அந்தப் பொய்யான ஹதீஸ்களைப் பார்ப்போம்.

ஹள்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். நபிகளாரது காலத்தில் ஒரு மனிதர் வியாபார நோக்கத்துடன் மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்குச் செல்வார். ஷாம் தேசத்திலிருந்து மதீனாவிற்குத் திரும்புவார். இவர் வியாபாரக் கூட்டத்தாரோடு சேர்ந்து செல்லாமல் தனியாகச் செல்வார். ஒரு சமயம் ஷாம் தேசத்திலிருந்து மதீனா நகர் வந்து கொண்டிருந்தார். பாதையில் ஒரு திருடன் குதிரையில் ஏறியபடி வந்தான். அவன் மிக உரத்த குரலில், நில் என சப்தமிட்டான். வியாபாரி நின்று விட்டார். வியாபாரி திருடனிடம், "எனது பொருளை எடுத்துக் கொள். எனது பிரயாணத்தைத் தொடர விடு'' என்று கூறினார். "இந்தப் பொருள் என்னுடையதே. நான் உனது உயிரை எடுப்பதற்கு நாடுகிறேன்'' என்று திருடன் சொன்னான். "என் உயிரை எடுப்பதால் உனக்கு என்ன பலன். எனவே எனது பொருளை எடுத்துக் கொண்டு விட்டு விடு'' என்று வியாபாரி சொன்னார்.பின்பும் அந்தத் திருடன் அதையே கூறினான். அந்த வியாபரி திருடனிடம், "ஒளு செய்து தொழ, எனது ரப்பிடம் துஆச் செய்ய எனக்கு அவகாசம் கொடு'' என்றார். நீ விரும்பியதைச் செய்து கொள் என்று திருடன் கூறினான். வியாபாரி ஒளு செய்து நான்கு ரக்அத் தொழுதார். ரப்பிடம் துஆச் செய்தார்.யா வதூத், யா வதூத், யாதல் அர்ஷில் மஜீத் யா முப்திவு யா முயீத் யா பஃஆலுல்லிமா யுரீது அஸ்அலுக பிநூரி வஜ்ஹிகல்லதீ மலஅ அர்கான அர்ஷிக வ அஸ்அலுக பிகுத்ரதிகல்லதீ கதர்த பிஹா அலாகல்கிக வபிரஹ்மதிகல்லதீ வஸிஅத் குல்ல ஷையின் லாயிலாஹ இல்லா அன்த யா முகீது அகித்னீ இந்த துஆவை மூன்று தடவை செய்தார். துஆ முடிந்ததும் திடீரென ஒரு மனிதர் ஒளிமிக்க குதிரையில் ஏறியபடி, பச்சை நிற உடையணிந்தவராக வந்தார். அவரது கையில் பிரகாசிக்கும் கத்தி இருந்தது. திருடன் அந்தப் புதிய மனிதரைப் பார்த்ததும் வியாபாரியை விட்டு விட்டு அவரிடம் சென்றான். வந்த மனிதர் திருடனைத் தாக்கி, கத்தியால் குதிரையை வீழ்த்தி திருடனைக் குதிரையிலிருந்து விழச் செய்து விட்டார். பின்பு வியாபாரியிடம் வந்து, "எழுந்து சென்று திருடனை நீங்களே கொல்லுங்கள்'' என்றார். "நீங்கள் யார்?'' என வியாபாரி கேட்டார். "நான் எப்போதும் யாரையும் கொன்றது இல்லை. உயிரைக் கொன்ற பின் என் மனம் சந்தோஷப்படவும் செய்யாது'' என்று அவர் சொன்னர். பின்பு திருடனை அவர் கொன்று விட்டார். வியாபாரியிடம், "நான் மூன்றாவது வானத்திலுள்ள ஒரு வானவர். நீங்கள் முதல் தடவை துஆச் செய்த போது வானத்துடைய கதவுகளில் இருந்து அசைவை (சப்தத்தை) கேட்டோம். நீங்கள் இரண்டாவது தடவை துஆச் செய்த போது வானக் கதவுகள் திறந்து கொண்டன. மூன்றாவது தடவை துஆச் செய்த போது ஹளரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் எங்களிடம் வந்து, "இந்தச் சோதனையில் சிக்குண்ட மனிதனுக்கு உதவி புரிபவர் யார்?'' என்று கேட்டார். நான் அல்லாஹ்விடம் என்னை அந்தத் திருடனைக் கொலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். மூன்றாவது வானத்திலிருந்து வந்த அந்த வானவர் வியாபாரியிடம், "அல்லாஹ்வுடைய அடியாரே, அறிந்து கொள்ளுங்கள். நீர் ஓதிய இந்த துஆவை எம்மனிதர் கஷ்டம், சோதனையில் ஓதுவாரோ அவரது கஷ்டத்தை, சிரமத்தை, சோதனையை அல்லாஹ் போக்கி விடுவான்'' என்று சொன்னார். அதன் பின் அந்த வியாபாரி தனது பொருட்களுடன் மிக நிம்மதியுடன் மதீனா வந்தடைந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமூகத்திற்கு வந்து இந்த சம்பவத்தைச் சொன்னார்.

நபிகள் பெருமகனார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களை அல்லாஹ் உனக்குக் காட்டித் தந்துள்ளான். அந்த அழகிய திருநாமங்களைக் கொண்டு துஆச் செய்தால் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். அந்த அழகிய பெயர்களைக் கூறி அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அது தரப்படும்.

(ஹயாத்துஸ் ஸஹாபா, பாகம் 3, பக்கம் 679)

இந்த ஹதீஸை இப்னு அபித்துன்யா என்பவர் முஜாபித்தஃவா (பிரார்த்தனைக்குப் பதிலளிக்கப்பட்டவர்கள்) என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார். ஹதீஸ் கலை ஆய்வாளர் நாஸிருத்தீன் அல்பானி இந்த ஹதீஸை தமது, ஸில்ஸிலத்துல் அஹாதீசுல் லயீஃபாத் (பலவீனமான ஹதீஸ்களின் சங்கிலி) என்ற நூலில் அடையாளம் காட்டுகின்றார். அல்பானி கூறுவதைப் பாருங்கள்:

இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பது நன்கு தெளிவாக, பார்க்கும் போதே புலப்படுகின்றது. ஹதீஸ் கலையில் போய் ஆய்வு செய்ய வேண்டிய அளவுக்கு இல்லாமல் வெளிப்படையாகத் தெரிகின்றது. இது இருள் கவ்விய இருட்டுத் தொடராகும்.

இந்தத் தொடரில் எனக்குத் தெரிந்தவர்கள் என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால் ஹஸன் அல்பஷரீயைக் குறிப்பிடலாம். அவரும் தனக்கு முந்தைய அறிவிப்பாளரை இருட்டடிப்புச் செய்பவர். தனக்கு முந்தைய அறிவிப்பாளர் பெயரைச் சொல்லி, இவர் எனக்கு அறிவித்தார் என்று சொல்லி அறிவித்தால் மட்டுமே இவரது செய்தியை ஏற்றுக் கொள்ள முடியும். இவரிடமிருந்து, அவரிடமிருந்து என்று வெறுமனே அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அடிப்படையில் பலவீனமான ஹதீஸாகும்.

இந்தத் தொடரில் எனக்குத் தெரிந்த இன்னொருவரைச் சொல்ல வேண்டுமெனில் மூஸா பின் விர்தான் ஆவார். இவரது தரம் விவாதத்திற்குரியதாகும். பரவாயில்லை என்று இவரைப் பற்றி அபூஹாத்தம் குறிப்பிடுகின்றார். இந்த ஹதீஸின் ஆபத்தும் அபாயமும் ஹஸன் அல்பஷரீ என்பவரிடமிருந்து தான். அல்லது கலபீ என்பவரிடமிருந்து என்று சொல்லலாம்.

கலபீ என்பவர் மூஸா பின் விர்தானுக்கு முந்தைய அறிவிப்பாளர். இவர் யாரென்று தெரியாதவர் ஆவார். குர்ஆன் விரிவுரை செய்யக்கூடிய கலபீ என்ற ஒருவர் உண்டு. அவரும் நம்பத்தகுந்தவர் அல்லர். அதே சமயம் இவர் அந்த கலபீ அல்ல என்ற அளவுக்கு இவரைப் பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸில் இடம்பெறும் அபூமுஅல்லக் என்பார் நபித்தோழர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது வினோதத்திலும் வினோதமாகும். அவர் நபித்தோழர் என்பதற்கு இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸே சான்றாக அமைவது கேலிக்கூத்தாகும்.

ஹாபிழ் தஹபீயும் தஜ்ரீத் என்ற நூலில் இவர் நம்பத்தகுந்தவர் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு அல்பானி இந்த ஹதீஸின் தரத்தை அம்பலப்படுத்துகின்றார்.

கலபீ என்பவரை இப்னுல் கத்தான், அப்துர்ரஹ்மான் ஆகியோர் மற்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் விட்டுவிட்டார்கள் எனவும், சுலைமான் அத்தைமீ, ஜாயிதா, இப்னு மயீன் ஆகியோர் இவரைப் பொய்யர் என்று குறிப்பிடுகின்றனர் எனவும் அல்முக்னீ ஃபில்லுஅஃபா என்ற நூலில் இமாம் தஹபீ அவர்கள் குறிப்பிடுவதாக அல்பானி தெரிவிக்கின்றார்.

அல்பானி அவர்கள் குறிப்பிடுவது போன்ற இந்த விமர்சனம் அல்இலல் இப்னு அபீஹாத்தமிலும் பதிவாகியுள்ளது.


எனவே இந்தச் செய்தி பொய்யானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

EGATHUVAM JUL 2013