கள்ள வேடம் போடுபவர் யார்? கபட நாடகம் ஆடுபவர் யார்?
உலகில் எங்கு குண்டு வெடித்தாலும், பயங்கரவாதச் செயல் நடந்தாலும் அதன் பழியும் பாவமும் முஸ்லிம்கள்
தலையில் தான் விழுகின்றது.
உளவுத்துறை ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே ஊடகங்கள் புலனாய்வு
என்ற பெயரில் புதுப்புது ஊகங்களை வெளியிட்டு, தங்களுக்குத்
தோன்றுகின்ற தனிநபர்களை, இயக்கங்களை அந்த பயங்கரவாதச்
சம்பவத்துடன் முடிச்சுப் போட்டு முடித்து விடுகின்றார்கள்.
முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் போக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.
விமானத்தில், விமான நிலையத்தில், ரயிலில், ரயில் நிலையத்தில், பேருந்தில், பேருந்து நிலையத்தில், வணிகத் தலங்களில், மக்கள் கூடுகின்ற
பொதுவிடங்களில் குண்டு வெடித்தவுடன் பயங்கரவாதப் பார்வை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின்
மீதும் பாய்கின்றது; பதிகின்றது. ஒட்டுமொத்தத்தில்
முஸ்லிம் சமுதாயமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றது.
இதைக் கவனத்திலும், கருத்திலும்
கொண்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை, தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை
தமிழகமெங்கும் நடத்தியது. ஊடகங்கள் இதை உற்று நோக்கின. அரசியல்வாதிகள் இதை உன்னிப்பாகக்
கவனித்தார்கள். அரசியல் விமர்சகர்கள் ஆய்வுப் பார்வையைச் செலுத்தினார்கள். பத்திரிகைகள்
பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன.
பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை வசிக்கும் வீடுகளில், வந்து செல்கின்ற வீதிகளில், சந்து
பொந்துகளில்,
முச்சந்திகளில், அரசு மற்றும்
தனியார் அலுவலகங்கள், காவல்நிலையங்கள், பஸ், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட
எல்லாப் பகுதிகளிலும் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், இஸ்லாம்
தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் பிரசுரங்கள்
வினியோகிக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள் என பாரபட்சமில்லாமல்
இதைப் படித்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். இப்போது எடுத்திருக்கும் இந்த முயற்சிகளை
நீங்கள் எப்போதோ எடுத்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தையும் பதிவு செய்தனர்.
இன்றைக்குத் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விமர்சனங்களில், விவாதங்களில், தீவிரவாதத்தை
முஸ்லிம்களே எதிர்க்கிறார்கள் என்ற கருத்து திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லப்படுகின்றது.
இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கோளாகக் காட்டப்படுகின்றது.
மொத்தத்தில் மக்களைக் கவர்ந்த ஒரு மகத்தான முயற்சி, மார்க்கத்தின் மீது வீசப்பட்ட களங்கத்தை, கறையைக் கழுவுவதற்கான கண்ணியப் பணி, இப்படி ஒட்டுமொத்த தமிழகமே வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருக்கும்
போது தனக்குப் பித்து ஏறி, சித்தம் கலங்கிப் போன ஜாக் இயக்கம்
மட்டும் பொறாமையை வெளிப்படுத்தியிருக்கின்றது. தனது மாதப் பத்திரிகையில் அதைக் கொட்டித்
தீர்த்திருக்கின்றது.
கபட நாடகம் என்று தலைப்பிட்டு, தலையங்கம் என்ற பெயரில் கொலையங்கம் தீட்டி தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தை வெறி கொண்டமட்டில் கடித்துக் குதறியிருந்தது. குறிப்பாக பிஜேயைக் குறிவைத்துத்
தாக்கியிருந்தது. கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளித்திருந்தது.
ஒரு பேச்சுக்கு, ஒரு வாதத்திற்கு
தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி, ஜாக் வீசியிருக்கின்ற குற்றச்சாட்டுக்கள்
உண்மை என்று வைத்துக் கொள்வோம். இப்போது செய்த பணி இஸ்லாத்தின் மீது திட்டமிட்டுச்
சொல்லப்படுகின்ற களங்கத்தை, கறைகளை, துடைத்துத் தூர எறிகின்ற பணியாகும். இந்தப் பணியை இஸ்லாமிய சமுதாயத்தினரும், இதர மக்களும் வாழ்த்தி வரவேற்கின்ற இந்த வேளையில் இவர்கள் வாழ்த்த
வேண்டாம். குறைந்தபட்சம் வம்புக்கு வராமல், வசைபாடாமல்
இருக்கலாம்.
இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மீது கொட்டித் தீர்ப்பதற்கு எத்தனையோ
விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொட்டித் தீர்த்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு
இஸ்லாத்தின் மீது உள்ள களங்கம் துடைக்கின்ற இந்தப் பணியைக் குறை சொல்லக் கிளம்பியிருக்கின்றார்கள்
என்றால் இவர்களின் நோக்கம் என்ன?
ஏற்கனவே இவர்கள் பிறை விஷயத்தில் தூதரின் பிறையைப் பின்பற்றாமல்
யூதப் பிறையைப் பின்பற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை ஏகத்துவத்தில் வெளியிட்டிருந்தோம்.
பிறையில் மட்டுமல்ல, பிற விஷயங்களிலும் இப்போது யூதத்தைத்
தப்பாது பின்பற்றுகின்றார்கள் என்பது தான் இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
ஓர் அழைப்புப் பணியைக் குறை சொல்கின்றார்கள், குறை காணுகின்றார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம். நம்மைக் குறை கூறுவதற்கு எடுத்துக்காட்டிய வசனங்கள் அத்தனைக்கும்
இவர்களே எடுத்துக்காட்டுக்களாக மாறியிருக்கிறார்கள் என்பது தான் இதன் பொருள்.
வெறும் மக்தப் மதரஸா மட்டும் நடத்திவிட்டு அழைப்புப் பணி என்று
கூறி மாதா மாதம் டெல்லியில் உள்ள சவூதி தூதரகத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு பிழைப்பு
நடத்தும் இவர்கள், தாங்களும் அழைப்புப் பணி செய்யாமல்
அழைப்புப் பணி செய்பவர்களையும் குறை கூறும் வேலையைச் செய்கிறார்கள். இது கபட நாடகம்
இல்லாமல், கள்ள வேடம் இல்லாமல் வேறு என்ன?
தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கபட நாடகம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம்
என்ன? கள்ள வேடம் போட வேண்டிய அவசியம் என்ன?
ஏதாவது ஒரு வகையில் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்புச் சம்பவம் என்று அந்தரங்க வேலையில் இறங்கி விட்டு, அதை மறைப்பதற்காக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தியிருந்தால்
அதைக் கபட நாடகம் என்று சொல்லலாம். ஆனால் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று கம்பீரமாக, தைரியமாகத் தனது பாதையில் பயமில்லாமல் பயணம் செய்கின்றது. எனவே
எதற்காகக் கள்ள வேடம் போட வேண்டும்?
அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு முஸ்லிம்கள் அநியாயமாகத்
தாக்கப்பட்டார்கள். அப்போது, நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்
என்ற எண்ணம் எல்லா முஸ்லிம்களுக்கும் எழுந்தது. பதிலுக்குப் பதில் என்றால் அது சமுதாயத்திற்குப்
பெரும் பாதிப்பாக அமையும் என்பதால் அறவழிப் போராட்டங்கள் மூலம் சமுதாயம் தனது காரியத்தைச்
சாதிக்கலாம் என்று ஜாக் தலைமையிடம் எத்தனையோ தடவை எடுத்து வைத்தோம். வலியுறுத்தினோம்.
சமுதாயத்திற்குக் குரல் கொடுப்பதற்கான சரமாரியான மார்க்க ஆதாரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டன.
ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி, அந்தச் சபையில் இதற்கு எந்தப் பதிலும் தரமாட்டார். ஆனால் பொதுக்கூட்டங்களில்
பேசும் போது ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவற்றைக் கிண்டல் செய்து பேசுவார். அரசியல்
ஆர்ப்பாட்டம் எல்லாம் நமக்குத் தேவையில்லை என்று பேசுவார்.
பாதிக்கப்பட்ட சமுதாயம் ஆயுதம் தூக்கிவிடாமல் அறவழிப் போராட்டங்கள்
மூலம் காரியம் சாதிக்கலாம் என்று பிஜே எடுத்து வைத்த வாதங்களைக் கேலி செய்ததன் மூலம், தீவிரவாதச் செயல்களுக்கு மறைமுக ஆதரவளித்தவர் ஜாக் தலைவர் கமாலுத்தீன்
மதனி என்பதை யாரும் மறுக்க முடியுமா?
இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் சென்று வழிதவறிவிடக் கூடாது
என்பதற்காகவே தமுமுக என்ற இயக்கம் கண்ட பிஜேவைக் குறை கூற இவர்களுக்கு என்ன அருகதை
உள்ளது?
ஆர்ப்பாட்டம் வேண்டாம், அரசியல் வேண்டாம்
என்று முழங்கியவர்கள் அதில் நிலையாக, உறுதியாக நிற்கவும்
நிலைக்கவும் வேண்டுமல்லவா?
தவ்ஹீத் ஜமாஅத் - தமுமுக இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல்
ஏற்பட்டது எதனால்? சொத்துத் தகராறா? பதவித் தகராறா? அறவே இல்லை.
தமுமுக தலைவர்களுக்கு அரசியல் பதவிகளில் ஆசை ஏற்பட்டது. அதற்குக் குறுக்கே நிற்பது
பிஜேயும் அவர் கொண்ட தவ்ஹீதுக் கொள்கையும் தான். அதனால் அவரும் அவரது தவ்ஹீதுக் கொள்கையும்
தமுமுகவின் வளர்ச்சிக்குத் தடைக்கல் என்று எழுதிக் கொடுத்து விட்டு, தவ்ஹீதுவாதிகளை வெளியேற்றினார்கள்.
அரசியல், ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்பது
கமாலுத்தீன் மதனியின் நிலைப்பாடு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? பிஜேவுக்கும் நமக்கும் மத்தியிலுள்ள பிரச்சனையே தமுமுக தான்.
அதற்கு இப்போது ஒரு முடிவு வந்து விட்டது என்று கருதி தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவுக்
கரம் நீட்ட வேண்டாம்; விரோதம் பாராட்டாமல் இருப்போம்
என்ற முடிவுக்குக் கமாலுத்தீன் மதனி வந்திருக்க வேண்டும. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
மாறாக, தமுமுகவுடன் கைகோர்த்து, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு
எதிராகச் செயல்பட்டார்.
தவ்ஹீத் ஜமாஅத் அரசியலில் போட்டியிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில்
உறுதியாக உள்ளது. ஆனால் தமுமுகவோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற பிழைப்பாட்டில்
உள்ளது. அதற்காக மார்க்கத்திலும் வளைந்து கொடுப்பதற்குத் தயாராக உள்ளது. அப்படிப்பட்ட
தமுமுகவுடன் கமாலுத்தீன் கைகுலுக்கிக் கொண்டார். கள்ள வேடம் போட்டது யார்? கபட நாடகம் நடத்தியது யார் என்று இப்போது தெரிகின்றதா?
அத்துடன் மட்டுமல்ல! பேரணி ஊர்வலத்தைக் கிண்டல் செய்தவர் மதுரையில்
இவரே ஒரு பேரணியை நடத்திச் சென்றார்.
மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!
இது என்ன நியாயம்? அப்படியானால் கமாலுத்தீனிடம்
குடிகொண்டிருப்பது என்ன? பிஜே மீது கொண்டிருந்த கசப்புணர்வும்
காழ்ப்புணர்ச்சியும் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும்?
பாளை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக பழ்லுல் இலாஹி என்பவரை அறிவிக்க
வேண்டும் என்று கோரி மேலப்பாளையத்தில் ஜாக் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்தச்
செய்தி 06.04.2006 தினமலரில் வெளியானது. இப்போது சொல்லுங்கள்! கள்ள வேடம் போட்டு, கபட நாடகம் நடத்துவது யார் என்று இப்போது சொல்லுங்கள்.
ஒருபக்கம் குர்ஆன் ஹதீசுக்கு மட்டும் கட்டுப்படுவோம் என்று முழங்குவார்கள்.
மறுபக்கம் அமீர் என்ற தலைமையை ஏற்று அரசியல், சமூக, மார்க்கப் பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த அகில உலக அமீருக்குக்
கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இவர்கள் வெளியிட்ட தன்னிலை விளக்கத்தில் குறிப்பிட்டார்கள்.
சவூதியில் சம்பளத்திற்காக குர்ஆன், ஹதீஸ் என்ற போதனை! தலைமை என்று வருகின்ற போது, மார்க்க விஷயத்திலும் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸைத் தூர எறிந்து விட்டுப் பேசுவது கள்ள வேடம் இல்லையா? கபட நாடகம் இல்லையா?
ஒரு பக்கம் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற போதனை!
மறுபக்கம்,
நபித்தோழர்களின் ஏகோபித்த முடிவை மார்க்கமாக எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று கூறி மார்க்கத்தில் பக்கா குராபிகளை விடவும் கீழ்த்தரமாகச் சென்று, மார்க்கத்தில் மூன்றாவது அடிப்படையை நிறுவினார்கள். கள்ள வேடம்
பூண்டு, கபட நாடகம் ஆடுவது யார் என்று இப்போது தெரிகின்றதா?
"கண்ணகிக்கு சிலை வைத்து, பூம்புகாரைப்
புதுப்பித்தவர் அல்லவா நீங்கள்?' என்று கருணாநிதி, கண்ணகிக்குச் சிலை வடித்ததைப் பாராட்டும் கவிதை வரிகளை அல்ஜன்னத்
இதழின் பக்கங்களில் வெளியிட்டு, குர்ஆன் ஹதீஸ் மீதுள்ள பிடிமானத்தைப்
பக்காவாகப் பிரகடனப்படுத்திய கமாலுத்தீன் போட்டது கபட நாடகத்ததைத் தவிர்த்து வேறென்னவாக
இருக்க முடியும்?
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய அனைத்து
மட்டத்திலும்,
மாநிலம் முதல் கிளை வரையிலுள்ள அனைத்துப் பொறுப்பாளர்களில் யாரிடத்திலேனும்
பொருளாதாரம்,
பாலியல் குற்றச்சாட்டுக்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தனது தூய்மையை நிலைநாட்டி வருகின்றது.
ஆனால் ஜாக்கின் நிலைமை என்ன? பொருளாதாரக்
குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை, அதிலும் தன்பாலினக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக் கூட உயர்
பதவி வழங்கி,
உயரிய இடத்தில் வைத்து அழகு பார்க்கும் வேலையை ஜாக் செய்கின்றது.
இப்போது சொல்லுங்கள்! கள்ள வேடம் போடுவது யார்? கபட நாடகம்
ஆடுவது யார்?
என்று இப்போது சொல்லுங்கள்!
இப்படி அரசியலிலும் ஆன்மீகத்திலும் இரட்டை வேடம் போடும் கபட
வேடதாரிகள்,
தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒற்றை நிகழ்ச்சி நிரலான தீவிரவாத எதிர்ப்புப்
பிரச்சாரத்தைக் கபட நாடகம் என்று எழுதுகின்றார்கள்.
கடந்த காலத்தில் ஜிஹாத் என்ற பெயரில் களமிறங்கி ஒரு சிலர் இன்று
வரை சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், 1994ல் தமுமுக ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அறவழிப் போராட்டத்தில் நம்பிக்கையில்லாமல் வழிதவறிச் சென்றவர்கள்.
இந்திய நாட்டில் ஜிஹாத் கடமையில்லை என்பதையும், அப்பாவிப் பொதுமக்களையும் பெண்கள், குழந்தைகளையும் கொன்று குவிப்பதற்குப் பெயர் ஜிஹாத் அல்ல என்பதையும்
மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நிகழ்ச்சிகளிலும் பிஜே அவர்கள் ஆணித்தரமாக நிரூபித்த பிறகு, அதை ஏற்றுக் கொள்ளாமல் மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச்
செய்தவர்கள் இன்று பிஜே மீது பழிபோடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே வாதத்தை
இன்று ஜாக்,
தனது பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் வாந்தி எடுத்திருக்கின்றது.
ஜாக்கிற்கும் அதன் தலைமைக்கும் ஒரு பகிரங்க சவாலை ஏகத்துவம்
விடுக்கின்றது. நீங்கள் சொல்கின்ற இந்தக் குற்றச்சாட்டில் உண்மையாளர்களாக இருந்தால்
இதை நேருக்கு நேராக பிஜேவின் முன்னால் தக்க ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுங்கள்.
தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு இன்று வரை அடைக்கலம் கொடுப்பது யார்? என்பதை நாமும் அந்த விவாதத்தில் நிரூபிப்போம். இதற்குத் தைரியமிருந்தால்
நேரடி விவாதத்திற்கு வாருங்கள். இல்லையேல் வாய் பொத்தி, வாலைச் சுருட்டிக் கொண்டிருங்கள் என்று இதன் மூலம் எச்சரிக்கையாகத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
EGATHUVAM FEB 2015