May 4, 2017

கொள்கை உறவே குருதி உறவு

கொள்கை உறவே குருதி உறவு

அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தவர்கள் ஒரு தனிமையை உணர்ந்தனர். சில ஊர்களில் கொள்கையை ஏற்ற ஒருவர் மட்டுமே இருப்பார். சில இடங்களில் இருவர்; சில இடங்களில் மூவர் அல்லது நால்வர்; அதிகபட்சமாக பதின்மர். அவ்வளவு தான்.

இப்படி இருந்த இந்தக் கொள்கையாளர்கள் பத்து நூறாக, இருபது இருநூறாக படிப்படியாகப் பல்கிப் பெருகி இன்று இலட்சக்கணக்கில் வளர்ந்து ஒரு தனிப்பெரும் தவ்ஹீது சமுதாயமாக உருவெடுத்துள்ளனர்.

ஏகத்துவக் கொள்கை புகுந்த ஊரெல்லாம் ஒரு கூரை வேயப்பட்ட பள்ளி கண்டு, ஐங்காலத் தொழுகைகள், ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளிலும், திருமணம் போன்ற வாழ்க்கை விவகாரங்களிலும், இறந்தவருக்குச் செய்கின்ற ஜனாஸா இறுதிக் கடமைகள் வரை அனைத்திலும் முழுமையாகக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பின்பற்றுகின்ற ஒரு கொள்கைப் பிடிப்புள்ள ஜமாஅத்தாகச் செயல்பட்டு வருகின்றது.

இப்படி ஒரு கொள்கைப் பிடிப்புள்ள நமது ஜமாஅத்தில் உள்ள பெண் குழந்தைகள், தவ்ஹீதையே கொள்கையாகக் கொண்ட கொள்கைக் குமரிகளாக மலர்ந்து நிற்கின்றனர்.

நாம் ஏன் தவ்ஹீதுக்கு வந்தோம்? தனிப்பள்ளி, தனிப் பதிவேடு ஏன் கண்டோம்? சிறைச்சாலைகளை ஏன் சந்தித்தோம்? நீதிமன்றங்களுக்கு ஏன் போய் அலைந்தோம்? ஏன் ஊர் நீக்கம் செய்யப்பட்டோம்? என்ற கேள்விகளை நமக்கு நாமே தொடுத்தோமானால் கிடைக்கும் விடை, அல்லாஹ் சொல்வது போல் நம்மையும் நமது மனைவி மக்களையும் நரகத்திலிருந்து காப்பதற்காகத் தான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

கொழுந்து விட்டு எரியும் நரகிலிருந்து நமது குலக் கொழுந்துகளை, குழந்தை குட்டிகளை காப்பாற்றுவது தான் நமது கொள்கை, லட்சியம் எனும் போது நம்முடைய இந்தக் கொள்கைக் குமரிகளை சுன்னத் வல் ஜமாஅத் மாப்பிள்ளைக்குக் கொடுக்க முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனைவியர், தர்ஹாவுக்குப் போவேன், முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பேன் என்று சொன்னால் அவளுடன் நாம் சேர்ந்து வாழ முடியுமா? ஒருபோதும் முடியாது. அந்த மனைவி மூலம் பத்துக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவளை நாம் விவாகரத்துச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏன்?



அல்லாஹ் கூறுகின்றான்:

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

இதே அடிப்படை தானே நம்முடைய பெண் மக்களுக்கும் பொருந்தும். இந்தச் செல்ல மகளை கடைந்தெடுத்த முஷ்ரிக்கிடம் கொண்டு போய் எப்படிச் சேர்க்க முடியும்? அவ்வாறு கொண்டு போய்ச் சேர்த்தால், நம்முடைய பெண் மக்களை நாமே நரகத்தில் கொண்டு போடுகின்றோம் என்பது தான் அதன் அர்த்தம்.

ஏகத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட ஒரு பெண் கடலில் கிடக்கும் மீன். அவளை ஓர் இணை வைப்பாளருடன் சேர்த்து வைப்பது கரையில் தூக்கிப் போடுவதைப் போன்று! இத்தகைய கோர நிலையை நம்முடைய சத்தியக் கொள்கையின் பெண் சந்ததிகள் சந்திப்பதை விட்டும் காப்பதற்காக வேண்டி நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத் எனும் தனிப்பெரும் சமுதாயத்திலேயே பெண் பார்ப்போமாக!

இப்போதும் கூட பணக்கார வட்டம் சொந்த ஊரை விட்டு விட்டு ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி சம்பந்தம் பேசுகின்றனர்; சம்பந்தி ஆகின்றனர். பணம், பணத்துடன் முடிச்சுப் போடுவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதே அளவுகோலை நாம் கொள்கைக்காக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? நாம் நமதூரில், நமது விருப்பத்திற்குத் தக்க பெண் தேடுவோம். கிடைக்கவில்லையெனில் அடுத்த ஊர். அதுவும் இல்லையெனில் அடுத்த மாவட்டம், அங்கும் அமையவில்லை என்றால் மாநிலத்தில் ஏதேனும் ஓர் ஊர் என்று கொள்கைக்காக, கொள்கை காக்க பெண் தேடுவோம்.

மாநிலம் தழுவிய ஒரு ஜமாஅத்தில் நமது விருப்பத்திற்குரியவள் கிடைக்கமாட்டாள் என்று யாரும் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம், கனவு, எதிர்பார்ப்பு என்று இருக்கும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அதற்கு ஒரு எல்லையை வைத்து கொள்கையைக் காப்போமாக!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

ஒரு சிலர், எனது தாய்மாமன் மகள், எனது மாமி மகள் என குருதி உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இணை வைக்கின்ற பெண்களை முடிக்கின்றனர். அவர்கள் தவ்ஹீதுக்கு வந்து விடுவார்கள் என்று சாக்குச் சொல்கின்றனர். இவர்களுக்குப் பதில் அல்லாஹ்வின் இந்த வசனம் தான்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்கள் அவ்விருவருக்கும் (அவ்விரு பெண்களும்) துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!''’என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

இரண்டு இறைத்தூதர்களின் மனைவிமார் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனும் போது, இவர்கள் மணமுடிக்கும் மனைவியர் எம்மாத்திரம்? இவர்கள் ஏகத்துவத்திற்கு வருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர் குமர்களை வீட்டில் வைத்துக் கொண்டு கவலையுடனும் கண்களில் கண்ணீருடனும் மாப்பிள்ளைக்காகக் காத்து நிற்கின்றனர். இப்படி ஒரு சூழலில் இந்தக் கொள்கை உறவுகளை விட்டு விட்டு, குருதி உறவை ஒரு கொள்கைவாதி தேர்வு செய்யலாமா? சிந்திப்போமாக!

EGATHUVAM JUN 2012