May 11, 2017

தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமளானிய புரட்சி

தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமளானிய புரட்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கால் பதித்து, கால் நூற்றாண்டு தாண்டவிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். அது, தான் கடந்து வந்த பாதையில் எண்ணிப் பார்க்கும்படி பல தடங்களையும், தடயங்களையும் பதித்து வந்திருக்கின்றது. அந்தத் தடங்களில், தடயங்களில் ஒன்று ரமளானில் ஏற்படுத்திய புரட்சியாகும்.

ஆ தராவீஹ் என்று அழைக்கும் இரவுத் தொழுகை 23 ரக்அத்துகள் என்பதை மாற்றி, நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் 8+3 அல்லது 8+5 என அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் அமலும்படுத்தியது.

ஆ இரவுத் தொழுகையின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்களே என்று வருத்தப்பட்டவர்கள், "எட்டு ரக்அத்தை இப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீட்டி, நிதானமாகத் தொழ முடியுமா?' என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் குர்ஆன் ஓதி 20 ரக்அத்துகளை அரை மணி நேரத்திற்குள்ளாக முடித்து விடும் ஆலிம்களுக்கு மத்தியில் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதி, எட்டு ரக்அத்தை மணிக்கணக்கில் தொழுவிக்கும் நேர்த்தியின் காரணமாக நாளுக்கு நாள் இந்தத் தொழுகைகளில் பங்கேற்போர் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றது.

ஆ லைலத்துல் கத்ர் என்றால் 27 அன்று மட்டும் தான் என்பது மக்களிடம் ஆழப் பதிந்த நம்பிக்கை! இதற்குத் தூபம் போடும் விதமாக ஆலிம்கள் உரையும் ஆற்றுவார்கள். இன்று அந்த நிலை மாறி, மலையேறி, நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் உயிராக்கப்பட்டுள்ளன.

ஆ தவ்ஹீத் ஜமாஅத் வருவதற்கு முன்னால் ரமளான் மாத ஸஹர் நேர நிகழ்ச்சிகளில் ஈ.எம். ஹனீபா, ஷேக் தாவூத் போன்றோரின் பாட்டுக் கச்சேரிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். ஸஹர் நேரம் என்பது உணவு நேரமாக இருந்தாலும் அது பாக்கியம் பொருந்திய நேரமாகும். அந்த நேரத்தில் இந்தப் பாட்டுக் கச்சேரிகள் நமது பாவங்களைப் பெருக்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்கப் பிரச்சாரம் "இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற பெயரில் 1996ல் விஜய் டிவியில் அறிமுகமாகியிருந்தது. இதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் "மானுட வசந்தம்' நிகழ்ச்சி டிவிக்கு வந்தது.

இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற பெயரில் அறிமுகமான இந்த நிகழ்ச்சி தான் பின்னாளில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கமாக ஒளிபரப்பானது. பக்கா தர்ஹா வழிபாட்டுக்காரர்கள் கூட சரியான தவ்ஹீது பாதைக்கு வருவதற்கு இந்நிகழ்ச்சி காரணமானது.

பி.ஜே. அவர்கள் தமுமுகவின் அமைப்பாளராக இருந்த போது, பவளக்காரத் தெருவில் இருந்த ஜான் டரஸ்ட் அலுவலகத்தில் ரமளான் மாத இரவு நேர குர்ஆன் விளக்கவுரை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் வட மரைக்காயர் தெருவில் உள்ள தமுமுக அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இரவுத் தொழுகை முடிந்ததும் திருக்குர்ஆனின் 30வது ஜுஸ்வில் உள்ள அத்தியாயங்களுக்கு மவ்லவி பி.ஜே. விளக்கவுரை வழங்கினார். இந்த விளக்கவுரை மக்களிடத்தில் பலத்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. 1996ல் துவங்கிய அந்த நிகழ்ச்சி இன்று வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அவ்வளவு தான். தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும் அலை அலையாகப் பாய ஆரம்பித்தன. கொள்கை ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத்தை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பவர்களும் ஸஹர் நேர நிகழ்ச்சியில் களமிறங்கினர். எத்தனை பேர் களமிறங்கினாலும் எத்தனை பேர் காட்சியளித்தாலும் மக்களிடம் அதிகமான எதிர்பார்ப்பையும், அமோகமான வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சி தவ்ஹீத் ஜமாஅத்தின் ஸஹர் நேர நிகழ்ச்சி மட்டும் தான்.

இந்த வகையில் தமிழகத்தில் டிவி நிகழ்ச்சிகளில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்ததும் தவ்ஹீத் ஜமாஅத் தான், அல்ஹம்துலில்லாஹ்.

ஆ தவ்ஹீத் ஜமாஅத் தோன்றும் வரை, ஃபித்ரு ஸதகா என்ற பெருநாள் தர்மம், பள்ளிவாசலில் பணி புரிகின்ற இமாம்கள், முஅத்தின்கள், கப்ர் குழி தோண்டுகின்ற பணியாளர்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டு வந்தது. இது அவர்களுக்குப் பெருநாளில் கிடைக்கின்ற வசூல் வேட்டையானது.

ஒட்டுமொத்த ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டிய இந்த தர்மம், ஒட்டுமொத்தமாக நம்மை நோக்கி மடைமாற்றம் செய்யப்படுகின்றதே! இது நியாயம் தானா? என்பதைக் கூடச் சிந்தித்துப் பார்க்காமல் ஆலிம்கள் வாய் பொத்தியிருந்தனர்.

ஃபித்ரு ஸதகா என்றால் என்ன என்பதை மக்களுக்குப் புரிய வைத்து, தமிழகம் முழுவதும் தனது ராணுவ வீரர்களை மிஞ்சுகின்ற போராளிகளைக் கொண்டு ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, அதை ஏழை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் அரும் பணியை தவ்ஹீத் ஜமாஅத் செய்யத் துவங்கியது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சில லட்சங்களில் துவங்கி, இன்று சமுதாயத்தில் உள்ள கடைக்கோடி ஏழைகளுக்கும் போய்ச் சேர்கின்ற அளவில் பல கோடிகளாகப் பெருகி, உணவுப் பண்டமாக, இறைச்சியாக மக்களிடம் சீரான முறையில் வினியோகித்து வருகின்றது.

அத்துடன் நில்லாமல் அதன் வரவு செலவுக் கணக்குகளை தனது உணர்வு வார இதழில் வெளியிட்டு மக்களின் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமானது.

இதர இயக்கங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. காரணம், ஃபித்ரா வரவையும் இதயமில்லாமல் தங்கள் இயக்கப் பணிக்காகப் பயன்படுத்திய இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர்.

ஆ தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹபுகளின் ஆதிக்கம் உள்ள ஊர்களில் அறவே பெண்களுக்குப் பெருநாள் தொழுகை இல்லை. இதற்குக் காரணம், பெண்களையும் கருத்தில் கொண்டு மார்க்கம் ஏற்பாடு செய்த திடல் தொழுகை அவர்களிடம் இல்லை. அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் தனது கிளை விரித்த ஊரில் எல்லாம் திடல் தொழுகையை அறிமுகப்படுத்தி, அந்தத் திடலை நோக்கி ஆண்கள் பெண்கள் அனைவரும் அலைகடலாய் படையெடுத்து வருகின்றனர். அங்கு அவர்கள் அல்லாஹ் தனது திருமறையில் கூறுவது போன்று அவனைப் பெருமைப்படுத்தி மகிழ்கின்றனர்.

(குர்ஆனை வழங்கி) உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் (பெருநாளில்) பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)

அல்குர்ஆன் 2:185

ஆ அடுத்தடுத்த ஊர்களில் வெவ்வேறு நாட்கள் நோன்பு நோற்கப்பட்டன. இங்கொரு பெருநாள், அங்கொரு பெருநாள் என்று தமிழகமெங்கும் இரு பெருநாட்கள் கொண்டாடப்பட்டன. இத்தனை குழப்பத்திற்கும் அடிப்படைக் காரணம் இலங்கைப் பிறை தான். அத்துடன் ஒரு தெளிவில்லாமல், ஒரு தடவை கேரளா பிறை, மறு தடவை கர்நாடகா பிறை என்று ஒரு நிலைபாடு இல்லாமல் தமிழகம் குழப்பத்தில் தத்தளித்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டிலும் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு. ஆனால் அது ஒருபோதும் உலகப் பிறை, கணிப்புப் பிறை போன்றவற்றைச் சரிகண்டதில்லை.

பிறை விஷயத்தில் தமிழக அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட முடியும் என்ற சிந்தனை ஓட்டத்தின் பின்னணியாக இருந்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.

இவை தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமளான் மாத சாதனைகளும் புரட்சியும் ஆகும். ரமளானைத் தாண்டியும் அதன் சாதனைகளும் புரட்சியும் விரிந்து கொண்டு செல்கின்றது. இதற்கெல்லாம் காரணம் அது கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கை தான். அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; நபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற அந்தக் கொள்கை தான்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.

தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 14:24, 25


அல்லாஹ் சொல்வது போன்று இது ஒரு மரமாகும். இன்ஷா அல்லாஹ் இந்த மரத்தின் நிழலில் ஒட்டுமொத்த மக்களும் வரவிருக்கின்றார்கள். அதற்கு இந்த ரமளான் புரட்சி கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

EGATHUVAM AUG 2013