May 11, 2017

பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக் - 1

பல்லிக்குப் பகுத்தறிவு பைத்தியத்தில் ஜாக் - 1

எம். ஷம்சுல்லுஹா

ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மீது ஜாக் இயக்கம் ஒரு பயங்கர குற்றச்சாட்டைச் சுமத்தி வருகின்றது. உண்மையில் ஜாக் தான் ஹதீஸை மட்டுமின்றி குர்ஆனையும் மறுக்கும் கூட்டம் என்பதைப் பல தடவை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து வருகின்றோம்.

ஸஹர் பாங்கு இக்காலத்திற்கு ஒத்து வராது என்று ஹதீஸை மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்று பெருநாள் தொழுகையைத் திடலில் தொழும் நபிவழியையும் மறுக்கின்றார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளுடன் ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழிகேட்டைப் போதிக்கும் இந்தக் கூட்டம் தான் நம்மைப் பார்த்து ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று விமர்சனம் செய்கின்றனர்.

சூனியம் தொடர்பாக புகாரி மற்றும் பல நூல்களில் இடம் பெறுகின்ற ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் 17:47, 25:8 உள்ளிட்ட வசனங்களுக்கு நேர்முரணமாக அமைந்துள்ளதைக் காரணம் காட்டி, அந்த ஹதீஸ்களில் நாம் அறியாத அறிவிப்பாளர் கோளாறு இருக்கின்றது என்று சொல்லி அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சொல்கிறோம்.

இவ்வாறு நாம் சொல்லும் போது அதில் நமக்கு எந்த ஒரு சுயவிருப்பமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தும் நம்மை ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று திட்டமிட்டுக் கூறிவருகின்றனர். அதே சமயம் சூனியம் தொடர்பாக நாம் எழுப்புகின்ற கேள்விகளுக்கு இவர்களால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. சூனியம் போன்று வேறு சில ஹதீஸ்களும் உள்ளன. அந்தப் பட்டியலில் பல்லி தொடர்பான ஹதீசும் ஒன்றாகும்.

அந்த ஹதீஸ் இது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், "அது இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது'' என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி),

நூல்: புகாரி 3359

இந்த ஹதீஸ் தொடர்பாக நாம் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியிருந்தோம். அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

புரட்சி செய்யும் பல்லி

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 3:83)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.  (அல்குர்ஆன் 13:15)

"வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா? இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

(அல்குர்ஆன் 22:18)

உலகில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன என்று இந்த வசனங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டதாக மேற்படி ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வுக்கு எதிராகப் பல்லி போர்க்கொடி தூக்கியது, புரட்சி செய்கின்றது என்று குர்ஆன் வசனத்திற்கு எதிராகப் பேசும் இந்த ஹதீஸின் கருத்து ஏற்கத்தக்கதா?

முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஜோடி செய்த பாவம் மனித குலம் அனைவர் மீதும் இருக்கின்றது; அதைக் கழுவுவதற்காக இயேசு (ஈஸா நபி) சிலுவை ஏந்தினார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை இஸ்லாம் தகர்த்தெறிகின்றது.

"அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:164

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

(அல்குர்ஆன் 53:36, 37, 38, 39)

ஆனால் இந்தப் பல்லி சம்பவம் நமக்குச் சொல்லித் தருவது, கிறித்தவர்களின் நம்பிக்கையான முதல் பாவத்தைத் தான். இப்ராஹீம் நபிக்கு எதிராகத் தீக்குண்டத்தை பல்லி ஊதியது என்றால் சம்பந்தப்பட்ட அந்தப் பல்லியை மட்டும் கொல்ல வேண்டும் என்று சொன்னால் அது நியாயம் எனலாம். ஆனால் இந்த ஹதீஸ் கியாமத் நாள் வரை உள்ள ஒவ்வொரு பல்லியையும் கொல்ல வேண்டும் என்று கூறி, ஒரு பல்லி செய்த பாவத்திற்காக மற்ற பல்லிகளைத் தலைமுறை தலைமுறையாகப் பலியாக்குகின்றது. இது மாபெரும் அநியாயமும் அநீதியுமாகும். அல்லாஹ் இந்த அநியாயத்தை அறவே ஆதரிக்கவில்லை.

இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

அல்குர்ஆன் 40:17

இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 36:54

பல்லி தொடர்பான இந்தக் கேள்விகளை நாம் எழுப்பி சில நாட்கள் அல்ல, பல வாரங்களோ மாதங்களோ அல்ல. வருடங்கள் ஓடிவிட்டன. இதுவரை பதிலளிக்காமல் மவுனமாகி, மரணமாகிக் கிடந்த ஜாக் அண்மையில் ஏப்ரல் 2013 அல்ஜன்னத் இதழில், "நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?' என்ற தலைப்பில் பதிலளித்திருக்கின்றார்கள்.

இந்தப் பதிலுக்காக இத்தனை வருடங்கள் ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போல் தெரிகின்றது. இப்படி யோசித்து சரியான பதிலை எழுதியிருக்கின்றார்களா? என்றால் அதுவும் இல்லை. பல்லியைப் பகுத்தறிவாளியாக்கி விட்டு இவர்கள் பைத்தியமாகியிருக்கின்றார்கள். பல்லி சம்பந்தமான இந்தப் பதில் அவர்களது இதழின் ஏப்ரல், மே, ஜூன் வரை மொத்தம் மூன்று இதழ்களில் தொடர்கின்றது.

இந்தப் பதில்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவது இவர்களுக்குப் பிடித்த பைத்தியத்தை பக்காவாக உறுதி செய்கின்றது. முதல் இதழில் இவர்கள் அளித்த பதிலுக்கு முரணாக அடுத்த இதழில் இவர்களே அந்தர் பல்டி அடித்திருப்பது, அல்லாஹ் சொல்வது போன்று உண்மைக்கு எதிராக மோதுபவர்களின் மண்டைக் கபாலங்கள் கலங்கிப் போய்விடுகின்றன என்பதையே காட்டுகின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

அல்குர்ஆன் 21:18

இவர்களின் ஏப்ரல் இதழில் வெளியான அபத்தத்திற்கு உடனடியாக நாம் பதில் எழுதி மே மாத ஏகத்துவ இதழில் வெளியிடுவதாக இருந்தது.

அண்மைக் காலமாக மத்ஹபு, தரீக்காவாதிகள் தங்கள் பத்திரிகைகளில் வெளியிடுகின்ற, மார்க்கத்திற்கு முரணான விஷயங்களையும், கண்மூடித்தனமாக நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எழுதும் பொய்யான ஹதீஸ்களையும் அடையாளம் காட்டும் பணியில் ஏகத்துவம் இறங்கியிருக்கின்றது. எனவே தான் ஜாக்கின் இந்தப் பைத்தியக்கார வாதங்களுக்குப் பக்கங்களை ஒதுக்க முடியாமல் போனது.

அடுத்த இதழிலும் ஜாக்கின் பால்குடிச் சட்டத்திற்குரிய மறுப்புக் கட்டுரை வெளியானது. அதனால் பல்லியை அடிக்க முடியாமல் போனது. இவ்வாறு நாம் வெளியிடத் தாமதமானது நமக்கு நன்மையாக முடிந்தது. ஏனெனில் இதற்கு இடையில் மே மற்றும் ஜூன் மாத அல்ஜன்னத்தில் ஜாக் தனக்குத் தானே முரண்பட்டது, அந்தர் பல்டி அடித்துக் கொண்டது போன்றவற்றையும் சேர்த்து நம்மால் அடையாளம் காட்ட முடிந்தது.

நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?

நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதியது என்பது தான் ஜாக்கின் நிலைப்பாடு. அதன்படி "நெருப்புக் குண்டத்தை பல்லி ஊதியது உண்மை' என்றோ "நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதும்' என்றோ தான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.

தராவீஹ் 20 ரக்அத்துக்கள் என்ற நிலைபாடு கொண்ட சுன்னத் வல்ஜமாஅத்தினர், அதை விளக்குவதற்காக ஒரு நூலை வெளியிட்டனர். கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய அந்த நூலுக்கு, "தராவீஹ் 8 ரக்அத்துக்களா?' என்று தான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் "தராவீஹ் 20 ரக்அத்துக்களா?' என்று தலைப்பிட்டிருந்தனர். இது அவர்களது கொள்கைத் தடுமாற்றத்தையே காட்டியது.

அதேபோன்று தங்கள் நிலைபாட்டில் உறுதியற்ற ஒரு தன்மையைத் தான் ஜாக்கின் இந்தத் தலைப்பும் காட்டுகின்றது. "நெருப்புக் குண்டத்தைப் பல்லி ஊதுமா?' என்று தலைப்பிலேயே தடுமாறியிருக்கின்றது. இப்போது அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு வருவோம்.

"ஒரு பல்லி எப்படி அவ்வளவு பெரிய நெருப்புக் குண்டத்தை ஊதும்? இது எப்படி முடியும்? எப்படி சாத்தியம்? என்பது தான் இவர்களது பிரதான வாதமாகும்''

அல்ஜன்னத், ஏப்ரல் 2013, பக்கம்: 34

அறிவுக்குப் பொருந்தவில்லை, நடைமுறை சாத்தியமில்லை என்பதெல்லாம் நம்முடைய வாதங்களில் துணை வாதங்களாக இடம்பெறுமே தவிர ஒருபோதும் அவற்றைப் பிரதான வாதமாக வைப்பதில்லை. அதுபோன்றே இந்த விவகாரத்திலும், பல்லி நெருப்புக் குண்டத்தை ஊதியது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை என்பதும் நம்முடைய வாதம் தான். ஆனால் இவர்கள் பிதற்றுவது போன்று பிரதான வாதமல்ல.

பல்லி என்பது அல்லாஹ்வின் படைப்பு! மனித, ஜின் இனங்களைத் தவிர பகுத்தறிவு வழங்கப்படாத அனைத்துப் படைப்புகளும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டே வாழ்கின்றன. பல்லி என்ற பகுத்தறிவற்ற இந்தப் படைப்பு அல்லாஹ்விற்கு எதிராகப் புரட்சி செய்யுமா? போர்க்கொடி தூக்குமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறோம். அந்தக் கேள்விக்கு இந்த ஐந்தறிவுக் கட்டுரையாளர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாம் எழுப்புகின்ற வாதத்தை இந்த ஐந்தறிவுப் பிராணி அறவே பார்க்கவில்லை என்று விளங்குகின்றது.

அந்தப் பல்லியின் "எண்ணம்' நாம் நெருப்பை அதிகரிக்க வேண்டும் என்பது தான். தன்னால் "முடியாது' என்பது அந்தப் பல்லிக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் ஊதியது என்றால் என்ன அர்த்தம்? நம்மால் முடியுமளவிற்கு "முயல்வோம்' என்ற எண்ணம் தான் காரணமாகும். தீமை, கெடுதல், அதுவும் சத்தியத்திற்கெதிராக சூழ்ச்சியே மிகப் பெரிய தவறு தானே! அப்படிச் செய்பவர்களைத் தண்டிப்பது நியாயம் தானே! அதனைத் தான் அந்த ஹதீஸ் சொல்கின்றது. எனவே ஹதீசும் சரி, அதன் கருத்தும் சரி, அனைத்துமே சரியானவை தான். இப்ராஹீம் (அலை) என்ற ஏகத்துவப் போராளிக்கெதிராக கெடுதல் செய்ய "நினைத்த' பல்லியை அல்லாஹ் அடையாளம் காட்டியிருக்கிறான் என்பதை விளங்கிக் கொண்டால் ஹதீஸ்கள் அனத்தையுமே முழு மனதோடு ஏற்றுக் கொள்வோம்.

அல்ஜன்னத், ஏப்ரல் 2013, பக்கம்: 34

ஜாக் என்ன சொல்ல வருகின்றது தெரிகின்றதா? பல்லிக்குச் சிந்திக்கின்ற ஆறாம் அறிவு, அதாவது மனித இனத்திற்கு இருப்பது போன்ற மூளை இருப்பதாகச் சொல்கின்றது. மூளை இருந்தால் தானே எண்ணம், சிந்தனையெல்லாம் ஏற்படும். இதைப் புரிந்து கொள்ள ஆறாம் அறிவைப் பற்றிப் பார்ப்போம்.

ஆறாம் அறிவு

மனித, ஜின் இனங்கள் மட்டுமே ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு உள்ள பிராணிகள். இதர உயிர்ப்பிராணிகளுக்கு இந்த அறிவு இல்லை. இது பச்சிளம் பாலகனுக்கும் தெரிந்த அற்ப விஷயமாகும். இந்த அறிவு ஜாக்கிற்கு இல்லையே வருந்த வேண்டியுள்ளது. பல்லியை இவர்கள் பகுத்தறிவுப் பிராணி பட்டியலில் சேர்த்து விட்டு இவர்கள் பல்லியின் இடத்திற்குப் போய் விட்டது மிகவும் பரிதாபத்திற்குரியது.

இப்போது, பல்லியார் பகுத்தறிவாளர் அல்ல என்பதை அல்குர்ஆனிலிருந்து விளக்குவோம்.

அல்குர்ஆன் கூறும் ஐந்தறிவுப் பிராணிகள்

அல்லாஹ் கூறுகின்ற ஐந்தறிவுப் பிராணிகளைப் பார்ப்போம்.

வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏகஇறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:171)

இவற்றுக்குச் சிந்தனை ஆற்றல் இல்லை என்று கூறுகின்றான்.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.  (அல்குர்ஆன் 7:179)

இந்த வசனத்திலும் சிந்திக்கின்ற உள்ளங்கள் இல்லை என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழிகெட்டவர்கள்.

(அல்குர்ஆன் 25:44)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (ஏகஇறைவனை) மறுப்போர் (இவ்வுலகில்) கால்நடைகள் தின்பது போல் தின்று அனுபவிக்கிறார்கள். நரகமே அவர்களுக்குத் தங்குமிடம்.    (அல்குர்ஆன் 47:12)

ஆகிய வசனங்களும் இதே கருத்தைப் பதிவு செய்கின்றன.

பகுத்தறிகின்ற அறிவு இருந்தால் தான் எண்ணியது, சிந்தித்தது என்றெல்லாம் சொல்ல முடியும். அதனால் தான் மாடு சிந்தனை செய்கின்றது; ஆய்வு செய்கின்றது என்று யாரும் சொல்வதில்லை. அதே சமயம் மாடு பார்க்கின்றது; ஆட்டின் காது கேட்கின்றது என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

இதனால் இந்தப் பிராணிகளுக்கு, இந்த உயிரினங்களுக்குச் சொர்க்கம், நரகம் கிடையாது. நாம் இதைச் சொல்வதால், நம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, ஆடு மாடுகளுக்கும் நரகத்தில் தண்டனை உண்டு என்று ஜாக்கினர் சொன்னாலும் சொல்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM AUG 2013