வேதங்களை நம்புதல்
மனித சமுதாயம் இவ்வுலகில் நேரான வழியில் நடப்பதற்காகவும் மறுமையில் வெற்றி பெறுவதற்காகவும் இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டதே வேதங்களாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 14:4)
திருக்குர்ஆனில் பெயர் கூறப்பட்டுள்ள வேதங்கள்
திருக்குர்ஆனில் நான்கு வேதங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு :
1. ஸபூர் : தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது
(அல்குர்ஆன் 4:163)
2. தவ்ராத் : மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது.
(அல்குர்ஆன் 5:44)
3. இஞ்சில் : ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது.
(அல்குர்ஆன் 5:46)
4. திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது
(அல்குர்ஆன் 6:19)
எல்லா இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான். ஆனால், அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.
மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.