மாற்றப்பட்ட வேதங்கள்
முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவதென்றால் அதைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று புரிந்து கொள்ளக்கூடாது.
முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அதைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ”முஹம்மது நபிக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது. அதற்கு முன் எவருக்கும் அருளப்படவில்லை” என எண்ணாமல் எல்லா இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்ற அடிப்படையை நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன, மாற்றப்பட்டன, மறைக்கப்பட்டன, திருத்தப்பட்டன எனவும் பல இடங்களில் கூறுகிறது.
அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.
(அல் குர்ஆன் 2:75)
அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். ”இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.
(அல் குர்ஆன் 3:78)