அபூபக்ர் (ரலி)வரலாறு தொடர் – 25
அஸ்வதுக்கு எதிராக அணி திரளும் சக்திகள்
எம். ஷம்சுல்லுஹா
அஸ்வத் அல்அன்ஸீ தன்னை மட்டரகமாக நடத்திக் கொண்டிருக் கின்றான். எனவேஅவனைக் கொன்று விட வேண்டும் என்று கைஸ் ஏற்கனவே தெளிவான திட்டம்தீட்டியிருந்தான். இதை இக்குழுவினர் அவனைச் சந்தித்த போது தெரிந்து கொண்டனர்.
அஸ்வத் அல்அன்ஸியால் அவமானத்திற்கும் அடிமைத் தனத்திற்கும் உள்ளானபைரோஸும் அன்ஸீயைத் தீர்த்துக் கட்டுவதில் தீர்மானமாக இருந்தார்.
தாதவைஹும் இதே குறியில் வெறியாக இருந்தார். இதற்கிடையே அன்ஸீ விவகாரமாகவபர் பின் யுஹ்னஸ் மதீனாவிலிருந்து வந்திருந்தார்.
(நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து வபர் பின் யுஹ்னஸை அனுப்பி வைத்திருந்தார்கள் என்ற செய்தி வரலாற்று நூல்களில் இடம் பெறுகின்றது. ஆனால் ஹதீஸ்நூற்களில் இல்லை. எனவே நாம் அவரை நபி (ஸல்) அவர்களுடன் சேர்க்காமல் அவர்மதீனாவுக்கு வந்தார் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறோம்)
தாதவைஹ் அவரை கைஸுக்கு அறிமுகம் செய்தவுடனே அவர்கள் அனைவரும்அன்ஸீயின் கதையை முடிப்பதற்காக இவர்கள் வானத்தி லிருந்து குதித்து விட்டார்களோஎன்று எண்ணி கைஸ் ஆனந்தப் பரவசமடைந்தான்.
ஆக, முஆத் பின் ஜபல், அன்னாரது சம்பந்த வழியிலான உறவினர்களான சுகூன்குலத்தார், கைஸ், பைரோஸ், தாதவைஹ் மற்றும் மதீனாவிலிருந்து வருகையுற்ற வபர்பின் யுஹ்னஸ் ஆகியோரைத் தாங்கிய அணியினர் அன்ஸீயை ஊரை விட்டல்ல;உலகை விட்டே வழியனுப்ப வேண்டும் என்று ஏக மனதாகத் தீர்மானித்து விட்டனர்.
ஆனால் இந்த ரகசியத் தீர்மானம் எப்படியோ ஷைத்தான் அஸ்வத் அல்அன்ஸீக்குத்தெரிந்து விட்டது. அவ்வளவு தான். உடனே கைஸை தன் முன் வரவழைத்து, "கைஸ்என்னைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி விட்டான். நீ அவன் தலையை எடுத்துவிடு. இல்லையெனில் அவன் உன் தலையை எடுத்து விடுவான்'' என்று இறைச் செய்திவந்ததாகக் கதை விட்டான்.
கசடனின் இந்தச் செய்தி கைஸின் உடலில் அதிர்ச்சி அலைகளை எழுப்பினாலும், ஆள்ஆட்டம் காணவில்லை; அசைந்து கொடுக்கவில்லை. "அன்ஸீக்கு வந்தது இறைச் செய்திஇல்லை; இவன் சத்தியச் செய்தி என்ற பெயரில் ஷைத்தானின் செய்திகளை நம்மிடம்சங்கூதிக் கொண்டிருக்கின்றான்'' என்பதை கைஸ் புரிந்து கொண்டான்.
அதனால் கொஞ்சமும் கவலைப் படாமல், சளைக்காமல், "அஸ்வத் அல்அன்ஸீ மீதுஆணையாக! நீர் தான் என் உள்ளத்தில் மகத்தான இடத்தைப் பிடித்திருக்கின்றீர்.என்னைப் பற்றி நான் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள்என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றீர்'' என்று கைஸ் சாமர்த்தியமாகப்பதிலளிக்கின்றான்.
கைஸின் இந்தச் சமயோசிதம் சரியான பலனை அளித்தது. "நீ அரசனிடம்(அல்லாஹ்விடம்) பொய் சொல்வாய் என்று நான் எண்ணவில்லை. (நீ கொலை செய்யத்திட்டமிட்டாய் என்று) அரசன் நம்புகின்றான். உன்னிடம் ஏற்பட்ட பாவத்தை விட்டும் நீவிலகி விட்டாய் என்று அவன் புரிந்து கொண்டான்'' என்று வாய்க்கு வந்தபடி கூறினான்.எப்படியோ இந்தச் சதிகாரனை நம்ப வைத்து விட்டோம் என்ற நம்பிக்கையில் கைஸ்அங்கிருந்து வெளியேறினான்.
வெளியேறிய மாத்திரத்தில் கைஸ் தன்னுடைய சகாக்களான பைரோஸ், தாதவைஹ்ஆகியோரைச் சந்தித்து, தாங்கள் போட்ட திட்டம் அன்ஸீக்குத் தெரிந்து விட்டது என்றதகவலையும், அன்ஸீ உஷாராகி விட்டான் என்ற விபரத்தையும் தெரிவித்தான்.
அதற்கு அவர்கள், நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதெரிவித்தனர்.
அஸ்வதைக் கொல்ல அடுத்த கட்ட முயற்சி
இதன் பின்னர் அவர்கள் அங்கேயே அடுத்த கட்ட ஆலோசனையில் இறங்கினர். இவ்வாறுஅவர்கள் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது, அன்ஸீயின் தூதுவன் அங்குவந்து விட்டான். வந்தவன் அவர்களை அப்படியே அன்ஸீயின் முன்னிலையில் ஆஜர்படுத்தினான்.
"என்ன இது? எனக்கு வந்த தகவல் சரி தானா?'' என்று அன்ஸீ அவர்களிடம்விசாரணையைத் தொடர்ந்தான். அவர்கள் சாதுரிய மாகவும் சமயோசிதமாகவும், "இந்தத்தடவை மன்னித்து விடுங்கள்! இனி மேல் இது போல் இன்னொரு தடவை நடக்காது''என்ற அவனிடம் வாக்கு மூலம் கொடுத்தனர்.
அதற்கு அவன் "இனி மேல் இது போன்ற செய்தி என் காதுக்கு வந்தால் உங்களை உடனேஓய்த்து, ஒழித்துக் கட்டி விடுவேன்'' என்று உறுமினான்.
இந்த நேரத்தில் தான் ஹமதான் ஆளுநர் ஆமிர் பின் ஷஹ்ர், மற்றும் யமனின் இதரஆளுநர்கள் இந்த அணியினரின் முயற்சிக்கு ஆதரவாகக் கடிதம் அனுப்பிவைத்திருந்தனர். அதற்கு, "நாங்கள் கச்சிதமாகக் கணக்கை முடிக்கின்ற வரை தாங்கள்எந்தச் செய்தியையும் வெளியே தெரிவித்து விட வேண்டாம்'' என்று அவர்கள்அனைவரும் பதில் தெரிவித்திருந்தனர்.
கைஸின் விவேகமும் வியூகமும்
கைஸ் இப்போது கொஞ்சமும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல், அடுத்தக்கட்டநடவடிக்கையில் இறங்குகின்றான். விவேகமிக்க வகையில் அவன் அஸ்வதின்மனைவியான அஸாதை சந்திக்கிறான்.
"என் அருமைச் சகோதரியே! உனது கணவர் உனது சமுதாயத்திற்கு இழைத்த துரோகம்உனக்குத் தெரிந்தது தான். உன்னுடைய கணவனைக் கொன்றான். இன்னும் உன்னுடையசமுதாய மக்களைக் கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றான். எனவே இவன்விஷயத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க நீ முன் வருவாயா?'' என்று கேட்கின்றான்.
"என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?'' என்று அஸாத் கேட்கின்றாள். "நாடு கடத்தவேண்டியது தான்'' என்று கைஸ் பதிலளிக்கின்றான்.
"நாடு கடத்தவா? அதெல்லாம் தேவையில்லை. ஆளைத் தீர்த்துக் கட்ட வேண்டும். இதுதான் சரியான தீர்வாகும்'' என்று அஸாத் சொன்னதும் கைஸின் மகிழ்ச்சிக்குஅளவில்லாமல் போனது.
பந்தை எப்படி வீசினால் அது எப்படித் திரும்பப் பாய்ந்து வரும் என்ற வியூகத்தை கைஸ்சரியாகக் கையாண்டான். இதற்குத் தக்க பலன் உடனே கைகூடியது. அன்ஸீ மீதுஅஸாதுக்கு இருந்த அளவுக்கு அதிகமான வெறுப்பை கைஸ் அப்போது மிகத் தெளிவாகத்தெரிந்து கொண்டான்
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் படைத்த படைப்பில் இவன் மீது நான்கொண்டிருக்கும் ஆத்திரத்தைப் போல் வேறு யார் மீதும் நான் ஆத்திரம் கொள்ளவில்லை.இவன் சத்தியத் தூதன் அல்லன். சாத்தானியத் தூதன். செல்லுங்கள். இவனைக்கொல்வதற்கு உறுதி கொண்ட பின் என்னிடம் வாருங்கள்'' என்று அஸாத் தனது மனவேதனையை அள்ளிக் கொட்டினாள்.
அஸாதின் ஆணித்தரமான உத்தரவு கைஸுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும்கொடுத்தது. வெளியே வந்ததும், அங்கு பைரோஸும் தாதவைஹும் நின்றுகொண்டிருந்தனர்.
அவ்விருவரும் அப்போதே அவனுடைய கதையை முடித்து விடக் காத்திருந்தனர்.அவர்களிடம் இந்த நற்செய்தியை கைஸ் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே அஸ்வத்அவனை அழைத்து வர அனுப்பி விட்டான்.
கைஸ், அன்ஸீயிடம் செல்கையில் அவனுடைய ஆட்கள் 10 பேர் அவனைச் சுற்றிஇருந்தனர். கைஸைக் கண்டதும், போலி நபியின் பொய் வஹீ தொடங்கி விட்டது.
"நான் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். நீயோ என்னிடம் பொய்யேசொல்கின்றாய்! கைசேதம்! கைசேதம்! கைஸின் கையை நீ ஒடிக்கவில்லை என்றால்அவன் உன்னுடைய கழுத்தை ஒடித்து விடுவான்'' என்று கைஸை நோக்கி, தன் கள்ளவஹீயை கக்கிக் கொண்டிருந்தான்.
தான் அஸ்வதின் கையால் கொல்லப்பட்டு விடுவோம் என்ற முடிவுக்கு கைஸ் வந்துவிட்டான். "நீர் இறைத் தூதராக இருந்து நான் அழிகின்றேன் என்றால் அது அநியாயமே!இப்படி நான் நாள் தோறும் வதைபட்டுக் கொண்டிருப்பதை விட நீர் என்னை இப்போதேகொன்று விடுங்கள்'' என்று கைஸ் கூறினான். கைஸின் இந்த வார்த்தைகள் அஸ்வதிடம்கருணையை ஏற்படுத்தியது. "சரி! நீ செல்'' என்று கைஸை அனுப்பி வைத்து விட்டான்.
கைஸின் கதை முடிந்து விடும் என்று காத்திருந்த அவனது ஆட்களுக்கு இது பெரும்ஏமாற்றமாக அமைந்தது. அவர்களிடம் அஸ்வத், "நீங்கள் போய் உங்கள் வேலையைப்பாருங்கள்!'' என்று அனுப்பி வைத்து விடுகின்றான்.
அவர்கள் அங்கு சாதாரணமாக நின்று ஆலோசனை செய்து கொண்டிருக்கையில் அஸ்வத்அங்கு அவர்கள் முன்னிலையில் தோன்றினான். ஒட்டகங்கள், மாடுகள் போன்றவற்றில்சுமார் நூறு அளவுக்குப் பிடித்து ஓரிடத்தில் நிற்க வைத்தான். இந்தப் பிராணிகளைஅறுப்பதற்காக வேண்டி மார்க்கம் சொல்கின்ற வழிமுறையில் அல்லாமல், கட்டாமல்கொள்ளாமல் அப்படியே அறுத்தான். அவை தங்கள் உயிர் போகின்ற வரை அந்தத்திடலில் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தன. அரை குறை உயிருடன் அங்குமிங்கும்துள்ளிக் குதித்து, துவண்டு இறந்து போயின. அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் கண்கலங்கினர்.
"இது மாதிரியான வேதனைக்குரிய நிகழ்வை என்னுடைய வாழ்நாளில் கண்டதில்லை.இது போன்ற கோர நிகழ்வை நான் சந்தித்ததேயில்லை'' என்று கைஸ் கூறுகின்றான்.
பிறகு அஸ்வத், பைரோஸைப் பார்த்து, "நீ கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டினாய் என்றுகேள்விப்பட்டேன். உன்னையும் அறுத்து இந்தக் கால்நடைகளுடன் சேர்த்து விடலாம்என்று நினைத்தேன்'' என்று கூறி அந்தப் பெரிய கத்தியை எடுத்து அவர் கண் முன்காட்டினான்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
ஏகத்துவம் ஏப்ரல் 2006