Mar 30, 2017

விவாதங்கள் ஓய்வதில்லை 2 : சிதம்பரத்தில் நடந்தது என்ன?

விவாதங்கள் ஓய்வதில்லை 2 : சிதம்பரத்தில் நடந்தது என்ன?

03.07.05 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் வழக்கம் போல் ஸைபுத்தீன் ரஷாதி நரகல் நடையில் பேசத் துவங்கியதும், இது குறித்து பி.ஜே.யின் முன்னிலையில் நேரடியாக விவாதிக்கத் தயாரா? என்ற கருத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு துண்டுச் சீட்டு எழுதி மேடைக்கு அனுப்புகின்றார்கள்.

வழக்கம் போல் தயார் என்று அறிவித்து விட்டு பெங்களூர் பறந்து விட்டார் ஸைபுத்தீன் ரஷாதி.

இந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவைத் தொடர்பு கொண்டு விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா, ஸைபுத்தீன் ரஷாதி மேடையில் சொல்லும் வார்த்தைகளை எழுத்து வடிவில் தந்தது.

மார்க்கம் தொடர்பான ஆரோக்கியமான எந்தவொரு விவாதத்தையும் ஜமாஅத்துல் உலமா பேரவை வரவேற்கிறது.... என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், பி.ஜே. பொய்யர் என்று விவாதம் செய்யத் தயார் என்று அறிவித்திருந்தது.

சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமாவிற்கு பி.ஜே. அளித்த பதில் கடிதத்தில்...

ஸைபுத்தீன் ரஷாதி என்பவர் அறைகூவல் விட்டதைப் போல் பி.ஜே. மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியுள்ளாரா? என்ற தலைப்பில் விவாதம் செய்யவும், பி.ஜே. கூறியது பொய் என்று நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்கவும், மார்க்க மேடையில் பேச மாட்டேன் என்று உறுதி மொழி அளிக்கவும் பி. ஜைனுல் ஆபிதீன் ஆகிய நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால் எந்த விவாதமும் ஒரு தரப்பானதாக இருக்கக் கூடாது.

பி.ஜே. மார்க்க விஷயத்தில் பொய் சொல்கிறார் என்பது ஸைபுத்தீன் ரஷாதியின் நிலை, ஜமாஅத்துல் உலமாவின் நிலை.

மத்ஹபு நூல்களில் மார்க்க விஷயத்தில் நிறைய பொய்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும், பைத்தியக்காரத்தனமான உளறல்களும், அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்களும், முரண்பாடுகளும் உள்ளன என்பது எனது நிலை. மேலும் ஸைபுத்தீன் ரஷாதி ஒரு பொய்யர் என்பதும் எனது நிலை.

எனவே ஸைபுத்தீன் ரஷாதி கூறுவதை நான் ஏற்றுக் கொண்டது போல் நான் கூறும் தலைப்பைப் பற்றியும் விவாதிக்க அவர்கள் முன்வர வேண்டும். அந்த விவாதத்தில் மத்ஹபு நூல்களில் மீதான எனது குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் இது வரை மத்ஹபை ஆதரித்ததற்காக ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அத்துடன் மேடையிலேயே மத்ஹபு நூற்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், இனிமேல் மார்க்க மேடைகளில் உலமாக்கள் ஏறுவதில்லை என்றும் எழுதித் தர வேண்டும். ஸைபுத்தீன் பொய்யர், பித்தலாட்டக்காரர் என்பதை நான் நிரூபித்து விட்டால் அவரும் நான் எழுதித் தருவது போல் எழுதித் தர ஒப்புக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு விவாதம் என்றாலும் இரு தரப்புக்கும் சமமானதாக இருக்க வேண்டும். நீங்கள் விவாதிக்க வலியுறுத்தும் தலைப்பை எவ்வித மறுப்புமின்றி நான் ஏற்றுக் கொள்வது போல் நான் வலியுறுத்தும் தலைப்பை ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நீ அவல் கொண்டு வா! நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி, ஊதித் தின்னலாம் என்பது போல் ஒரு தரப்பாக விவாதம் இருக்கக் கூடாது. சொல்லப் போனால் நம்மை ஜமாஅத்துல் உலமா எதிர்ப்பதற்குக் காரணமே நமது மத்ஹபு எதிர்ப்பு தான். இது தான் முக்கியமான தலைப்பாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு எட்டப்பட்டு விட்டால் மற்ற விஷயங்கள் யாவும் முடிவுக்கு வந்து விடும்.

இவ்வாறு சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவுக்கு பி.ஜே. பதிலளித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஸைபுத்தீனின் பதில்

நான் விவாதத் தலைப்பில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பி.ஜே. ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்பதை ஏராளமான அத்தாட்சிகளுடன் நிரூபிக்கிறேன்.

அப்படி நிரூபிக்கப்பட்டு விட்டால் இது நாள் வரை மார்க்கப் பிரச்சாரம் செய்ததற்கு சமுதாயத்துடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், இனிமேல் எழுத்தால், பேச்சால், இன்ன பிற எந்த வழிகளிலும் மார்க்கப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என உறுதி மொழி எழுதித் தர வேண்டும்.

இதே கண்டிஷனில் ஸைபுத்தீன் ஆகிய என்னையும் உடன் படுத்துகிறேன் என்று தெளிவு படுத்தி உள்ளேன்.

சுருக்கமாகச் சொன்னால் மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. இன்னும் ஸைபுத்தீன் ஆகிய இருவரில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டங்கள், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்தப்பட வேண்டும் என்பது சமநிலை விவாதம் தானே?

பி.ஜே.யைப் பற்றி மட்டும் தான் விவாதிப்பேன், என்னைப் பற்றி விவாதிப்பதற்கு உடன்பட மாட்டேன் என்று நான் கூறியிருந்தால் அதைச் சமநிலை இல்லாத ஒரு தரப்பான விவாதம் என்று கூறலாம்.

நான் அவ்வாறு கூறவில்லையே.

இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடுடைய ஃபிக்ஹ் சட்டங்களைப் பற்றி விவாதிப்பது அடுத்தக்கட்ட முயற்சி தான். அதுவும் செய்யப்பட வேண்டும். அதையும் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாகச் செய்வோம்.

இவ்வாறு ஸைபுத்தீன் தனது பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

பி.ஜே.யின் பதில்

மத்ஹபைப் பற்றிய நமது குற்றச்சாட்டுக்களை முதலில் விவாதிக்க வேண்டும் என்பது தான் நமது நிலை. எனினும் ஏதேனும் காரணம் சொல்லி விவாதத்திற்கு வராமல் நழுவி விடும் அவர்களை விவாதத்திற்கு எப்படியும் அழைத்து வர வேண்டும் என்பதால் அவர்களுடைய நிபந்தனையை ஏற்கிறோம்.

மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. இன்னும் ஸைபுத்தீன் ஆகிய இருவரில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டங்கள், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்தப்பட வேண்டும் என்பது சமநிலை விவாதம் தானே? என்று ஸைபுத்தீன் கேட்டிருக்கிறார்.

மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. ஒரு புறம் - ஸைபுத்தீன், ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித் தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்த வேண்டும் என்பது தான் உண்மையிலேயே சமநிலை விவாதமாகும்.

எனவே அவர்களுடைய வார்த்தைப் படி, மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. ஒரு புறம், ஸைபுத்தீன், ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மார்க்கம் கூறும் விஷயத்தில்

பொய் பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்?

குர்ஆன், ஹதீஸில் இல்லாததை இஸ்லாம் என்ற பெயரில் பொய்யாகச் சொல்பவர்கள் யார்?

குர்ஆன் ஹதீஸிற்கு முரணான கருத்தைக் கூறி அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் மோதுபவர்கள் யார்?

குர்ஆன், ஹதீஸ்களின் கருத்துக்களை தனது இச்சைக்கேற்ப வளைத்தவர்கள் யார்?

ஹதீஸ்களில் இல்லாத வார்த்தையை வேண்டுமென்றே இணைத்துக் காட்டி தப்பர்த்தம் செய்தவர்கள் யார்?

ஹதீஸின் முக்கியப் பகுதியை மனமறிந்து நீக்கி தவறான கருத்தை வெளிப்படுத்தியவர்கள் யார்?

இமாம்கள் என்று ஜமாஅத்துல் உலமாவால் கருதப்படுபவர்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்றியவர்கள் யார்?

ஃபிக்ஹ் நூல்களில் சொல்லப்படாத கருத்துக்களை, இருப்பதாக பொய்யான பக்க, பாக விபரங்களை ஜோடித்துக் கூறியவர்கள் யார்?

ஆலிம்களையும் மக்களையும் ஏமாற்றுவதற்காகவே நூல்கள் பதிப்பகம், பதிப்பகத் தேதி போன்ற பொய் அட்டவணையைத் தொகுத்துக் காட்டியவர்கள் யார்?

இது போன்ற மோசடிகள், பித்தலாட்டங்கள், பித்துக்குளித் தனங்கள் செய்த கள்ளப் பேர்வழிகள், கயவர்கள் யார்?

என்ற தலைப்பிலேயே விவாதம் செய்வதற்கு நாம் தயார்.

இவ்வாறு தனது கடிதத்தில் பி.ஜே. குறிப்பிட்டிருந்தார்.

ஸைபுத்தீன் எழுதிய பதில் கடிதம்

விவாதத் தலைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள பி.ஜே.,

ஒரு புறம் பி.ஜே. மற்றொரு புறம் ஸைபுத்தீன் இன்னும் ஜமாஅத்துல் உலமா அவர்களின் அனைத்து அறிஞர்கள் என்ற நிலையில் தான் விவாதம் நடைபெற வேண்டும் என்று எழுதியுள்ளார்.

ஆனால் அவர், ஸைபுத்தீன் மற்றும் ஜமாஅத்துல் உலமா இன்னும் அறிஞர்கள் அனைவரின் மீதும் குற்றச்சாட்டு கூறுவாராம். அவ்வனைவர்கள் சார்பாகவும் நான் பதில் கூற வேண்டுமாம்.

இது தான் சம நிலை விவாதமாம்.

இதை சமநிலை என்று அறிவுள்ள யாரும் கூற மாட்டார்கள்.

நான் பி.ஜே. மீது பொய், பித்தலாட்டம், அவதூறு, போக்கிரித் தனம் போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறேன். அதை நிரூபிக்கிறேன் என்று அழைக்கிறேன். அவர் விவாத அரங்கில் மக்கள் முன்னிலையில் மறுக்கட்டும். அல்லது மாட்டிக் கொண்டு முழிக்கட்டும்.

அதே போன்று என் மீது மேற்படி குற்றச்சாட்டுகளைக் கூறி நிரூபிக்கட்டும். நான் மறுக்கிறேன். அல்லது அதற்குரிய தண்டனையை ஏற்கிறேன்.

இது தான் எல்லோரும் ஏற்கும் படியான அறிவுப்பூர்வமான சமநிலை விவாதமாகும்.

இது ஸைபுத்தீனின் பதில் கடிதம்.

பி.ஜே.யின் பதில்

நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவாதிக்க நீங்கள் மறுப்பதால் விவாதத்திற்கு முன்பே தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அல்லாஹ் வெற்றியைத் தந்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

மார்க்க விஷயத்தில் பி.ஜே. பொய் சொல்லியிருக்கிறார் என்ற தலைப்பை மட்டும் தான் விவாதிப்போம் என்று நீங்கள் கூறினீர்கள்.

எங்களைப் பொருத்த வரை இது தேவையற்ற தலைப்பு என்ற போதும் உங்களை விடக் கூடாது என்பதற்காக அத்தலைப்பு முழுமையானதாகவும் சம நிலையிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொண்டோம்.

சமநிலை என்பது விவாதிக்கும் மனிதர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. நிலைபாட்டில் சமநிலை என்பது தான் சரியானதாகும்.

பி.ஜே. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து மார்க்கத்தைக் கூறுகிறார். தவ்ஹீத் உலமாக்களும் அவ்வாறே கூறுகின்றார்கள்.

ஆனால் ஸைபுத்தீன் ரஷாதி அவ்வாறு கூறுவதில்லை. மற்றவர்கள் செய்த முடிவைச் சொல்பவராகத் தான் இருக்கிறார்.

எனவே சம நிலை என்பது,

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை ஆய்வு செய்திருப்பதாக ஸைபுத்தீன் ரஷாதி நம்புகின்ற மத்ஹபு முன்னோடிகள் மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியிருக்கின்றார்களா?

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை ஆய்வு செய்து கூறும் ஜைனுல் ஆபிதீன் மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியிருக்கின்றாரா?

என்பது தான் சம நிலையாகும்.

மத்ஹபு முன்னோடிகள் உயிருடன் இல்லாததால் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஸைபுத்தீன் ரஷாதி, மத்ஹபு முன்னோடிகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.

இந்த சமநிலையைத் தான் நாம் குறிப்பிட்டோம்.

மத்ஹபைப் பின்பற்றக் கூடாது, குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை அறிந்து தான் ஒருவர் மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிறர் ஆய்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்வது தவறு என்று ஜைனுல் ஆபிதீன் கூறுகின்றார்.

மத்ஹபைப் பின்பற்ற வேண்டும். மத்ஹபு முன்னோடிகளின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று ஸைபுத்தீன் ரஷாதி கூறுகின்றார்.

எனவே நிலைபாட்டைப் பொருத்த வரை ஸைபுத்தீனும், ஜைனுல் ஆபிதீனும் சமநிலையில் இல்லை. மத்ஹபைப் பின்பற்றக் கூடாது என்றும் பிறர் ஆய்வுகளை அப்படியே ஏற்பது தவறு என்றும் ஸைபுத்தீன் ரஷாதி பகிரங்கமாக அறிவித்தால் அப்போது தான் ஜைனுல் ஆபிதீனும், ஸைபுத்தீனும் நிலைபாட்டில் சம நிலையில் உள்ளார்கள் என்று கூற முடியும்.

ஆய்வு செய்பவர்கள் என்ற அடிப்படையில் மத்ஹபு முன்னோடிகளும் அவர்களின் தவறுகளை நியாயப்படுத்தும் ஸைபுத்தீனும் ஒரு அணி என்பதும்,

ஜைனுல் ஆபிதீன் ஒரு அணி என்பதும் தான் சம நிலையாகும்.

மத்ஹபைப் பின்பற்ற வேண்டும், மத்ஹபு முன்னோடிகளின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று ஸைபுத்தீன் கூறுவது போல்,

பி.ஜே.யைப் பின்பற்ற வேண்டும், பி.ஜே.யின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று யாராவது கூறினால் அவரும் ஸைபுத்தீனும் சம நிலையில் உள்வர்களாக ஆவார்கள்.

எனவே மார்க்கத்தைக் கூறுபவர்களின் நம்பகத்தன்மை என்பதில் சமநிலை இருக்க வேண்டும்.

மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

மார்க்கத்தைச் சொல்பவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டியது முதலில் அவசியம் என்ற ஸைபுத்தீன் ரஷாதியின் தலைப்பை நாம் ஏற்றுக் கொண்டோம். அது சமநிலையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் நாம் வற்புறுத்துகிறோம்.

விவாதத்துக்கான நேரத்தையும் இடத்தையும் நீங்களே முடிவு செய்து அறிவியுங்கள் என்று நாம் முந்தைய கடிதங்களில் எழுதியிருந்தோம். இது குறித்து நீங்கள் (சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா) 23.08.2005 அன்று எழுதிய கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டீர்கள்.

இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எப்பொழுது வைத்துக் கொள்வது என்பது தெரிவியுங்கள். இத்துடன் எழுத்து மூலம் தொடர்பு கொள்வதை விட்டு நேரடி விவாதத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

மேலும் ஸைபுத்தீன் ரஷாதி தனது 19.08.2005 அன்று எழுதிய கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

விவாத அமைப்பு பற்றிய விசயங்களைக் கலந்து பேசி முடிவெடுக்க எப்பொழுது அழைத்தாலும் நான் வரத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் பொறுப்பை எங்களிடமே விட்டு விட்டீர்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

எனவே விவாதம் செய்வது குறித்து ஒப்பந்தம் செய்வதற்காக 27.09.2005 செவ்வாய்க்கிழமை பகல் 2.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்.

இவ்வாறு பி.ஜே. தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜே.யும் ஸைபுத்தீனும் எப்படிப்பட்டவர்கள் என்று விவாதம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?

இரண்டு அணியினரின் கொள்கை குறித்து விவாதிப்பது தான் சமநிலை என்ற சரியான விளக்கம் கொடுத்து நாம் கடிதம் எழுதிய பிறகு ஸைபுத்தீனிடமிருந்து சத்தமில்லை.

சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா சபையிடமிருந்து சுத்தமாக பதில் இல்லை.

நாம் சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவிற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது போல் 27.09.2005 அன்று நமது ஜமாஅத் சார்பாக எஸ். கலீல் ரசூல் உட்பட ஐவர் அடங்கிய குழு சிதம்பரத்திற்குச் சென்றது.

சரியாக மதியம் 12.30 மணி முதல் மாலை 6.45 வரை கடிதத்தில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தும் அவர்கள் தரப்பில் விவாத ஒப்பந்தத்திற்கு யாரும் வரவில்லை. மேலும் எந்தத் தகவலும் தரவில்லை.

விவாத ஒப்பந்தத்திற்குக் கூட வரத் திராணி இல்லாதவர்களா விவாதம் செய்ய வரப் போகின்றார்கள்? தலை சிறந்த பல மார்க்க அறிஞர்களை(?) வைத்திருக்கும் ஜமாஅத்துல் உலமாவிற்கு சவாலைச் சந்திக்கத் திராணியில்லாமல் போனது ஏனோ?

இதைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.

(அல்குர்ஆன் 21:18)

நாம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்கள் வர மாட்டார்களா? என்று விவாத ஒப்பந்தத்திற்காகக் காத்துக் கிடந்தோம். அப்போது வராத ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் சென்னையில் மீண்டும் சவால் விடத் துவங்கினர்.

தவ்ஹீது ஜமாஅத்துக்குப் பகிரங்க சவால் என்ற தலைப்பில் சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் பி.ஜே.க்கு பகிரங்க சவால் என்ற தலைப்பில் சென்னையிலுள்ள சு.ஜ. பள்ளிகளில் துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப் பட்டன. அதில் 1.10.2005 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை மண்ணடி, மூர் தெருவில் ஸைபுத்தீன் ரஷாதி உரையாற்றப் போவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

பொதுக் கூட்டம் என்றோ, மார்க்க சொற்பொழிவு என்றோ தலைப்பில் போஸ்டர் ஒட்டியிருந்தால் அதை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.


ஆனால் பகிரங்க சவால் என்றால் அதை நாம் சந்தித்தே தீர வேண்டும், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்ற அடிப்படையில் 1.10.2005 மாலை 6 மணிக்கு மண்ணடி மூர் தெருக்கு பி.ஜே. உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் சென்று காத்திருந்தனர். ஆனால் அங்கு ஸைபுத்தீன் ரஷாதியோ, ஜமாஅத்துல் உலமாவோ யாரும் வரவில்லை. மீட்டிங் கேன்சல் என்று அங்கு அறிவிக்கப்பட்டது.

EGATHUVAM DEC 2005