விமர்சனங்களும்
சோதனைகளே!
எம்.
ஷம்சுல்லுஹா
இறைத்தூதர்கள்
ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது சொல்லெனாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும்
ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் புரட்டும் போது
அவர்களைப் பல்வேறு விதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காண முடிகின்றது. அந்தச்
சோதனைகள் நபிமார்களை மட்டுமல்லாது அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட இறை
நம்பிக்கையாளர் களையும் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்தச் சோதனைகளில் மிக முக்கியமானது
எதிரிகள் செய்யும் விமர்சனங்களாகும்.
விமர்சனங்களைப்
பற்றி இங்கே நாம் குறிப்பிடும் போது, விமர்சனங்கள் எப்படிச் சோதனைகளாகும்? இவையெல்லாம்
சோதனை என்ற வட்டத்திற்குள் வருமா? என்ற சந்தேகம் கூட எழலாம். இந்தக் கேள்விக்கு அல்லாஹ்வின் வசனத்தி-ருந்தே விடையைக்
காணலாம்.
"இவருக்கு ஒரு புதையல்
அருளப்பட வேண்டாமா?
அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை
நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே! அல்லாஹ்வே
எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.
(அல்குர்ஆன் 11:12)
அல்லாஹ்
அருளிய செய்தியை மக்களிடம் சொல்லாமல் விட்டு விடுவது ஒரு இறைத்தூதரைப் பொறுத்த மட்டில்
சாதாரண குற்றமல்ல! ஆனால் அத்தகைய பெரும் பாவத்தைச்
செய்யத் தூண்டுமளவுக்கு அம்மக்களின் விமர்சனங்கள் அமைந்திருந்தன என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது. "அவர்கள் கூறுவதால்'' என்ற வாசகம் மக்களின் விமர்சனத்தையே இங்கு குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை விமர்சனங்கள் எந்த
அளவுக்குப் பாதித்திருந்தன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
எனவே
விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வதும் பிரச்சாரப் பணியின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது. அந்த அடிப்படையில் இறைத் தூதர்களுக்கு முன்னோடியாகத்
திகழும் நூஹ் (அலை) அவர்களை நோக்கி வந்த விமர்சனங்களை இப்போது பார்ப்போம்.
"இவர் ஒரு பைத்தியக்காரர்
தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்!'' (என்றனர்)
(அல்குர்ஆன் 23:25)
நூஹ்
(அலை) அவர்களை அம்மக்கள் பைத்தியக்காரர் என்று கூறியதை இவ்வசனம் கூறுகின்றது. இத்துடன்
நின்று விடவில்லை. அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதாகவும் கூறினார்கள்.
இவர்
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக
இல்லை (என்றனர்)
(அல்குர்ஆன் 23:28)
அவரது
சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத்
தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால்
வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை'' என்றனர்.
(அல்குர்ஆன் 23:28)
மக்களிடத்தில்
சிறப்பு அந்தஸ்து,
தகுதிகளைப் பெறுவதற்காக நபித்துவம் என்ற நடிப்புப் பாத்திரத்தை
ஏற்றிருக்கின்றார் என்ற அவதூறைச் சுமத்தினார்கள்.
"இவர் உங்களைப் போன்ற
ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே
இவரும் அருந்துகிறார்''
என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின்
சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை
வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 23:33)
இந்த
இடத்தில் நீங்கள் உண்ணும் உணவை விட மட்டரகமான உணவையே இவர் உண்ணுகின்றார் என்றும் பொருள்
கூறலாம். அதாவது இந்தப் பணக்காரப் பிரமுகர்கள்
நூஹ் (அலை) அவர்களின் உணவையும் மட்டம் தட்டி, தங்கள் மனக்குமுறலைத் தீர்த்துக்
கொண்டனர்.
இப்படிப்
பட்ட விமர்சனங்கள் ஓர் இறைத்தூதரை நோக்கி வரும் போது அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்.
தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் தொடர் பிரச்சாரம் செய்கின்றனர். எதிரிகளும் இவர்களை
நோக்கி விஷமத்தனமாக விமர்சனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இத்தனை
விமர்சனங்களுக்கும்,
விஷமப் பிரச்சாரங்களுக்கும் இடையில் ஒரு கூட்டம் நூஹ் (அலை)
அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை ஏற்று இறை நம்பிக்கை கொள்கின்றது. அந்தக் கூட்டம்
ஏழைகள்! இதை அடிப்படையாகக் கொண்டும் அந்தச் சமுதாயப் பிரமுகர்கள் பரிகசிக்கவும், பழிக்கவும்
தவறவில்லை.
"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே
உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக்
காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக
இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 11:27)
"என் சமுதாயமே! நான் என்
இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன்
தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள்
அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப்
பதில் சொல்லுங்கள்!''
என்று (நூஹ்) கேட்டார்.
"என் சமுதாயமே! இதற்காக
நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது.
நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள்.
எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்''
"என் சமுதாயமே! நான் அவர்களை
விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க
மாட்டீர்களா?''
"என்னிடம் அல்லாஹ்வின்
கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான்
வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ்
எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங் களில் உள்ளதை
அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார்)
(அல்குர்ஆன் 11:28-31)
நூஹ்
(அலை) அவர்களின் இந்தப் பொறுமையான, அதே நேரத்தில் ஆணித்தரமான பதிலுக்குப்
பிறகும் அவர்கள் திருந்தவில்லை.
இது
போன்ற விமர்சனங்களைச் செய்வோரிடம், நாம் தக்க ஆதாரங்களுடன் வாதங்களை
எடுத்து வைத்தால் அதை அவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை. சத்தியவாதிகள் எடுத்து வைக்கும்
வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல், எதற்கெடுத்தாலும் விவாதம் தானா? என்று
கேட்பதைப் பார்க்கிறோம். இந்த நிலையை நூஹ் (அலை) அவர்களும் சந்தித்தனர்.
"நூஹே! எங்களுடன் தர்க்கம்
செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர்
எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று
அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 11:28-31)
இதற்குப்
பிறகும் நூஹ் (அலை) அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஆம்! அந்த எதிரிகள் விமர்சித்தது போல் அவர் ஒன்றும்
மலக்கல்ல! மனிதர் தான்! எனவே இறைவனிடம் கையேந்துகின்றார்கள். அதுவும் தொள்ளாயிரத்து
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான்.
"நான் தோற்கடிக்கப்பட்டு
விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!'' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன் 54:10)
இந்தப்
பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் நூஹ் நபியைக் ஒரு கப்பல் கட்டுமாறு கட்டளையிடுகின்றான்.
"(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத்
தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே
அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப் படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது
கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள்
மூழ்கடிக்கப்படுவார்கள்''
என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 11:36,37)
கப்பல்
கட்டும் பணியின் போதும் எதிரணியினர் நூஹ் நபியைக் கிண்டல் செய்யத் தவறவில்லை. அழியப்
போகும் அந்தக் கூட்டத்தை நோக்கி நூஹ் (அலை) தெரிவித்த அடக்கமான பதிலைப் பாருங்கள்.
அவர்
கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக்
கேலி செய்தனர். "நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை
நாங்களும் கேலி செய்வோம். இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான
வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!'' என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 11:38,39)
இதன்
பிறகு அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடைந்தது.
இதை அல்லாஹ் கமர் என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.
அப்போது
வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுக்களைப் பீறிட்டு ஓடச் செய்தோம்.
ஏற்கனவே திட்டமிட்ட படி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில்
அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப் பட்டவருக்கு
(நூஹுக்கு) உரிய கூலி.
(அல்குர்ஆன் 54:11-14)
இது
தான் அகில உலகத்தின் ஆரம்ப இறைத்தூதர் சந்தித்த சோதனை மற்றும் சோகப் படலமும் அதற்காக
அவர்கள் மேற்கொண்ட பொறுமையும் ஆகும். நூஹ்
(அலை) அவர்கள் மீது எறியப்பட்ட இந்த விஷம் தோய்ந்த அம்புகளை என்னவென்று கூறுவது? இவை
எல்லாமே அவர்களது உள்ளத்தைக் கீறிக் காயப்படுத்திய, கூரிய சொல்லம்புகள் தான்.
விஷம்
தோய்ந்த இந்த விமர்சன அம்புகள் வார்த்தை வடிவத்திலும் வரலாம். முகவரியுடனோ அல்லது மொட்டையாகவோ எழுத்து வடிவத்திலும்
வரலாம். ஆனால் இவை எல்லாமே சொல்லம்புகள் தான். முதல் முன்னோடி நூஹ் (அலை) அவர்களிலிருந்து இறுதித்
தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரை அந்த வேதனைப் படலம் தொடர்ந்திருக்கின்றது. இந்த விமர்சனங்களைத்
தாங்கி, பிரச்சாரப் பணியைத் தொடரும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாக!
EGATHUVAM DEC 2005