Mar 30, 2017

ஹஜ் விளக்கக் குறிப்பேடு

ஹஜ் விளக்கக் குறிப்பேடு

பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி

ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்கு வழிகாட்டியாகச் செல்பவர்கள் பெரும்பாலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டாமல் ஏராளமான பித்அத்களைச் சொல்லிக் கொடுப்பவர்களாகவே உள்ளனர். இதனால் ஹஜ் செய்யச் செல்பவர்கள் பெரும் பொருட்செலவு செய்தும் ஹஜ்ஜை முறைப்படி நிறைவேற்ற முடியாத நிலையே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஹஜ்ஜைப் பற்றிய இந்த சிறு குறிப்பேடு வெளியிடப் படுகின்றது.

ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹதீஸ் ஆதாரங்களை முழுமையாக வெளியிடாமல் ஹதீஸின் கருத்துக்களை வைத்து செய்முறையை மட்டும் விளக்கியுள்ளோம். முழுமையான குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் நபிவழியில் நம் ஹஜ் என்ற நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இங்கிருந்து ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் ஹஜ் தமத்துஃ எனப்படும் ஹஜ்ஜையே மேற்கொள்பவர்களாக உள்ளனர். எனவே அதைப் பற்றிய விளக்கம் மட்டும் வெளியிடப்படுகின்றது.

வாசகர்கள் இந்தச் செயல்முறை விளக்கத்தை ஹஜ்ஜுக்குச் செல்லும் தமது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ் தமத்துஃ

ஹஜ் செய்யச் செல்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமைக் களைந்து, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு ஹஜ் தமத்துஃ என்று பெயர்.

உம்ரா செய்யும் முறை

1. இஹ்ராம் அணிதல்

குளித்து, நறுமணம் பூசிய பின் இஹ்ராமுடைய ஆடை அணிந்து,

லப்பைக் உம்ரதன்

என்று கூற வேண்டும். பின்னர்,

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃம(த்)த ல(க்)க வல் முல்க் லாஷரீ(க்)க லக்

என்று சப்தமாக தல்பியா கூற வேண்டும். இவ்வாறு தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.

இஹ்ராம் அணிந்தவர்கள் செய்யக்கூடாதவை:

1. திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது.

2. இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

3. வீணான விவாதங்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது.

4. உயிர்ப் பிராணிகளைக் கொல்லக்கூடாது. (உணவுக்காக உயிர்ப்பிராணிகளை அறுப்பதில் தவறில்லை)

5. வேட்டையாடக் கூடாது. தமக்காக பிறரை வேட்டையாடுமாறு தூண்டக் கூடாது. நறுமணம் பூசிக் கொள்ளக் கூடாது.

6. ஆண்கள் தையல் உள்ள ஆடைகளை அணியக் கூடாது.

7. ஆண்கள் தலையை மறைக்கக் கூடாது. வெயில், மழையிலிருந்து காத்துக் கொள்ள குடை பிடிப்பதில் தவறில்லை.

8. முடிகளையும் நகங்களையும் வெட்டக் கூடாது.

2. கஃபாவை தவாஃப் செய்தல்

கஃபா நமது இடது கைப்பக்கம் இருக்குமாறு வைத்துக் கொண்டு, கஃபாவை சுற்றுவதற்கு தவாஃப் என்று பெயர். இவ்வாறு சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்து சுற்ற வேண்டும். தவாஃபின் போது ஆண்கள் வலது புஜம் திறந்திருக்கும் நிலையில் மேலாடை அணிய வேண்டும். ஏழு சுற்றுக்களில் மூன்று சுற்றுக்கள் ஓட வேண்டும். நான்கு சுற்றுக்கள் நடந்து செல்ல வேண்டும். ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டு சுற்றை ஆரம்பித்து மீண்டும் அதே இடத்தை அடைந்தால் ஒரு சுற்று நிறைவேறும். ஒவ்வொரு சுற்றிலும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். கையால் தொட்டு முத்தமிட வேண்டும். இயலாவிட்டால் சைகையின் மூலம் முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வதை அடையாளம் காட்டும் பச்சை விளக்கை மையமாக வைத்து சைகையால் முத்தமிட வேண்டும். ருக்னுல் யமானி என்ற இடத்திற்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையில் வரும் போது,

ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன் னார்

என்ற துஆவை ஓத வேண்டும். தவாஃப் முடிந்து மகாமு இப்ராஹீம் என்ற இடத்தை வந்தடைந்து இரண்டு ரக்அத் தொழ வேண்டும். இவ்வாறு மகாமு இப்ராஹீமை நோக்கி வரும் போது

வத்தஹிதூ மின் ம(க்)காமி இப்ராஹீம முஸல்லா

என்று ஓத வேண்டும்.

தொழுகையின் போது தோள் புஜங்கள் இரண்டையும் மூடியிருக்க வேண்டும்.

குறிப்பு: மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃப் செய்யக் கூடாது. எனவே மாதவிடாய் நின்ற பின் உம்ராவை மீண்டும் செய்து கொள்ள வேண்டும்.

3. ஸஃபா மர்வாவில் ஸஈ செய்தல்

ஸஃபா மர்வாவுக்கு இடையில் சற்று விரைவாக நடப்பதற்கு ஸஈ என்று பெயர். ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிப்பது ஒரு தடவை ஸஈ செய்ததாகும். பின்னர் மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிப்பது இரண்டாவது தடவை ஸஈ செய்ததாகும். இவ்வாறு ஏழு தடவை ஸஈ செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவை ஸஈ செய்யும் போதும் பச்சை அடையாளமிடப்பட்ட இரண்டு விளக்குகளுக்கு இடையில் ஆண்கள் சிறிது குலுங்கியவர்களாக ஓட வேண்டும். முதன் முதலில் ஸஃபாவை அடைந்ததும்

இன்னஸ் ஸஃபா வல் மர்வ(த்)த மின் ஷஆயிரில்லாஹ்

என்ற வசனத்தை ஓத வேண்டும். பின்னர்,

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)கலஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா அன்ஜஸ வஃதா வநஸர அப்தா வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா

என்ற திக்ரை ஓத வேண்டும். பின்னர் துஆச் செய்ய வேண்டும். பின்னர் மேற்கண்ட திக்ரை ஓத வேண்டும். பின்னர் துஆச் செய்ய வேண்டும். பின்னர் மேற்கண்ட திக்ரை ஓத வேண்டும்.

பின்னர் மர்வாவை அடைந்ததும் மேற்கண்ட முறையில் செய்ய வேண்டும். இவ்வாறு முதல் முறை மட்டுமே செய்ய வேண்டும்.

4. தலைமுடியைக் களைதல்

தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது தலைமுடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

உம்ராவுடைய காரியங்கள் இத்துடன் நிறைவடைகின்றது. இதன் பின்னர் இஹ்ராமைக் களைந்து விட வேண்டும்.

ஹஜ் காரியங்கள்

உம்ராவை முடித்த பின்னர் மக்காவில் தங்கியிருந்து பிறை 8ல் ஹஜ்ஜுடைய கிரியைகள் ஆரம்பிக்கும் போது அந்த இடத்திலேயே,

லப்பைக் ஹஜ்ஜன்

என்று கூறி இஹ்ராம் கட்டிக் கொண்டு,

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃம(த்)த ல(க்)க வல் முல்க் லாஷரீ(க்)க லக்

என்ற தல்பியாவைச் சொல்ல வேண்டும்.

1. பிறை 8ல் மினாவில் தங்குதல்

மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, மறுநாள் சுப்ஹ் ஆகிய தொழுகைகளைத் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துகளை இரண்டு ரக்அத்துகளாகத் தொழ வேண்டும். ஒரே பாங்கில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும். ஒரே பாங்கில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழ வேண்டும்.

பிறை 9 சுப்ஹ் தொழுகை வரை மினாவில் இருந்து விட்டுப் பிறகு சுப்ஹ் தொழுது விட்டு அங்கிருந்து அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும்.

2. அரஃபாவில் தங்குதல்

ஹஜ் காரியங்களில் அரஃபாவில் தங்குவது மிகவும் அவசியம். பிறை 9ல் சிறிதளவேனும் அரஃபாவில் தங்காவிட்டால் ஹஜ் கூடாது. ஒருவேளை தாமதமாகி விட்டால் குறைந்த பட்சம் பிறை 10 அன்று சுப்ஹ் தொழுகைக்கு முன்னராவது ஒருவர் அரஃபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து விடுவார்.

அரஃபாவில் துஆவும், திக்ரும் செய்ய வேண்டும். ஆனால் கூட்டாகச் செய்யக் கூடாது. தனித்தனியாகச் செய்ய வேண்டும். அங்கு நடத்தப்படும் பிரசங்கத்தை (குத்பாவை) கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.

அரஃபாவில் தங்கும் போது லுஹர், அஸர் தொழுகைகளை ஜம்உ செய்து தான் தொழ வேண்டும். மக்ரிப் நேரத்தை அடைந்ததும் அங்கிருந்து கிளம்பி முஜ்தலிபா செல்ல வேண்டும். அரஃபாவில் மக்ரிப் இஷா தொழக் கூடாது. ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு கிடையாது.

3. முஜ்தலிபாவில் இரவு தங்குதல்

அரபாவிலிருந்து மக்ரிப் நேரத்தில் புறப்பட்டு முஜ்தலிபா சென்று அங்கு இரவு தங்க வேண்டும். அங்கு ஒரே பாங்கில் மக்ரிப் இஷாவைத் தொழ வேண்டும். பின்னர் சுப்ஹ் தொழுது விட்டு, மஷ்அரில் ஹராமில் கிப்லாவை முன்னோக்கி துஆ மற்றும் திக்ரு செய்து விட்டு அங்கிருந்து மினா புறப்படவேண்டும்.

4. மீண்டும் மினாவுக்குச்செல்லுதல்

பிறை 10ல் சுப்ஹுக்குப் பின்னர் முஜ்தலிபாவிலிருந்து மினாவுக்குச் செல்ல வேண்டும்.

மினாவில் செய்ய வேண்டிய காரியங்கள்

1. சூரியன் உதயமான பிறகு ஜம்ரத்துல் அகபா என்ற இடத்தில் ஏழு கற்களை எறிய வேண்டும்.

2. குர்பானி கொடுக்க வேண்டும்.

3. தலைமுடியைக் களைய வேண்டும். - மொட்டையடித்தல் அல்லது முடியைக் குறைத்தல். (மொட்டையடித்தலே சிறந்தது.)

இத்துடன் இஹ்ராம் உடையைக் களைந்து விடலாம். ஆனால் இல்லறத்தில் ஈடுபடுவது தடுக்கப் பட்டுள்ளது.

5. தவாஃபுல் இஃபாழா - ஹஜ்ஜுடைய தவாஃப்

ஹஜ் காரியங்களில் தவாஃபுல் இஃபாழா கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இந்த தவாஃபின் போது வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏழு சுற்றுக்களிலும் நடந்தே செல்ல வேண்டும். மற்றபடி முன்னர் கூறிய முறையிலேயே தவாஃப் செய்தல் மற்றும் மகாமு இப்ராஹீமில் தொழுதல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

குறிப்பு: தவாஃபுல் இஃபாழா செய்யும் போது பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் மாதவிடாய் நின்ற பிறகு தவாஃப் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் பத்தாம் நாள் தான் தவாஃபுல் இஃபாழா செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

6. ஸஃபா மர்வாவில் ஸஈ செய்தல்

முன்னர் கூறியபடி ஸஃபா மர்வாவில் ஸஈ செய்ய வேண்டும்.

7. கல்லெறிதல்

துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் கல்லெறிய வேண்டிய நாட்களாகும். ஒருவர் விரும்பினால் 11, 12 நாட்களில் மட்டும் கல்லெறிந்து விட்டுத் திரும்பி விடலாம். அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். பிறை 12ல் கல்லெறிந்து விட்டு இரவில் மினாவில் தங்கி விட்டால் பிறை 13ல் கல்லெறிந்தாக வேண்டும். அவ்வாறு மினாவில் தங்கவில்லை என்றால் 11, 12ல் கல்லெறிந்ததுடன் புறப்பட்டு விடலாம்.

கல்லெறியும் நாட்களில் மினாவில் தங்குவது நபிவழியாகும். எனினும் தக்க காரணத்தால் மினாவில் தங்க இயலாமல் மக்காவிலேயே தங்கி விடுவதற்கு அனுமதி உள்ளது.

தினமும் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் அகபா ஆகிய இடங்களில் தலா ஏழு கற்கள் வீதம் கல்லெறிய வேண்டும். ஒவ்வொரு தடவை கல்லெறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். முதலில் ஜம்ரத்துல் ஊலாவில் கல்லெறிந்து விட்டு, சிறிது தள்ளி துஆச் செய்ய வேண்டும். பிறகு ஜம்ரத்துல் உஸ்தாவில் கல்லெறிந்து விட்டு சிறிது தள்ளி துஆச் செய்ய வேண்டும். பிறகு ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டு துஆச் செய்யாமல் புறப்பட்டு விட வேண்டும்.

8. தவாஃபுல் விதாஃ - விடை பெறும் தவாஃப்

ஊருக்குப் புறப்படும் முன் இறுதியாக தவாஃபுல் விதாவைச் செய்து விட்டு ஊருக்குப் புறப்பட வேண்டும். வேறு ஏதேனும் வேலைகள் இருந்தால் அவற்றை முடித்து விட்டு இறுதியாக தவாஃபுல் விதாவைச் செய்து கொள்ளலாம்.

குறிப்பு : மாதவிலக்கான பெண்கள் தவாஃபுல் விதாவைச் செய்யாமல் ஊருக்குப் புறப்படலாம்.

9. மதீனா செல்வது

மதீனாவுக்குச் செல்வது ஹஜ்ஜுக் காரியங்களில் உள்ள ஒன்று அல்ல. மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவதற்காக மதீனா செல்லலாம். நபி (ஸல்) அவர்களுடைய கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் மஸ்ஜிதுந் நபவீக்கு செல்லக் கூடாது. போன இடத்தில் ஸியாரத் செய்யலாம்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுங்கள்.

(அல்குர்ஆன் 2:196)

என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் விளம்பரங்கள் செய்யாமல் உளத் தூய்மையுடனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் போன்ற காரியங்களில் ஈடுபடாமலும் இருப்பது மிகவும் அவசியம்.


ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் பாவங்களிலிருந்து முழுமையாக நீங்கி அன்று பிறந்த பாலகனைப் போன்று ஆகி விடுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஹஜ்ஜை முடித்துவிட்டு, ஊர் திரும்பியவுடன் மவ்லிது, தர்கா வழிபாடு, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் போன்ற ஷிர்க்கான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதோடு ஹராமான செயல்களிலும் ஈடுபடக் கூடாது.

EGATHUVAM DEC 2005