அல்லாஹ்வைப்
பார்க்க முடியுமா? தொடர்
- 3
கனவுலகமும்
நினைவுலகமும்
எம்.
ஷம்சுல்லுஹா
நினைவில்
- நேருக்கு நேரில் - அல்லாஹ்வைக் காண முடியாது என்பதை விரிவாகக் கண்டோம்.
அவனைக்
கனவில் காண முடியுமா?
என்றால் அதுவும் சாத்தியமில்லை என்பதே பதிலாகும்.
மனிதன்
தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள்
எல்லாம் அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம்
என்றால் அவர் நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக
நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார்.
ஒவ்வொரு
மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து விடுகின்றது. சில
வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும். சில வேளைகளில் எந்தவித
உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால் உண்மையில் அவ்வாறு பறக்க
முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால் மிருகங்கள் பேசாது என்பது
தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு தோன்றி விடுகின்றது.
மிகவும்
அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை
முன்னறிவிப்புச் செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன் நேரடியாகக் காணும்
போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக் காண்பதற்கு முன்னர்
கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம் நிகழ்ந்து விடாது
என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இப்படி
கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்டும்
தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு சிக்கல்
நிறைந்த கனவில் அல்லாஹ்வைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.
நபி
(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்று ஒரு செய்தி சில நூற்களில் இடம்
பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.
ஒரு
நாள் சுப்ஹு தொழுகையின் போது சூரியனின் உதயத்தை நாங்கள் கண்டு விடுவோம் என்ற அளவுக்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏதோ ஒரு காரியம் தடுத்து விட்டது. திடீரென்று புறப்பட்டு வந்தார்கள். அப்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையை
சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள். ஸலாம்
கொடுத்ததும் தம் குரலால் அழைத்து "நீங்கள் உங்கள் வரிசைகளில் இருப்பது போல் அப்படியே
இருங்கள்''
என்று சொன்னார்கள்.
பிறகு
எங்களை நோக்கித் திரும்பி,
இன்று காலை உங்களிடம் வராமல் தடுத்து வைத்திருந்த காரியத்தை
உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் இரவில் உளூச்
செய்து விட்டு எனக்கென்று நிர்ணயமான அளவு தொழுதேன். அப்போது நான் என் தொழுகையில் கண்ணயர்ந்தேன். எனக்கு அது பாரமாக அமைந்தது. அப்போது நான் அழகிய தோற்றத்தில் உள்ள பாக்கியமிக்க
உயர்ந்த எனது இறைவனுக்கு முன்னிருந்தேன். அவன், முஹம்மதே! என்று அழைத்தான். அதற்கு நான், "என்
இறைவா! லப்பைக்க! (இதோ வந்து விட்டேன்)'' என்று கூறினேன். அவன், "உயர்மட்டக் குழு (வானவர்கள்)
எது தொடர்பாக விவாதிக்கின்றது என்று உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். "என் இறைவா! எனக்குத்
தெரியாது''
என்றேன். இவ்வாறு அவன்
மூன்று தடவை கேட்டான்.
அப்போது
அவன் இரு புஜங்களுக்கிடையே தன் முன்னால் கையை வைக்கக் கண்டேன். என் மார்புகளுக்கு இடையே அவனது விரல்களின் இதத்தை
உணரும் அளவுக்கு அது அமைந்திருந்தது. எனக்கு
எல்லாமே காட்சியளித்தது. நான் அறிந்து கொண்டேன். அப்போது அவன் உயர்மட்டக் குழு எது தொடர்பாக விவாதிக்கின்றது
என்று கேட்டான். பரிகாரங்கள் தொடர்பாக விவாதிக்கின்றது
என்று நான் பதிலளித்தேன். அவை என்னவென்று அவன்
கேட்டான்.
"ஜமாஅத் தொழுகையை நோக்கி
பாதங்கள் நடப்பது,
தொழுகைக்குப் பின் மஸ்ஜிதில் அமர்வது, சிரமமான
கட்டங்களில் உளூவை நிறைவாகச் செய்வது'' என நான் சொன்னேன். பிறகு எது தொடர்பாக என்று கேட்டான். "உணவளித்தல், இதமாகப்
பேசுதல், மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுதல்'' என்று பதிலளித்தேன்.
"யா அல்லாஹ்! நன்மைகள்
புரிவதையும் தீமைகளை விடுவதை யும் ஏழைகளை நேசிப்பதையும் ஏழைகளின் நேசத்தையும் எனக்கு
மன்னிப்பளித்து அருள் வழங்குவதை யும் உன்னிடத்தில் கோருகின்றேன். நீ ஒரு சமுதாயத்தைச் சோதிக்க விரும்பினால் என்னை
அந்தச் சோதனையில் ஆட்படுத்தாது மரணிக்கச் செய்! உனது நேசத்தையும் உன்னை நேசிப்பவரின்
நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் வணக்கத்தை நேசிப்பதையும் உன்னிடத்தில்
கோருகின்றேன் என்று சொல்- கேட்பீராக!'' என்று அவன் கூறினான்.
மேலும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை சத்தியமாகும். இவற்றைப் பாடமாக்கிக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:
முஆத் பின் ஜபல்(ரலி)
நூல்கள்:
திர்மிதீ 3159,அஹ்மத் 21093
இந்த
ஹதீஸில் அப்துர்ரஹ்மான் பின் ஹாயிஷ் அல் ஹள்ரமி என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி
எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. சிலர் இவரை நபித்தோழர் என்றும், தாபியி
என்றும் குறிப்பிடுகின்றனர்.
இவருக்கு
ஒரேயொரு ஹதீஸ் தான் இருக்கிறது, ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் இவருடைய விஷயத்தில்
குழப்பத்தில் இருக்கிறார் கள் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(நூல்: இஸாபா)
இதனால்
இமாம் தாரகுத்னீ அவர்கள் தமது இலல் என்ற நூலில் இது தொடர்பான அறிவிப்புக்கள் அனைத்தையும்
கொண்டு வந்து இதில் எதுவுமே சரியான ஹதீஸ் இல்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.
இதே
போன்று இமாம் பைஹகீ அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்இலல் முதனாஹியா)
எனவே
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்பது ஆதாரமற்றதாகும்.
அபூஹனீபா
அல்லாஹ்வைக் கனவில் கண்டார்களா?
நான்
கண்ணியமிக்க இறைவனை 99 தடவை கனவில் கண்டேன். நிறைவாக நூறாவது தடவை அவனைக் காணும் போது, "படைப்புகள் எதன் மூலம் இறுதி நாளில் அவனுடைய வேதனையி லிருந்து விமோசனம் பெற முடியும்? என்று
கேட்கப் போகின்றேன்''
என எனக்குள் சொல்லிக் கொண்டேன். அது போலவே நான் (நூறாவது தடவை)
கண்டேன். அப்போது,
"என் இறைவா! உன் தகுதி கண்ணியம் பெற்று விட்டது. உன் புகழ் மகத்துவம்
பெற்று விட்டது. உன்னுடைய பெயர்கள் தூய்மையாகி விட்டன. இறுதி நாளில் உன்னுடைய அடியார்கள்
உன்னுடைய வேதனையிலிருந்து எதன் மூலம் விமோசனம் பெறுவர்?'' என்று கேட்டேன். அதற்கு அவன், "காலையிலும் மாலையிலும்,
சுப்ஹான
அபதில் அபத்,
சுப்ஹான வாஹிதில் அஹத், சுப்ஹான ஃபர்திஸ்ஸமத், சுப்ஹான
ராஃபிஇஸ் ஸமாயி பிலா அமத்,
சுப்ஹான மன் பஸதல் அர்ள அலா மாஇன் ஜமத், சுப்ஹான
மன் கலகல் கல்க ஃபஅஹ்காஹும் அததா, சுப்ஹான மன் கஸ்ஸமர் ரிஸ்க வலம் யன்ஸ அஹதா, சுப்ஹானல்லதீ
லம் யத்தஹித் ஸாஹிபதன் வலா வலதா, சுப்ஹானல்லதீ லம் யலித் வலம் யூலத், வலம்
யகுன்லஹு குஃப்வன் அஹத்
என்று
யார் சொல்கின்றாரோ அவர் என்னுடைய வேதனையை விட்டும் விமோசனம், விடுதலை
பெற்று விட்டார்''
என்று அல்லாஹ் பதிலளித்தான் என அபூஹனீஃபா இமாம் சொன்னார்.
நூல்:
ஹாஷியா இப்னு ஆபிதீன்,
பாகம் 1, பக்கம் 51
அபூஹனீஃபா
இமாம் ஒரு தடவை அல்ல. நூறு தடவை பார்த்ததாக ஹனபி மத்ஹபு நூல் கதை அளக்கின்றது; காதில்
பூச்சுற்றுகின்றது.
இரு
பெரும் பாவங்கள்
ஹனபி
நூல் சொல்லும் இந்தக் கட்டுக் கதையில், கைச்சரக்கில் இரு பெரும் பொய்கள்
இடம் பெற்றிருக்கின்றன.
ஒன்று, இமாம்
அபூஹனீபா அல்லாஹ்வைப் பார்த்தார் என்ற செய்தி. மற்றொன்று, அல்லாஹ்
அவருக்கு சில திக்ருகளை,
இன்னும் சொல்லப் போனால் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை விட ஒரு
பெரிய அத்தியாயத்தை இறக்கினான் என்பது!
இந்த
இரண்டு கருத்துக்களுமே மிகப் பெரும் பாவங்களாகும்.
"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால்
இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர
(வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.''
(அல்குர்ஆன் 42:51)
இந்த
வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுடன் பேசுவதற்கு வகுத்துள்ள இந்த மூன்று வழிகளைத் தவிர வேறு
வழியில் அல்லாஹ் பேசினான் என்று யாரும் கூறினாலும் அது தெளிவான பொய் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின்
பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும்
எனக்கு அறிவிக்கப்படுகிறது’
எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும்
இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி
இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை
நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின்
பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும்
இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்)
(அல்குர்ஆன் 6:93)
மேலும்
இந்தச் சமாச்சாரத்தில் ஒரு விஷ வித்தும் விதைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
தமது சமுதாயத்தை மறுமை நாளின் வேதனையிலிருந்து காக்கின்ற கைங்கர்யத்தைச் சொல்லத் தவறி
விட்டார்கள். அந்தத் தவறை அபூஹனீபா நிவர்த்தி செய்கின்றார்கள் என்பது தான் அந்த விஷ
வித்து.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மக்களைக் காக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. இதோ நான் கவனம்
செலுத்துகின்றேன் என்ற அதிகப் பிரசங்கித்தனம் தெளிவாகவே தொனிக்கின்றது.
இதில்
கிடைக்கின்ற வேறொரு விபரீதம் என்னவெனில், இன்று ஒருவர், "ஐந்து வேளை தொழுகை இல்லை'' என்று அறிவிக்க முடியும். "இதை நீ எப்படி
அறிவிக்கலாம்?''
என்று நாம் கேட்கப் போனால் அதற்கு அவர், "கழிந்த இரவில் நான் அல்லாஹ்வைப் பார்த்தேன். அவன் தான் இந்தச் சலுகையை அறிவித்தான்'' என்று தெரிவிப்பார். இது போன்று ஒவ்வொரு இயக்கத்தாரும், தங்கள்
இயக்கத்தை வலுப்படுத்த,
வளப்படுத்த இந்தச் சூத்திரத்தைக் கையாள்வர். எனவே இது போன்ற
ஒரு வாசல் திறக்கப்படுவது மிகவும் அபாய கரமானது, ஆபத்தானது.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைத்தே இன்று அசத்தியவாதிகள் எத்தனையோ விளையாட்டு காட்டுகையில், அல்லாஹ்வின்
பெயரைச் சொல்லி,
என்ன விளையாட்டு காட்டுவார்கள்?
இப்படித்
தான் அபூஹனீபா பெயரைச் சொல்லி இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள். இப்படி எவர்
சொன்னாலும் நாம் முன் வைக்கும் கேள்வி இது தான். சம்பந்தப்பட்டவர் அல்லாஹ்வைத் தான்
பார்த்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அல்லாஹ் என்ற பெயரைச் சொல்லி
ஷைத்தான் வர மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை எழுப்புவோம்.
எனவே
அபூஹனீஃபா மட்டுமல்ல,
உலகில் வேறு எவரும் அல்லாஹ்வைக் கனவில் காண முடியாது என்பதே
உண்மையாகும்.
EGATHUVAM DEC 2005