Mar 30, 2017

அபூஹனீஃபாவிற்கு வஹீ வந்ததா?

அபூஹனீஃபாவிற்கு வஹீ வந்ததா?

பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவனைப் பரிபாலித்து வருகின்றான். அவனை மனம் போன போக்கிலே போக விடாமல் அவன் முறையாக வாழ்வதற்கான நேர்வழியைக் காட்டுவதற்கு மனிதர்களிலிருந்தே தூதர்களையும், வேதங்களையும் அனுப்பி வைத்தான்

அத்தூதர்களின் வரிசையில் இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி அவர்களோடு தூதுத்துவத்தை முடித்து இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்தினான்.

அவர்களுக்குப் பின் இந்தப் பொறுப்பை கற்றுணர்ந்த அறிஞர்களுக்குக் கடமையாக்கினான். அவ்வாறு மார்க்கப் பணி செய்து வந்த நல்லவர்கள், மகான்கள், இமாம்கள் ஆகிய சான்றோர்களை அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் இறைத் தூதர்களின் நிலைக்குக் கொண்டு சென்றனர்.

சிலர் அவர்களை நபிமார்களின் அந்தஸ்திற்கு உயர்த்தினார்கள் என்றால் இன்னும் சிலர், படைத்த ரப்புல் ஆலமீன் நிலைக்கே கொண்டு சென்று விட்டனர். அது மட்டுமல்லாது அவர்கள் மீது இல்லாததையும் பொல்லாததையும் எழுதவும் பேசவும் துணிந்து விட்டனர்.

அந்த வகையில் மத்ஹப் பிரியர்கள் பிரசித்திப் பெற்ற நான்கு இமாம்களில் ஹனஃபி மத்ஹபின் இமாம் அபூஹனீஃபா அவர்களை மிகவும் அதிகமாகத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றனர். அவருக்கு மரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு அவர் பெயரால் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் மாற்றமான கதைகளையும் புனை மூட்டை களையும் அவிழ்த்து விடுகின்றனர்.

இமாமுல் அஃலம்

மற்ற இமாம்களைச் சொல்லும் போது இமாம் என்று வெறுமனே தான் கூறுகிறார்கள். ஆனால் அபூ ஹனீஃபாவைப் பற்றிக் கூறும் போது இமாமுல் அஃலம் (மகத்தான இமாம்) எனறு கூறுகிறார்கள். மற்ற இமாம்களுக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. "எல்லா இமாம்களும் சமமானவர்களே, அவர்களில் யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம்'' என்று வாயளவில் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இமாம் அபூஹனீஃபாவை மற்ற இமாம்களைக் காட்டிலும் அதிகம் சிறப்பிக்கிறார்கள். இமாம் களுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றார்கள். அவர் மீது கொண்ட வெறியால் அல்லாஹ்வின் அந்தஸ்திற்கும் அவனுடைய தூதரின் அந்தஸ்திற்கும் அவரைக் கொண்டு செல்கின்ற வகையில் பொய்களைக் கூறுகின்றார்கள்.

இறைத் தூதருக்குப் பிறகும் வஹீ வருவதாக இவர்கள் வாக்கு மூலம் கொடுக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அல்லாஹ் எவருடனும் பேச மாட்டான் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கியக் கொள்கைக் கோட்பாடாகும். ஆனால் அபூ ஹனீஃபாவிற்கு வஹீ வந்ததாக இந்த ஆலிம்கள் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக நம்புகின்றனர்.

இதோ அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

அவருக்கென்று ஒரு பிரபலமான சம்பவம் உண்டு. அது, அவர் கடைசியாக செய்த ஹஜ்ஜின் போது கஃபாவின் இரண்டு தூணுக் கிடையில் ஓர் இரவில் நின்றார்களாம். இடது காலை வலது கால் மேல் வைத்து வலது காலில் நின்று அதாவது ஒற்றைக்காலில் நின்று குர்ஆனில் சரிபாதியை ஓதி தொழுதார்களாம். பிறகு ருகூஃ, சுஜூது செய்தார்களாம். பிறகு வலது காலை இடது காலின் மீது வைத்துக் கொண்டு இடது ஒற்றைக் காலில் நின்று முழுக் குர்ஆனையும் ஓதி ஒரே இரவில் தொழுது முடித்து விட்டார்களாம். பிறகு ஸலாம் கொடுத்து முடித்தவுடன் அழுதார்களாம்.

மேலும் தனது ரட்சகன் அல்லாஹ்விடம் உரையாடல் புரிந்தார்களாம். அப்போது அவர்கள் "இறைவா! இந்தப் பலவீனமான உன்னுடைய அடியான் உன்னை அடி பணியும் முறையில் அடி பணியவில்லை என்றாலும் அவன் உன்னை அறிய வேண்டிய முறையில் அறிந்து வைத்துள்ளான். எனவே அவன் பரிபூர்ணமாக விளங்கி வைத்ததற்காக நீ அவனின் குறைகளை நிறைவு செய்வாயாக!'' என்று கூறினார்களாம். அப்போது இறை இல்லமான கஃபாவின் ஒரு புறத்திலிருந்து "அபூஹனீஃபாவே நீ என்னை முழுமையாக அறிந்து கொண்டாய்! பணிவிடை செய்தாய்! அழகான முறையில் பணிவிடை செய்தாய்! உன்னையும் கியாமத் நாள் வரை உன்னைப் பின்பற்றுகின்ற வர்களையும் நான் மன்னித்து விட்டேன் என்று அசரீரி வந்ததாம். அதாவது வஹீ வந்தது.

இச்சம்பவம் துர்ருல் முக்தாரில் பாகம் 1, பக்கம் 51, 52ல் கூறப்பட்டுள்ளது.

நி         ஒற்றைக் காலில் நின்று தொழுவதற்கு அனுமதி உள்ளதா?

நி         ஒரே இரவில் முழுக் குர்ஆன் ஓதித் தொழுவது சாத்தியமா?

நி         அபூஹனீஃபா அல்லாஹ்வை முழுமையாக அறிந்து கொண்டார்களா?

நி         கியாமத் நாள் வரையுள்ள ஹனபி மத்ஹபினர் அனைவரும் முன் கூட்டியே பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களா?

என்ற கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

இவ்வாறு அல்லாஹ் அசரீரியிலோ அல்லது மற்ற வகையிலோ நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு மற்றவர்களிடம் பேசுவானா? இது பற்றி, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பார்ப்போம்.

வஹீ என்றால் என்ன?

வஹீ என்றால் அறிவித்தல் என்பதே பொருள். இஸ்லாமிய வழக்கில் வஹீ என்பது இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பது பொருளாகும்

இஸ்லாம் நிறைவு பெற்றதுடன் இறைவனின் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்கள் இறந்ததோடு இந்த வஹீ நின்று விட்டது. நுபுவ்வத் நிறைவு பெற்று விட்டதால் இனிமேல் வஹீ என்ற இறைச்செய்தி யாருக்கும் வரவே வராது. அதிலும் மார்க்க சம்பந்தமான காரியங்களிலும் அதனுடைய சட்ட சம்பந்தமான காரியங்களிலும் இறைவன் என்னிடத்தில் உரையாடி னான், அசரீரியில் சொன்னான் என்று யார் கூறினாலும் அது மாபெரும் புருடாவாகும். காரணம் மார்க்கம் பூர்த்தியாகி விட்டது

"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' என்று இறைவன் குர்ஆனில் கூறுவதன் மூலம் இனி எவரிடமும் அவன் பேச மாட்டான் என்பதை உணர்த்தியுள்ளான். மார்க்க சம்பந்தமான சட்ட திட்டங்களில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் யாரிடமும் பேச மாட்டான் என்று முடிவு செய்து விட்டான்.

முபஷ்ஷராத் என்ற நல்ல மூமின்களின் கனவின் மூலம் சில முன்னறிவிப்புகளை அறிவிப்பானே தவிர வேறு எதனையும் யாரிடமும் அறிவிக்க மாட்டான். இந்த முன்னறிவிப்புகள் கூட கனவின் மூலம் சொல்வானே தவிர நேரடியாக நாம் உரையாடுவதைப் போன்று சொல்ல மாட்டான்.

அல்லாஹ் நேரடியாக ஒரு நபியிடம் பேசியிருக்கிறான் என்றால் அதற்கு மூஸா நபியை உதாரணமாக கூறலாம். அனைத்து நபிமார்களிடத்தில் கூட அல்லாஹ் இவ்வாறு பேசியதில்லை. சில நபிமார்களுக்கே கிடைக்காத இந்த வாய்ப்பு சாதாரண மனிதரான அபூஹனீஃபாவிற்குக் கிடைத்தது என்று சொன்னால் நபிமார்களை விட அபூஹனீஃபா உயர்ந்தவர் என்றாகி விடும்.

இந்தக் கருத்தை சாதாரண அறிவு உள்ள எந்த முஸ்லிமும் ஏற்க மாட்டான். நபித்துவமும் சகல விதமான வஹீயும் நின்று விட்டது என்பதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

வஹீ (இறைச்செய்தி) நின்று விட்டது

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்காவது வஹீ வர வேண்டும் என்றால் நபித் தோழர்களுக்குத் தான் வர வேண்டும். ஆனால் அவர்களே வஹீ வரவில்லை என்பதை அறிவித்து விட்டார்கள்.

அபூபக்ர் (ரலீ) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு உமர் (ரலீ) அவர்களை நோக்கி, "நாம் இருவரும் உம்மு அய்மன் (ரலீ) அம்மையாரைச் சந்தித்து வருவோம்'' என்றார்கள். காரணம் நபி (ஸல்) அவர்கள் அந்த அம்மையாரை அடிக்கடி சந்தித்து வருபவர்களாக இருந்தார்கள்.

அது போல அவரை அவ்விருவரும் சந்திக்கச் சென்ற போது அந்த அம்மணி அவ்விருவரையும் பார்த்து அழத் துவங்கினார்கள். அவ்விருவரும் "ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதருக்கு அல்லாஹ்விடத்தில் நன்மைகள் தானே கிடைக்கும்'' என்றார்கள்.

அதற்கு அவர் "அல்லாஹ்விடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நன்மையே கிடைக்கும் என்பதை நான் அறிவேன். நான் அது கிடைக்காது என்பதற்காக அழவில்லை. என்றாலும் வானிலிருந்து வரும் வல்லவன் அல்லாஹ்வின் வஹீ (இறைச்செய்தி) நின்று விட்டதே என்பதற்காக அழுகிறேன்'' என்று சொன்னார்கள். அவ்வம்மையார் அவ்விருவரையும் அழ வைத்து விட்டார்கள். எனவே அவரோடு அவ்விருவரும் அழத் துவங்கினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ)

நூல்: முஸ்லிம் 4492

உமர் பின் கத்தாப் அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் வஹீயின் வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது (நபியவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடித்துத் தண்டிப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாக தெரிபவற்றைக் கொண்டு தான்.

ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்து கின்றாரோ அவரை நம்பிக்கைக் குரியவராக்கி, கவுரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கில் எடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப் படுத்துகிறோரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடன் இருக்க மாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே!

நூல்: புகாரி 2641

"நபித்துவத்தில் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) தவிர வேறெதுவும் மீதியிருக்கவில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். அப்போது மக்கள், "நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?'' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "நல்ல (உண்மையான) கனவு'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6990)

"நபித்துவம் சென்று விட்டது. (முபஷ்ஷிராத்) நற்செய்தி கூறுகின்றவை எஞ்சியுள்ளன'' என நபி (ஸல்) கூற நான் கேட்டேன் என உம்மு குர்ஸ் (ரலி) கூறினார்கள்.

(நூல்கள்: இப்னு மாஜா 3886, அஹ்மத் 25890, தாரமீ 2045)

ரிஸாலத்தும், நுபுவ்வத்தும் முடிந்து விட்டது. எனக்குப் பின்னால் ரசூலும் இல்லை, நபியும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் மக்களுக்கு இது கஷ்டமாக இருந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள், ஆனால் முபஷ்ஷிராத் (சுபச்செய்திகள்) உண்டு என்று கூறினார்கள் என இதே செய்தி திர்மிதீயில் 2198வது ஹதீஸாகப் பதியப்பட்டுள்ளது.

நுபுவ்வத் என்னும் இறை வெளிப்பாடு இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். முதலாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை களையும் அதன் சட்ட திட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.

இரண்டாவது, இனி நடக்க இருப்பதைப் பற்றி முன்னறிவிப்பு செய்வதாகும். இந்த இரண்டு விஷயங்களையே எல்லா நபிமார்களும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு விளக்கினார்கள். மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் வருங்காலத்தில் நடக்கவுள்ளவற்றில் சிலவற்றை முன்னறிவிப்பு செய்யும் வகையிலும் அவர்களின் போதனை கள் அமைந்துள்ளன என்பதை நபிமார்களின் போதனைகளை ஆராயும் போது நாம் அறியலாம்.

நுபுவ்வத்துடைய இந்த இரண்டு அம்சங்களில் எந்த அம்சம் பற்றி நபி (ஸல்) அவர்கள் இங்கே கூறியிருப்பார்கள் என்பதை நாம் முடிவு செய்தாக வேண்டும். முதல் அம்சத்தைப் பற்றி இங்கே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கவே முடியாது. ஏனெனில் சட்ட திட்டங்களும் அடிப்படைக் கொள்கைகளும் நபி (ஸல்) அவர்களால் விளக்கப்பட்டு விட்டன. அதில் எந்தக் குறையும் வைக்கப்படவில்லை.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டேன். (அல்குர்ஆன் 5:3) என்ற வசனமே இதற்குப் போதிய சான்றாகும். இறைவனால் நபி (ஸல்) அவர்கள் வழியாக மார்க்கம் முழுமைப்படுத்தப் பட்ட பின் எவரது கனவின் மூலமும் எந்தச் சட்டத்தையும், மார்க்கச் செய்தியும் கூற வேண்டிய அவசியம் இல்லை.

கனவுகள் மூலமும் மனிதன் இறைச் சட்டங்களைப் பெற முடியும் என்றால் மார்க்கம் முழுமையாகி விட்டது என்பதற்கு அர்த்தம் இல்லாது போய் விடும். இன்னும் சொல்வதென்றால் நபிமார்கள் அனுப்பப்படவேண்டிய அவசியமும் இல்லை என்றாகி விடும். கனவுகள் மூலமே எல்லாச் சட்ட திட்டங்களையும் இறைவன் மனிதர்களுக்கு அறிவித்து விடுவான்.

எனவே, "கனவில் நுபுவ்வத்துடைய அம்சம் உள்ளது' என்பதற்கு கனவில் சட்ட திட்டங்களைப் பெறலாம், கனவில் காட்டப்படுவது போல் நடந்து கொள்ளலாம் என்று அர்த்தம் செய்து கொள்ள முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகி விடுகிறது.

அப்படியானால் நுபுவ்வத்துடைய அம்சம் என்பதற்கு இரண்டாவது விளக்கத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு நாளை வரக் கூடிய செல்வம், குழந்தைகள், ஆபத்துகள், அனுகூலங்கள் ஆகியவற்றில் சிலவற்றை இறைவன் சிலருக்குக் கனவின் மூலமாக காட்டிக் கொடுக்கக் கூடும் என்பதே அதன் கருத்தாக இருக்க முடியும். இதைத் தெளிவாகவே கூறக் கூடிய சான்றுகளையும் நாம் காண முடிகின்றது.

"நுபுவ்வத்தில் நற்செய்தி கூறக் கூடியவைகளைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிருக்கவில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நற்செய்தி கூறக் கூடியவை என்றால் என்ன?'' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நல்ல கனவுகள்'' என்றார்கள்.

நுபுவ்வத்தை இரண்டு அம்சமாக நபி (ஸல்) அவர்களே இங்கே பிரித்துக் காட்டி விட்டு நற்செய்தி கூறக் கூடியவைகளைத் தவிர மற்றவை, அதாவது மார்க்கம் தொடர்பாகக் கூறும் இறைச் செய்திகள் முடிந்து விட்டன என்று திட்டவட்டமாக அறிவித்து விடுகிறார்கள். இந்த ஹதீஸைச் சிந்திக்கும் போது இதை நன்றாக விளங்கலாம்.

ஆனால் அபூஹனீஃபாவுக்கு வஹீ வந்ததாக இந்தக் கதையைப் புனைந்தவர் எந்த அளவுக்கு மத்ஹப் வெறி தலைக்கு ஏறியிருந்தால் இவ்வாறு அல்லாஹ்வின் மீதே இட்டுக்கட்டிக் கூறியிருப்பார்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களை பொய்யெனக் கருதுபவனை விட அநியாயக்காரன் வேறு யார்? அநியாயக்காரர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:21)


இது போன்று அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்களை நம்பாமல் தூய ஈமானுடன் மரணிக்கும் பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

EGATHUVAM DEC 2005