Mar 30, 2017

ஜிஹாதும் இஜ்திஹாதும்

ஜிஹாதும் இஜ்திஹாதும்

இஸ்லாத்தின் இனிய தோற்றம் சிதைக்கப்படுவதற்கு யார் காரணம்? தாலிபான்கள் தான். அவர்கள் தான் ஆப்கான் மண்ணில் எல்லைச் சாலைகள் அமைப்பு என்ற இந்திய அரசு நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றிய மணியப்பனைக் கொலை செய்து சாலையில் வீசிச் சென்றனர். இந்த மணியப்பன் என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டார் என்பது அவருக்குத் தெரியாது.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! கொலை செய்தவனுக்கு அவன் எதற்காகக் கொலை செய்தான் என்ற காரணம் தெரியாது. தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்ற காரணம் கொலையுண்டவனுக்கும் தெரியாத ஒரு காலம் மக்களிடம் வரும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5177

மணியப்பன் குட்டி ஆப்கான் மண்ணில் கொல்லப்பட்ட நிகழ்வு, அந்தக் காலம் இது தான் என்று எண்ண வைக்கிறது. ஏனெனில் ஒரு மனிதன் கொல்லப்பட வேண்டுமானால் மூன்று காரணங்களுக்காகக் கொல்லப் பட வேண்டும்.

1. போர்

போரில் தான் அடையப் போவது வெற்றி அல்லது வீர மரணம் என்பதை இலட்சியமாகக் கொண்டு தான் ஒருவன் களத்திற்கு வருகின்றான்.

2. குற்றவியல்

ஒரு மனிதனின் உயிருக்கு எது வரை உத்தரவாதம்? என்று கேட்டால், அடுத்தவரின் உயிரைப் பறிக்காத வரை என்பது உலகம் முழுவதும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். கொலை அல்லது திருமணத்திற்குப் பின் விபச்சாரம் போன்ற குற்றங்களுக்காக ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படும் மரண தண்டனை.

3. தற்காப்பு

தன்னை ஒருவன் கொல்ல வருகின்றான் என்று உறுதியாகத் தெரியும் போது, தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவனைக் கொலை செய்வது.

இந்த மூன்று அடிப்படைகளில் தான் ஒருவனின் உயிரைப் பறிக்க முடியும். இதல்லாத காரணத்திற்காக ஒருவன் கொலை செய்யப்பட்டான் என்றால் அவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்று தான் அர்த்தம். இது நிச்சயமாக மனிதர்கள் அனைவரையும் கொலை செய்ததைப் போன்றதாகும்.

"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். (அல்குர்ஆன் 5:32)

இப்போது தாலிபான் இந்தப் பாவத்தைத் தான் செய்திருக்கின்றது.

ஆப்கான் மீது மணியப்பன் குட்டி போர் தொடுக்க வந்தாரா? என்றால் நிச்சயமாக இல்லை. அவர் ஆப்கான் மண்ணைச் செம்மைப் படுத்துவதற்கும், செப்பனிடுவதற்கும் தான் வந்தார். இந்தியா - ஆப்கான் நட்புறவுத் திட்டத்தின் கீழ் ஜரான்ச் - தேலாராம் சாலையை அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டுள்ளது. எல்லைப் புறச் சாலைகள் நிறுவனம் செய்து வரும் இந்தப் பணித் திட்டத்தின் கீழ்  தன்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக காரோட்டியாகப் பணியாற்றினார். அவரைத் தான் தாலிபான்கள் கடத்திச் சென்று கொன்றிருக்கிறார்கள்.

இவர் ஆப்கானுடன் போர் செய்யவோ, அல்லது உளவு வேலை பார்க்கவோ வரவில்லை. இந்நோக்கங்களுக்காக அல்லாமல் வெறும் பிழைப்புக்காக வந்தவரை அழைத்துச் சென்று கொல்வது எந்த அடிப்படையில் நியாயம்?

ஒரு நாட்டின் குற்றவியல் சட்டத்தின் படி இவர் குற்றவாளியாக இருந்து அவருக்கு இத்தகைய மரண தண்டனையை அளித்திருந்தால் அதனை நியாயம் என்று சொல்லலாம். மரண தண்டனைக்கான குற்றம் எதையும் இவர் செய்தவரல்ல! அப்படியிருக்கையில் இவருக்கு எந்த  அடிப்படையில் இந்த மரண தண்டனை வழங்கப்பட்டது?

மணியப்பன் குட்டி, யாரையாவது தாக்கச் சென்று அதனால் பாதிக்கப் படவிருந்தவர் - படுகொலை செய்யப் படவிருந்தவர் இந்தக் கொலையைச் செய்து விட்டார் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. அந்த நியாயம் கூட இதில் இல்லையே!

எனவே இந்த மூன்று அடிப்படைகளில் ஏதேனும் ஒன்றின் படி இவர் கொல்லப்படவில்லை எனும் போது நிச்சயமாக இவர் அநியாயமாகத் தான் கொல்லப்பட்டிருக்கின்றார். தாலிபான்கள் அத்துமீறி, ஜிஹாத் என்ற போர்வையில்  இவரைக் கொன்றுள்ளனர். இது போன்ற தப்பான முடிவால் தான், தற்கொலை முடிவால் தான் தாலிபான் தன்னை அழித்துக் கொண்டு விட்டது. எதையுமே மார்க்கத்தின் அடிப்படையில் நிலை நாட்டும் போது அங்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். இல்லையேல் அங்கு அல்லாஹ்வின் தண்டனை தான் கிடைக்கும்.

தாலிபானும் தற்கொலைத் தாக்குதல்களும்

தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

"ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார்.  உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)

நூல்:  புகாரி 1364

"யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார்.  யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.  எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.  ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காகத் தற்கொலை செய்யலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர்.

ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.  தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை.  இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.  இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒரு சேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர்.  ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல!  இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை.  உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது.  இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு தவறான வியாக்கியானம் கூறி இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான்.  தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது.

உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும்.  ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது.  இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம்.  போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமாஅவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமாஅல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமாநோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள்.  உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப் பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப் படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள்.  ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும்  அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.  இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.  ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப் படுவதை முதலில் அனுமதித்தனர்.  பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.  ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர்.  இதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, "அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே!'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.  இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர்.  சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன.  அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 15036, 15037)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டதால் தான் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள்.  இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொது மக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப் படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது.  ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர்.  இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

(இது குறித்து, தலையங்கத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள்.  ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் தனது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.

ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்று குறி வைத்து, அவரைக் கொல்வதற்காக ஒரு விமானத்தையே குண்டு வைத்துத் தகர்க்கிறார்கள். அல்லது பல்லாயிரம் பேர் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தில் குண்டு வைக்கிறார்கள். அங்கு அந்தத் தலைவரைச் சுற்றியிருந்த கைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், கண் பார்வை தெரியாத முதியவர்கள் போன்றோர் இருப்பதையெல்லாம் கவனிக்காமல் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

போரில் கூட பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கொல்லப்படக் கூடாது என்ற நெறியைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, குறியை மட்டும் இலக்காகக் கொண்டு அப்பாவிகளையும் சேர்த்து இந்தத் தற்கொலைப் படை கொன்று விடும். இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எப்படிச் சரியாகும்?

உண்மையில் இத்தகைய முடிவை எடுப்பவர் தங்களை மட்டும் அன்றி தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் சேர்த்தே அழிக்கின்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

ஆப்கானில் தாலிபான்கள் நடத்திய ஆட்சியை யாரும் குறை சொல்லவில்லை. ஆப்கான் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது அதையும் நாம் கண்டிக்கத் தவறவில்லை. ஆனால் தாலிபான்கள் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமான ஒரு நிலையைத் தேர்ந்தெடுத்தார்களே! அது தான் அவர்களுக்குக் கேடாக அமைந்து விட்டது.

உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் இந்த அடிப்படையில் உள்ளது தான். இந்தத் தாக்குதலுக்கு முன்னால் அமெரிக்கா, ஆப்கானைக் கண்டு அரண்டு போயிருந்தது. அச்சத்தில் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால் என்றைக்கு உலக வர்த்தக மையத்தின் மீது கை வைக்கப்பட்டதோ அன்றைக்கே ஆப்கான் மீது மோதிப் பார்க்கத் துணிந்து விட்டது. கடைசியில் ஆப்கானைத் துடைத்தெடுத்து விட்டது. அத்துடன் அமெரிக்கா நின்று விடவில்லை. இராக்கில் நுழைந்து அங்குள்ள ஆட்சியை நிர்மூலமாக்கியது. இப்போது சிரியாவில் நுழைவதற்கு சாக்கு போக்குகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது.

பாதிப்புகள் இத்துடன் நிற்கவில்லை. ஆக்கப்பூர்வமாக நடைபெற்ற அழைப்புப் பணிகளிலும், அனாதைகளுக்குச் சேர வேண்டிய உதவிகளிலும், அல்லாஹ்வின் ஆலயங்கள் கட்டுவதற்கான நிதியாதாரங்களிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

செய்த தவறும் செய்யத் தவறியதும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் தெளிவாகத் தடுக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தவிர்த்து விட்டு, தான் அமைத்த ஆப்கான் அரசை மேலும் மேலும் வலுப்படுத்தி அதன் மூலம் இஸ்லாமிய அரசுகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களை ஓரணியில் திரட்டியிருக்கலாம். நியாயமான முறையில், நீதியின் அடிப்படையில் அமெரிக்கா போன்ற ஆதிக்க சக்திகளை எதிர்ப்பதற்கு ஒரு தேர்ந்த போராளிப் படையை உருவாக்கி இருக்கலாம். அதற்காக நீண்ட காலம் காத்திருந்து, சரியான வியூகத்துடனும், மதி யூகத்துடனும் செயல்பட்டு, இது போன்ற தற்கொலைத் தாக்குதலில் அல்லாமல் எதிரிகளைக் களத்தில் சந்தித்திருக்கலாம்.

அப்போது இஸ்லாமிய மார்க்கம் சாந்தியும், சக்தியும் ஒரு சேர அமையப் பெற்ற சரியான மார்க்கம் என்ற உண்மை புரிய வைக்கப்பட்டிருக்கும்.

அந்த வாய்ப்பையெல்லாம் தாலிபான் படை தகர்த்து எறிந்து விட்டு, தற்குறித்தனமான தற்கொலைத் தாக்குதலைக் கைவசம் எடுத்ததால் தனது ஆட்சியை மட்டுமல்லை, இப்போது தன்னையும் சுத்தமாக அழித்துக் கொண்டிருக்கின்றது.


தற்போது மணியப்பன் குட்டி படுகொலையின் மூலம் குர்ஆன், ஹதீசுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

EGATHUVAM DEC 2005