இறையருள் பெற...
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, வணக்க வழிபாடுகள் புரிந்து, நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்திட வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் பல முஸ்லிம்களிடம் இருக்கின்றது. எனினும் அதனடிப்படையில் செயல்படத் துவங்கும் போது ஷைத்தான் ஏதேனும் வழியில் குறுக்கிட்டு அத்தகைய நன்மக்களை நல்லமல்கள் புரிவதை விட்டும் தடுத்து, கெடுத்து விடுகிறான்.
"நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று (இப்லீஸ்) கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).
திருக்குர்ஆன் 7:16,17
நல்லோர்களை வழிகெடுப்பதே ஷைத்தானின் இலக்கு என்பதால் நன்மைகள் புரிவதற்கு பெரும் தடைக்கல்லாக ஷைத்தான் திகழ்கிறான் என்பது உறுதி. அவனது சதிவலைகளைத் தாண்டி நல்லமல்கள் புரிய வேண்டும் எனில் அதற்கு இறையருள் அவசியம் தேவையான ஒன்றாகும்.
இறைவனை வழிபடுவதற்கு இறையருள் தேவை என்பதால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, "முஆதே! உன்னை நான் நேசிக்கின்றேன். முஆதே!
அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக
பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் (ரலி), நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 1286