May 23, 2017

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று 3 - ஊரின் எதிர்ப்பு உறுதியைத் தரட்டும்

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று 3 - ஊரின் எதிர்ப்பு உறுதியைத் தரட்டும்

சொந்த ஊரிலே மார்க்கப்படி தைரியாமாகச் செயல்படும் சிலர், வெளியூருக்குச் சென்றால் தங்கள் வழிபாட்டு முறையையே மாற்றிக் கொள்கிறார்கள். இதுபோன்று, உள்ளூரில் கொள்கையை மறைத்து கமுக்கமாக இருப்பவர்கள், வெளியூரில் மட்டும் ஏகத்துவவாதியாக அறிவித்துக் கொண்டு வீரியத்துடன் ஈடுபடுகிறார்கள்.

இப்படி நம்முடைய மார்க்க கருத்துக்களை ஊருக்குத் தோதுவாக திரிக்கவோ, வளைக்கவோ கூடாது. ஊருக்கு ஏற்ப வேடம்போடக் கூடாது. ஏகத்துவமே என் வழிமுறை என்று எங்கும் பகிரங்கப்படுத்தத் தயங்கும் நபர்கள் பின்வரும் செய்திகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அபூதர் (அல்கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது, மக்காவிற்கு வந்து நபிகளாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதையடுத்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் உங்கள் "கிஃபார்' குலத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்துசேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று சொன்னார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! நான் இந்தச் செய்தியை (மக்கா இறைமறுப்பாளர்களான) இவர்களிடையேயும் உரக்கச் சொல்வேன்'' என்று சொல்விட்டு, (கஅபா) பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் உறுதிமொழிகிறேன்'' என்று கூறினார்.

உடனே அங்கிருந்த (குறைஷி) மக்கள், கொதித்தெழுந்து, அவரை அடித்துக் கீழே சாய்த்தனர். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். "உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! இவர் "கிஃபார்' குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (கிஃபார் குலத்தார் வசிக்கும்) ஷாம் (சிரியா) நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியாதா?'' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அதே போன்று (உரத்த குரலில் உறுதிமொழி) சொல்ல, அவர் மீது பாய்ந்து (குறைஷியர்) தாக்கினர். (அன்றும்) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல்) அவரைக் காப்பாற்றினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 3522, 4879

அல்லாஹ்வின் அனுமதியோடு நபியவர்கள் தமது தஃவா பணியை இரகசியமாகச் செய்து வந்த போது, நம்பிக்கையை மறைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட போது இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால், இன்று ஊரிலே சகல உரிமையையும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் நிலையில் இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? மார்க்கப் பாதையை விட்டு சறுகிக் கிடக்கும் ஊர் ஜமாஅத்திற்கு எதிராக வாய் திறப்பதற்கு எத்தனை பேருக்குத் துணிவு இருக்கிறது? இதே கேள்வியும் படிப்பினையும் கீழிருக்கும் செய்தியிலும் இருக்கிறது.

மக்காவில் முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அபிசீனியாவை நோக்கி, நாடு துறந்து சென்றார்கள். யமன் செல்லும் வழியில் "பர்குல் கிமாத்' என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர், ஆபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். அவர்களின் நற்காரியங்களைக் குறிப்பிட்டு ஊர் திரும்புமாறு கேட்டுக் கொண்டார். அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இப்னு தஃகினாவும் ஊர் திரும்பினார். அவர் குறைஷிகளைச் சந்தித்து அபூபக்ர் அவர்களின் பண்புகளை நினைவுடுத்திவிட்டு அவருக்கு அடைக்கலம் அளிப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைப் படியுங்கள்

(அபூபக்ர் அவர்களுக்கு அளித்த) இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, "அபூபக்ர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (அவரது வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்'' என்று சொன்னார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும், தமது தொழுகையை பகிரங்கப் படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணை வைப்பவர்களின் மனைவியரும் மக்களும் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.

(அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், "அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை'' என்று கூறினர்.

இப்னு தஃகினா அபூபக்ர் அவர்களிடம் வந்து, "நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன் ''என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணிய மிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி (3905)

ஊரின் அழிவை அஞ்சுவோம்
சில மக்கள், ஊரில் அதிகமான பேர் இருக்கும் அணியிலே தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்கைக் கோட்பாடு எப்படி இருக்கிறது என கொஞ்சமும் சிந்திப்பது இல்லை. மார்க்கத்தைத் தூக்கியெறியும் விரோதப் போக்கு கொண்டவர்களுடன் சேர்ந்து இயங்குகிறார்கள். ஏகத்துவத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள். இவர்கள் எந்த ஊருக்காக உண்மையை உதறித் தள்ளுகிறார்களோ அது அழியக் கூடியது; அற்பமானது என்பதை உணரட்டும். அல்லாஹ் எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறான். இது குறித்த நிறைய வசனங்கள் திருமறையில் இருக்கின்றன. அவற்றைப் படித்த பிறகாவது உன்னதமான தீனை விடவும் ஊரே முக்கியமென தப்புக் கணக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 46:27

(அழிக்கப்பட்ட) அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 7:94-96

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பகல் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

திருக்குர்ஆன் 7:97-99

ஊர் மீதான பாசமோ பயமோ ஒருபோதும் நமது மார்க்கப்பற்றை மிகைத்து விடக் கூடாது. அல்லாஹ்வுக்கு அஞ்சி அழகிய முறையில் மார்க்கத்தைப் பின்பற்றுவோம். ஊருக்கும் உலகத்திற்கும் ஏற்ப கொள்கையில் சமரசம் செய்யாமல், மார்க்க ஆதாரங்களுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்வோம்.



அல்லாஹ்வை மட்டும் வணங்குவோம்; முஹம்மது நபியை மட்டும் பின்பற்றுவோம். மரணிக்கும் வரை தவ்ஹீத் வழியிலே பயணத்தைத் தொடர்வோம். அல்லாஹ்வின் அருளும் உதவியும் நிச்சயம் கிடைக்கும். ஊராரின் சூழ்ச்சிகளும் இடைஞ்சல்களும் தூள்தூளாக உடைந்து போய்விடும். அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்லும். உலக வாழ்வில் மட்டுமல்ல! மறுமையிலும் வெற்றிபெற இறைவன் நமக்கு உதவிபுரிவானாக.

EGATHUVAM JUL 2016