மனிதநேய மார்க்கம்
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும்
இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.
இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு
இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற
இணைப்பாகும்.
மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே
தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.
மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும்
தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே
இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில்
மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம்
அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம்
என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.
ஒரு தாய் மக்கள்
மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத்
தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள்
என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம்
உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம்
உண்டாகிவிடும்.
இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.
மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி
ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான
அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை
அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம்
மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும்
(அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:1
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே
அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
திருக்குர்ஆன் 39:13
இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை
அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள்
வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது
என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.
பிறருக்கு உதவு
சிரமப்படும் மக்கள் யாராக, எந்த
மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும்
அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.
"தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'' என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே!
(தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?'' எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், "ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும்
அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்'' என்றார்கள்.
தோழர்கள், "அதுவும் முடியாவிட்டால்?'' எனக் கேட்டதற்கு, "தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு
உதவ வேண்டும்''
என்று பதிலளித்தார்கள். தோழர்கள், "அதுவும் இயலவில்லை என்றால்?'' என்றதும், "நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும்
தர்மமாகும்''
என்று கூறினார்கள்.
நூல்: புகாரீ 1445
ஒருவரது பொருளை அவரது வாகனத்தில் ஏற்றி விடுவதும் வழி தெரியாமல்
தடுமாறுபவருக்கு சரியான வழியைக் காட்டுவதும் இஸ்லாம் இயம்பும் இனிய பண்புகளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும்
தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி
வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர்
அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத்
தருவதும் தர்மமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2891
முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் தமது தேவை போக எஞ்சியதை, தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுமாறு நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள்.
இதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதோர் என்று வித்தியாசம் கிடையாது. தேவையுள்ளோர் யாராக இருந்தாலும்
அவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது
ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப் பக்கமும் இடப் பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே
உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு
அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு
அதைக் கொடுத்து உதவட்டும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல்: முஸ்லிம் 3562
ஏழையும் இறைவனும்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி
இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப்
போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும்
இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும்
மிக்க அல்லாஹ் மறுமை நாளில், "ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.
ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான்.
அதற்கு அவன்,
"என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை
நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ்,
"என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான்.
ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே
நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய
மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான்.
அதற்கு அவன், "என்
இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால்
அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக்
கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே!
நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான்.
அதற்கு அவன், "என்
இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால்
நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக்
கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4661)
கடனாளிகளுக்கு உதவி
கடனில் தத்தளிப்பவர்களின் சிரமத்தைப் போக்கினால் அல்லாஹ் தனது
அர்ஷின் நிழலை மறுமை நாளில் அவருக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளித்து மனிதநேயத்தைத்
தழைக்கச் செய்யுமாறு போதிக்கின்றான்.
யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம்
அளிக்கிறாரோ,
அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில்
அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் நிழல் தருகின்றான்.
அறிவிப்பவர்: அபுல்யசர் (ரலி)
நூல்: முஸ்லிம் 5736
மனிதர்களிடம் இரக்கம்
மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம்
இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு
முத்திரை பதித்த சான்று.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம்
காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376
போரில் மனித நேயம்
போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும்
உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும்
அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல.
போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப்
பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.
ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட
வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத்
தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப்
பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.
நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம்
பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப்
படம் பிடித்துக் காட்டுகிறது.
இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம்
மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப்
போதிக்கவில்லை.
இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும்
இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?
அறிவிலிகள், மனிதநேயமற்ற
சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத
மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.
எதிர்விளைவைக் கவனிக்கும் இஸ்லாமிய மார்க்கம்
இறைவன் ஒரே ஒருவன் தான்; அவனைத் தவிர
வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; வேறு எந்தச்
சக்தியுமில்லை என்ற ஏகத்துவ, ஓரிறைக் கொள்கையை உயிர் மூச்சாகக்
கொண்ட மார்க்கம் இஸ்லாமிய மார்க்கமாகும்.
ஒரு முஸ்லிம் இந்த ஏகத்துவக் கொள்கையை நம்பிக்கை கொள்வதுடன், மற்றவர்களையும் இந்தக் கொள்கையின்பால் கனிவோடும், கண்ணியத்தோடும் அழைக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. அவ்வாறு
அழைக்கும் போது உண்மையான கடவுளான அல்லாஹ்வுக்கு மட்டும் தான் அனைத்து ஆற்றலும் உள்ளன; மற்ற தெய்வங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை, குர்ஆன் கூறக்கூடிய அழகிய, அறிவார்ந்த
வாதங்களுடன் எடுத்து வைக்கச் சொல்கின்றது.
அப்படி உண்மையான கடவுள் கொள்கையை எடுத்து வைக்கும் போதும், இன்னபிற சமயங்களிலும் பிற மதத்தின் கடவுள்களைத் திட்டக் கூடாது
என்று தெளிவான கட்டளையைப் பிறப்பித்துள்ளது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை
ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு
சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல்
அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு
அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:108)
இவ்வாறு கட்டளையிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்துப்
பேச வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகின்றது.
ஒவ்வொரு சாமானியனும் உலக விவகாரங்களில் எதிர்விளைவைத் தெரிந்தே
வைத்திருக்கின்றான். ஒரு வியாபாரி, ஒரு பொருளுக்கு
100 ரூபாய் என்று விலை சொல்லும் போது, வாங்குபவர் அதை 50 ரூபாய்க்குத்
தருவீர்களா?
என்று கேட்கின்றார். அப்போது தான் அங்குமில்லாமல் இங்குமில்லாமல்
70 ரூபாய்க்கு வியாபாரி வருவார் என்று வாடிக்கையாளர் எதிர்பார்க்கின்றார்.
இப்படி, என்ன செய்தால் என்ன வரும் என்ற
எதிர் விளைவை ஒவ்வொரு சாதாரண மனிதனும் விளங்கி வைத்திருக்கின்றான். இந்த விவரமும் விளக்கமும்
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.
அந்த அடிப்படையில் தான் பிற மதக் கடவுள்களைத் திட்டக்கூடாது
என்று கூறுகின்றது. ஒரு முஸ்லிமின் பார்வையில் பிற மதக் கடவுள்கள் போலியானவை, அவற்றுக்கு எந்தச் சக்தியும் இல்லை தான். அதனால் அவன் அந்தக்
கடவுள்களைத் திட்டும் போது அந்த தெய்வங்களால் அவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
ஆனால் இவர் திட்டுவதால் பிற மதத்தவர் பாதிப்புக்குள்ளாகி, அவர் பதிலுக்கு இவர் வணங்குகின்ற உண்மையான கடவுளைத் திட்ட ஆரம்பித்துவிடுவார்.
அது இவரை உண்மையான கடவுளைத் திட்டிய பாவத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது.
முஸ்லிமல்லாத அந்த நபர் உண்மையான கடவுளாகிய அல்லாஹ்வைத் திட்டுவதற்கு
இந்த முஸ்லிம் காரணமாகின்றார். அதனால் அந்த முஸ்லிமுக்கு இது பாவமாகவும் பாதகமாகவும்
ஆகி விடும். ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனிக்க வேண்டும் என்று இறைவனின் வேதம் கூறுகின்றது.
பிள்ளையின் திட்டு தான்; பிறர் திட்டல்ல!
கடவுள் விஷயத்தில் எதிர்விளைவைப் பார்க்கச் சொல்கின்ற மார்க்கம், பெற்றோர்கள் விஷயத்திலும் பிள்ளைகள் எதிர்விளைவைப் பார்க்கச்
சொல்கின்றது.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்'' என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம்
தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், "ஒருவர்
இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும்
ஏசுவார் (ஆக,
தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)'' என்றார்கள்.
நூல்: புகாரி 5973
இன்றைக்கு நமது நாட்டில் ஒருவர் மற்றொருவருடன் வாக்குவாதத்தில்
ஈடுபடும் போது,
தன்னுடன் சண்டை போடுபவரைத் திட்டுவதுடன் மட்டும் நிறுத்திக்
கொள்வதில்லை. அவருடைய ஏச்சு பேச்சுக்கள் அத்துடன் நிற்பதில்லை. அவருடைய பெற்றோரையும்
சேர்த்தே திட்டுகின்றார். இவரும் பதிலுக்கு அவருடைய பெற்றோரைத் திட்டுகின்றார்.
இப்படி எதிர்விளைவை ஏற்படுத்தி, தன்னுடைய பெற்றோரை எதிரி திட்டினால் அது இவரே நேரடியாகத் தனது
பெற்றோரைத் திட்டியதற்குச் சமம் என்று மார்க்கம் கூறுகின்றது. இது பெரும் பாவமாகும்
என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இப்படிப் பிறர் மூலம் தன்னுடைய பெற்றோரைத் திட்டுகின்ற எதிர்விளைவை
ஏற்படுத்தக்கூடியவராக ஒரு முஸ்லிம் இருக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பிறர் நம்முடைய பெற்றோரைத் திட்டுவதற்குத் தூண்டுவதும் பெரும்
பாவம் தான் என்று இஸ்லாம் சொல்கின்றது. அப்படியானால் பெற்றோரை நேரடியாகத் திட்டுவது
மிகப் பெரும் பாவம் என்பதையும் பெற்றோரை அடிப்பது கொடிய பாவம் என்பதையும், அவர்களைக் கொலை செய்வது மிகக் கொடூரமான பாவம் என்பதையும் இந்தச்
செய்தி உள்ளடக்கி அமைந்துள்ளது.
விளையாட்டு வினையாகும்
ஒருவர் தனது கையில் கத்தியை வைத்துக் கொண்டு, உன்னைக் குத்தி விடுவேன் என்று தனது நண்பரை நோக்கி கத்தியைக்
காட்டிக் கேலி செய்வார். இஸ்லாம் இங்கும் பின்விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம்.
ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப்
பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக்
கூடும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 7072
இந்தக் கேலிப்பேச்சு துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கும் இன்று
மிகவும் பொருந்திப் போகின்றது. கத்தியாவது அதை வீசுவதற்குக் கொஞ்சம் முயற்சியைப் பிரயோகிக்க
வேண்டும். துப்பாக்கிக்கு அதுகூடத் தேவையில்லை. ஆட்காட்டி விரலை அசைத்தால் போதும்.
அநாயசமாக எதிரில் நிற்கும் ஆள் காலியாகிப் போய்விடுவார்.
எனவே தான் ஒரு முஸ்லிம் விளைவைக் கவனித்து வினையாற்ற வேண்டும்
என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றது. ஒரு விளையாட்டு வினையாகிப் போய்விடக்கூடாது
என்ற விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.
எலி ஏற்படுத்தும் எதிர்விளைவு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத்
தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்)
கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6295
இரவில் தூங்கும் போது எலி ஏற்படுத்தும் எதிர்விளைவைக் கருத்தில்
கொண்டு நபி (ஸல்) அவர்கள் இந்த உத்தரவைப் போடுகின்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும் என்ற சட்டத்தையும் நாம்
எடுத்துக் கொள்ளலாம். கேஸ் சிலிண்டர் வெடித்து எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. ஒருவர்
இரவில் தூங்கச் செல்லும் போது கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில்
ஒரு முஸ்லிம் பின்விளைவைக் கவனிக்க வேண்டும்.
ஆலய உடைப்பு அறவே கூடாது
ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டு பிற மத வழிபாட்டுத் தலங்களை
உடைத்துவிடக் கூடாது. ஒரு முஸ்லிம் இந்தப் பாவத்தைச் செய்தான் என்றால் அதன் எதிர்விளைவு, பள்ளிவாசல் தகர்ப்புக்கு அது வழிவகுத்து விடும். இதன் மூலம்
பள்ளிவாசலை இடித்ததற்கு அந்த முஸ்லிமே காரணமாகி விடுகின்றார். இதைத் திருக்குர்ஆனின்
கீழ்க்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால்
மடங்களும்,
ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும்
இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ்
வலிமையுள்ளவன்;
மிகைத்தவன்.
அல்குர்ஆன் 22:40
ஒரு மதத்தவர், அடுத்த மதத்தவரின்
வழிபாட்டுத் தலத்தைத் தாக்காமல் காப்பது தான் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய
பாதுகாப்பு வளையமாகும். அந்தப் பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட்டுவிட்டால் எந்த வழிபாட்டுத்
தலத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிடும். இதிலும் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனத்தில்
கொண்டு செயல்பட வேண்டும்.
பிற மதத்தவரைக் கொலை செய்தல்
பல்வேறு மதத்தினர் சேர்ந்து வாழ்கின்ற நாடு இந்தியா! இதுபோன்ற
நாடுகளில் பிற மதத்தவரை ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால் அல்லது அவர்கள் மீது தாக்குதல்
நடத்தினால் அதன் விளைவு விபரீதமாக அமைந்துவிடும்.
பிற மதத்தினரில் யாரையேனும் ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால்
பதிலுக்கு அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள். இதைக் கவனித்தே ஒரு முஸ்லிம் செயல்பட
வேண்டும்.
அப்படியானால் பிற மதத்தினர் எதிர்த்துத் தாக்க மாட்டார்கள் என்றால்
அப்போது அவர்களைக் கொலை செய்யலாம் என்று இதை விளங்கிக் கொள்ளக்கூடாது. பொதுவாகக் கொலை
செய்வது கொடிய பாவம் என்பதை இதே இதழில், "கொலை
கொடியது' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்து
செயல்படவேண்டும். அப்படிக் கவனிக்கத் தவறினால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை மேற்கண்ட
சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அவர்கள் தாம் (ஏக இறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு
உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும்
(தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்)
அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்).
தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப்
பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.
(அல்குர்ஆன் 48:25)
மக்காவில் தங்கள் இறைநம்பிக்கையை
வெளிப்படுத்தாமல் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலையைக் கவனித்துச் செயல்படுமாறு வல்ல இறைவன்
தனது தூதருக்குக் கட்டளையிடுகின்றான்.
முஸ்லிம்களே முஸ்லிம்களை நேரடியாகத் தாக்கிவிடும் அபாயத்தை இங்கு
அல்லாஹ் குறிப்பிட்டாலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும்
பகுதிகளில் பிற மதத்தவர்களால் அழிவுக்குள்ளாகி விடுகின்ற எதிர்விளைவையும் சேர்த்துத்
தான் இந்த வசனம் குறிக்கின்றது.
இன்று இந்த எதிர்விளைவுகளை, இந்தியாவுக்கு
எதிராக அறிக்கை விடுகின்ற அய்மான் ஜவாஹிரிகள் பார்ப்பதில்லை. இதனால் எத்தனை முஸ்லிம்கள்
அழிந்தாலும் அதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. இப்படி எதிர்விளைவைப் பார்க்காதவர்
முஸ்லிம்கள் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
மொத்தத்தில் ஒரு முஸ்லிம் இந்த உலகம், மறுமை ஆகிய அனைத்து விஷயங்களிலும் எதிர்விளைவுகளைக் கவனித்தே
செயல்பட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இதைப் புரிந்து செயல்பட்டால் தான்
இம்மை, மறுமையில் வெற்றி பெற முடியும்.
இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை தாக்குதல்
இன்று இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதற்கு
எதிரிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும்
தற்கொலைத் தாக்குதல்கள் ஆகும். அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது நடைபெற்ற
தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம்
மிகத் தீவிரமடைந்தது.
இன்றளவும் இராக், சிரியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான்
என முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தின்
மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தத் தாக்குதல்களுக்குக்
காரணம் முஸ்லிம்கள் தானா? அல்லது இஸ்ரேலிய, அமெரிக்க உளவுத் துறைகளா? என்ற
விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் வெளிப்படையாகப் பார்த்தால் இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்
பெயர்களில் செயல்படும் சில குழுக்களால் நடத்தப்படுவதை மறுக்க முடியாது.
இந்த நாடுகளில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணம்
முஸ்லிம்கள் என்று சொல்லப்பட்டாலும், இதில் கொல்லப்படுபவர்களும்
முஸ்லிம்கள் என்பது இங்கு வேதனைக்குரிய விஷயம்.
ஆனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு
செயல்படும் ஊடகங்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்
தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கின்றன. இஸ்லாமிய
மார்க்கத்தின் போதனைகளால்தான் முஸ்லிம்கள் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள்; எனவே இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துகின்றனர்.
உண்மையில் இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்பதற்கான
அடுக்கடுக்கான ஆதாரங்களை இந்த ஏகத்துவம் இதழ் முழுவதும் நாம் பார்த்து வருகிறோம். அதிலும்
குறிப்பாக தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதியில்லை என்று கூறுவதை
விட, இஸ்லாம் இதுபோன்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றது என்பது
தான் உண்மை. எனவே தற்கொலைத் தாக்குதல் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை சற்று
விரிவாகப் பார்ப்போம்.
ஒரு மனிதன் தன்னுடைய உயிரை, தானே
மாய்த்துக் கொள்ளும் தற்கொலைக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதற்கு யாரும்
மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், "எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான்.
எனவே அவனுக்குச் சொர்க்கத்தைத் தடை செய்து விட்டேன்' என்று
கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),
நூல்: புகாரி 1364
"யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர்
நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால்
தாக்கிக் கொண்டிருப்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1365
தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள்
கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்
போரில், எதிரிகளை அழிப்பதற்காகத் தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப்
பார்ப்போம்.
ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து
விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான
தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம்
எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை
என்பது தான் உண்மை!
போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ
நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம்
தற்கொலையா?
என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத
வாதமாகும்.
போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால்
உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான்
போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு
திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும்
போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.
போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.
சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்)
சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும்
தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கüன் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகüல்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து
நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு
வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்)
கொண் டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், "இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை
தீரப் போரிடவில்லை'' என்று (வியந்து) கூறினார்கள்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "அவரோ நரகவாசியாவார்'' என்று கூறினார்கள்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், "நான்
அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)'' என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற
போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்)
அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாüன் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில்
ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாüன் மீது தன் உடலை அழுத்திக்
கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின்
தூதரிடம் சென்று, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர்
தாம் என்பதற்கு நான் சாட்சியம் அüக்கிறேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள்.
அவர், "சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி "அவர் நரகவாசி' என்று கூறினீர்கள் அல்லவா? அதைக்
கண்டு மக்கள் வியப் படைந்தனர். நான் (மக்கüடம்), "உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப்
புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப் படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாüன் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்பு களுக்கிடையே வைத்து, அதன் மீது
தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்'' என்று
கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்கüன் வெüப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச்
செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக
இருப்பார். மக்கüன் வெüப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார்.
ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 2898, 3062
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும்
எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத்
தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள
வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே
செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத்
தாக்குதல் அனுமதிக்கப்பட்டது தான் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும்
தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில்
தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும்
நியாயப்படுத்த முடியாது.
உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக்
கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும். ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக்
கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான
கூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட
செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.
போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி
தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி
தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக
அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.
விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு
அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக்
கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக
இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.
தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை
மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள்.
உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு
நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன
உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.
ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும்
அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம்
ஒரு போதும் அனுமதிக்காது.
இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால்
உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச்
சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு
எதிராக நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர்
பொதுமக்களாக இருப்பதைக் காண முடியும்.
பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள்
போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.
போர்க்களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது
எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில்
கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும்
கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.
புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும்
குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை
நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை
ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை
முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.
நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும், சிறுவர்களும் கொல்லப்படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத்
தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில்
கூறப்பட்டுள்ளது. ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில்
கூட பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை
என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று
விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணைவைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள்
கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "கொலை
செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக்
கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே
பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள்
தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 15036, 15037)
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள்
அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.
முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டதால் தான் நபி
(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான்
தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும்
முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள்.
இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை
தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.
ஆனால் இதற்கு மாற்றமாக, பள்ளிக்குச்
செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச்
சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது
மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.
மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப்
பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால்
இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.
அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் பிற மதத்தவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர்.
இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு
எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற
போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக்
கண்டிக்கின்றார்கள்.
மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும்
சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.
EGATHUVAM OCT 2014