May 13, 2017

நபி மீது பொய்! நரகமே தங்குமிடம்! - பெண் ஜின்னின் காமெடி?

நபி மீது பொய்!  நரகமே தங்குமிடம்! - பெண் ஜின்னின் காமெடி?

ரிஃபாஆ பின் அப்திஸ்ஸாலிஹ் (அப்துஸ்ஸாலிஹ் உடைய மகள் ரிஃபாஆ) என்ற ஒரு பெண் ஜின், பெண்களின் கூட்டத்துடன் கண்மணி நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தது.

ஒரு சமயம் அந்த பெண் ஜின் வழமையாக வரும் நேரத்தை விட சற்று நேரம் கழித்து கண்மணி நபி (ஸல்) அவர்களைக் காண வந்தது. ஏன் தாமதம்? என்று கண்மணி நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கு அந்தப் பெண் ஜின் பின்வருமாறு விடையளித்தது.

எங்களில் ஒரு ஜின் இந்தியாவில் இறந்து விட்டது. மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன். அதன் காரணமாக தாமதமாகி விட்டது என்று கூறி ஓர் அழகிய நிகழ்ச்சியை நகைச்சுவையாக விவரிக்க ஆரம்பித்தது. அந்தப் பெண் ஜின் நகைச்சுவையாக அந்த நிகழ்வைச் சொன்னதும் அதைக் கேட்ட கண்மணி நபி (ஸல்) அவர்கள் ரொம்பவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

(தகவல்: தாரீகே ஜுர்ஜான், ஹாபிஸ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் இஸாபா)

இது "அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா' என்ற பத்திரிகையில் பிப்ரவரி 2013 இதழில் வெளியாகியுள்ளது. பெண் ஜின் கூறிய நகைச்சுவை என்ற தலைப்பில், தாரீக் ஜுர்ஜானி வாயிலாக ஜாபிர் (ரலி) அறிவித்தார் என்று படு அசத்தலில் ஒரு பக்கா ஹதீஸைப் போன்று துவங்குகின்றது. இந்தத் துவக்கமும் தோரணையும் புகாரி, முஸ்லிம் ஹதீஸ்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடும் போல் தோன்றுகிறது. ஆனால் உள்ளே போனால், மீண்டும் அதே துர்நாற்றம் என்பது போல் வழக்கமான பொய் ஹதீஸையே அவிழ்த்து விடுகின்றனர்.

இந்தப் பொய்ச் செய்தியைப் பதிவு செய்பவர்கள் கொஞ்சம் கூறாகப் பதிவு செய்திருக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இவர்கள் பதிவு செய்த பொய்ச் செய்தியில் பாதி விடுபட்டுள்ளது.

கோடிட்ட இடத்தை நிரப்புவது போன்று இவர்கள் விட்டு விட்ட கேடு கெட்ட ஹதீஸின் மிச்சத்தை நாம் நிரப்பி விட்டு நமது சாட்டையைச் சொடுக்குவோம்.

"மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன்' என்பதிலிருந்து துவங்குவோம். இங்கிருந்து துவங்குவதற்குக் காரணம், மய்யித் வீட்டினரைக் கண்ணியப்படுத்தச் சென்றிருந்தேன் என்று இவர்கள் தவறாக மொழி பெயர்த்துள்ளதால் தான். இதற்குரிய மூலத்தில், "தஃஸியத்' என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இதற்கு ஆறுதல் கூறுதல் என்று பொருள். இதன் வேர்ச் சொல் "அஸ்யுன்' என்பதாகும். இதற்குப் பொறுமை கொள்ளுதல் எனப் பொருள்.

இந்த ஹதீஸை மொழிபெயர்த்தவர் "இஸ்ஸத்' - கண்ணியம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை என நினைத்து, கண்ணியப்படுத்துதல் என்று மொழிபெயர்த்துள்ளார். இறந்தவர் வீட்டில் கண்ணியப்படுத்துவதற்கு என்ன இருக்கின்றது? அதனால் இது மொழியாக்கத்தில் உள்ள பிழை.

இப்போது அந்தச் சம்பவத்திற்கு வருவோம்.

"நான் மய்யித் வீட்டினருக்கு ஆறுதல் சொல்லச் சென்றிருந்தேன். என்னுடைய வழியில் நான் கண்ட ஓர் ஆச்சரியத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்'' என்று அந்த ஜின் கூறியது. "நீ என்ன கண்டாய்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இப்லீஸை ஒரு பாறையில் நின்று தொழக் கண்டு, நீ தான் இப்லீஸா? என்று கேட்டேன். அவன், ஆம் என்றான். "நீ ஆதமை வழிகெடுத்துவிட்டு இப்போது (இதை வேறு) செய்கிறாய். (இதை வேறு) செய்கிறாய்' என்று சொன்னேன். "இ(வ்வாறு பேசுவ)தை நீ விட்டு விடு' என்று சொன்னான். "(இந்த லட்சணத்தில்) நீ தொழ வேறு செய்கின்றாய்?' என்று நான் சொன்னேன். "ஆம்! நல்லடியாரின் மகள் ஃபாரிஆவே! தான் செய்த சத்தியத்தை இறைவன் நிறைவேற்றும் போது எனக்கு மன்னிப்பு அளிப்பதை நான் ஆதரவு வைக்கிறேன்' என்று இப்லீஸ் பதிலளித்தான். அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் சிரித்தது போன்று நான் பார்த்தது இல்லை.

இதுதான் இந்த அற்புதமான (?) ஹதீஸின் முழுப்பகுதி.

ஆனால் கட்டுரையாளர், பன்னூலாசிரியர் என்று போட்டுள்ளனர். அவருக்கு அந்த நகைச்சுவை என்னவென்று தெரியவில்லை. நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்; அதனால் நாமும் சிரிக்க வேண்டும் என்று காரணம் சொல்கின்றார்.

சொல்வது பொய் தான். அதைக் கூட சரியாகச் சொல்லவில்லை என்றால் இப்படித் தான் அசடு வழிய வேண்டி வரும்.

இந்தச் செய்தியை இப்னுல் ஜவ்ஸி அவர்கள், மவ்லூஆத் - இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று நூலில் பதிவு செய்து விட்டு, "இது நடப்பதற்கே சாத்தியமற்ற ஒரு நிகழ்வு, இந்தத் தொடரில் இடம்பெறுகின்ற இப்னு லஹீஆ நம்பத்தகுந்தவர் அல்லர். பொய்யர்கள், பலவீனமான வர்களிடமிருந்து செய்திகளை மறைத்து அறிவிப்பவர்' என்று குறிப்பிடுகின்றார்கள்.

இதே போல் இமாம் சுயூத்தி அவர்கள் தனது நூலான, அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத் (புனையப்பட்ட பொன்மணிகளில் இணைக்கப்பட்ட போலி முத்துக்கள்) நூலில் இந்தச் செய்தியைப் பதிவு செய்து விட்டு, இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள முன்கிர் என்பவர் யாரெனத் தெரியவில்லை என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் மீஸானில் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கின்றார்கள்.

இந்த முன்கிர் பின் ஹகம் என்பவர் தான் இந்த ஹதீஸை இட்டுக்கட்டியிருக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் அவர்கள் லிஸானும் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

இப்படி ஒரு பொய்யான செய்தியைத் தான் பன்னூல் ஆசிரியர் (?) இந்த மாத இதழில் எழுதியிருக்கின்றார். "தகவல்' என்று பன்னூலாசிரியர் அசத்தலாகப் போட்டிருப்பது போல் தாரீக் ஜுர்ஜான், இஸாபாவிலும் இந்தச் செய்தி இடம்பெறுகின்றது.

தாரீக் ஜுர்ஜானில் இதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் இஸாபாவில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்து அதன் அடிக்குறிப்பில், "இதன் அறிவிப்பாளர் தொடரில் யாரெனத் தெரியாதவர்கள் இடம்பெறுகின்றார்கள்'' என்று குறிப்பிடுகின்றார். அத்துடன் இப்னுல் ஜவ்ஸீயின் மேற்கண்ட கூற்றையும் சேர்த்துக் கூறுகின்றார்.

இப்படி ஒரு பொய்யான செய்தியை, ஹாபிஸ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் இஸாபா என்று ஆதாரம் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இத்துடன் பன்னூலாசிரியர் நிற்கவில்லை. "புன்னகை பூத்த பூமான் நபியுல்லாஹ்'' என்ற தலைப்பில் இன்னொரு பொய்ச் செய்தியையும் அதே தொடரில் எழுதித் தள்ளியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லாததைச் சொல்லி நரகத் தண்டனையை அனுபவிப்பதில் இந்த எழுத்தாளருக்கு எவ்வளவு வேகமும் ஆர்வமும் உள்ளது என்று எண்ணி நாம் வேதனையடைய வேண்டியுள்ளது.

அந்த ஹதீஸை இப்போது பார்ப்போம்.

நாங்கள் ஒருமுறை கண்மணி நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்தோம். மக்காவிற்குச் செல்லும் வழியில் அரஜ் என்னுமிடத்தில் தங்க நேரிட்டது. எனவே தனித்தனியே கூடாரம் அமைத்துக் கொண்டோம். நான் என்னுடைய கூடாரத்திலிருந்து புறப்பட்டு கண்மணி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்ற போது, அவர்கள் தங்கள் கூடாரத்தில் காணப்படவில்லை. தூரத்தில் தெரியும் ஒரு மலையில் தனித்து அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களை அடைவதற்கு நெருங்கிவிட்ட போது, கூச்சலும் இரைச்சலுமான சத்தம் என் காதில் விழுந்ததும் ஏதோ ஒரு மறைவான நிகழ்ச்சி நடக்கின்றது என்ற நான் யூகித்துக் கொண்டேன். அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டேன். ஏராளமான மனிதர்கள் உரத்த குரலில் பேசிக் கொள்வதும் சண்டையிட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. சற்று நேரம் கழித்து கண்மணி நபி (ஸல்) அவர்கள் புன்னகை பூத்த முகத்தினராக என்னிடம் வந்தார்கள். நான் அங்கேயே விசாரித்தேன். "யா ரசூலுல்லாஹ், இதென்ன கூச்சல்'' என்று கேட்டேன். அதற்கு கண்மணி நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஜின்களுக்கும் காபிர் ஜின்களுக்கும் இடையே குடியிருப்பு விஷயத்தில் தகராறு இருந்தது. அவ்விருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தீர்ப்புக்காக என்னிடம் வந்தன. முஸ்லிம் ஜின்கள் ஹபஸ் எனும் இடத்திலும் காபிர் ஜின்கள் கௌர் எனும் இடத்திலும் குடியிருக்கச் சொல்லி தீர்ப்பளித்தேன். இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர்'' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: பிலால் பின் காரிஸ் (ரலி), தகவல்: கலாமுல் முபீன்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்கள் அல்லுஅஃபா வல்மத்ரூகீன் (பலவீனமானவர்கள், விடப்பட்டவர்கள்) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

இவரது ஹதீஸ் வெறுக்கப்பட்டது; இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அபூதாலிப் தெரிவிக்கின்றார்.

இவரிடமிருந்து எதையும் அறிவிக்காதே என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அபூகைஸமா தெரிவிக்கின்றார்.

இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக உஸ்மான் பின் ஸயீத் குறிப்பிடுகின்றார்.

இமாம் அபூதாவூதிடம் இவர் பற்றிக் கேட்கப்பட்ட போது, "இவர் பொய்யர்களில் ஒருவர்' என்று சொன்னதாக அபூஉபைத் அல் ஆஜுரி தெரிவிக்கின்றார்.

மேற்கண்ட இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஹாபிழ் மிஸ்ஸி அவர்களின் தஹ்தீபுல் கமாலில் இடம்பெறுகின்றன. ஷைகு நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அல்லயீஃபா நூலில் இதை 2074வது ஹதீஸாகக் கொண்டு வந்து, "இது முற்றிலும் பலவீனமான ஹதீஸ். இதில் இடம்பெறும் கஸீர் பின் அப்துல்லாஹ் விடப்பட்டவர். ஹைஸமீ அவர்கள் இதே காரணத்திற்காக இதைக் குறையுள்ளது என்று கூறியுள்ளார்'' என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அறிஞர்களின் கருடப் பார்வையையும் கடுமையான ஆய்வையும் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யான ஹதீஸ் பதிந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாகவும் கண்ணும் கருத்துமாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. அந்த மாமனிதரின் சொல்லுக்கு எத்தனை பாதுகாப்பு, எத்தனை முஸ்தீபு என்று எண்ணுகையில் மெய்சிலிர்க்கின்றது.

ஆனால் இந்தப் பன்னூல் ஆசிரியர்களும், பத்திரிகைகளும் அந்த மாமனிதரின் விஷயத்தில் எவ்வளவு மெத்தனப் போக்கில் இருக்கின்றார்கள்? பன்னூல் ஆசிரியர் கொண்டு வந்த ஹதீஸ்களைப் பார்க்கும் போது இவருக்கு ஹதீஸ் ஞானம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அடுத்த நூலிலிருந்து அப்படியே காப்பி அடித்திருக்கின்றார் என்று தெரிகின்றது.

இவருக்கு முஸ்லிம் நூலில் இடம் பெறும், ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.


"என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் இங்கு சமர்ப்பிக்கின்றோம். இறைவனை அஞ்சுமாறு இவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

EGATHUVAM SEP 2013