May 31, 2017

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் கூறும் குடும்பவியலில், குடும்பத்தின் எல்லா செலவீனங்களும் ஆண்களின் மீதே சுமத்தப்படுகிறது என்பதையும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்னால் பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கக் கூடாது என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வரதட்சணையை நேரடியாகக் கேட்டுப் பெறாமல் அன்பளிப்பு என்ற பெயரில் மறைமுகமாக வாங்குவதற்கு முயற்சிப்பதைப் பார்க்கிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதையும் கேட்பதில்லை. பெண் வீட்டார் தானாகவே தருவதாக தனக்குள் ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு வரதட்சணையை நியாயப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

இப்படிப் பெண் வீட்டார் மனப்பூர்வமாக விரும்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். ஆனால் உண்மையில் மனப்பூர்வமாகக் கொடுக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இன்று திருமணத்தை முன்னிறுத்தி பெண் வீட்டார் கொடுப்பதெல்லாம் மனப்பூர்வமாகக் கொடுப்ப தாகக் கூறவே முடியாது. ஏனெனில் உண்மையில் இது லஞ்சம் கொடுப்பதைப் போன்றே உள்ளது.

லஞ்சத்தை நம்மில் பலர் கொடுப்பதற்குக் காரணம், அவர்களது காரியம் இலகுவாக நடக்க வேண்டும் என்பதற்குத்தான். தமது தேவை நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் லஞ்சம் வாங்குபவனோ மக்கள் விரும்பித்தானே தருகிறார்கள் என்று கூறுகிறான். ஆனாலும் விரும்பி லஞ்சத்தைக் கொடுத்தாலும் லஞ்சம் தவறுதான்.

அதேபோன்று திருமணத்தை முன்னிறுத்தி மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் கொடுக்கவில்லையெனில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை ஒழுங்காக நடத்த மாட்டார்கள்; மற்ற மருமகளுடன் ஒப்பிட்டுக் காட்டி நமது மகளைக் குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்; மாமியார் வீட்டில் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும், கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில்தான் ஒருவர் தனது சக்திக்கு மீறி அன்பளிப்பு செய்கிறான். மேற்சொன்ன சூழ்நிலை சமூகத்தில் இல்லையெனில் நிச்சயம் யாரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு எதையும் அன்பளிப்பாகக் கொடுக்கவே மாட்டார்கள். ஆக இஸ்லாத்தில் அன்பளிப்பு என்பது, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்பளிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்படித்தான் அன்பளிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நபியவர்களின் உபதேசம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூஅசத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’’ என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, ‘இது உமக்குரியது; இது எனக்குரியதுஎன்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தமது கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக  இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’’ என்று சொன்னார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “நான் எடுத்துரைத்துவிட்டேனா?’’ என்று மும்முறை கூறினார்கள்.

நூல்: புகாரி 7174

இதே செய்தி புகாரியில் 2597, 6636, 6979 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்திகளிலெல்லாம் அன்பளிப்பு தவறாகக் கொடுக்கப்படக் கூடாது என்ற நுணுக்கத்தைப் போதிக்கிறது.

எனவே திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படும் அன்பளிப்புகள் வரதட்சணை தான் என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இது அன்பளிப்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், சிலரது குடும்ப வாழ்க்கை திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடிந்த சில தினங்களிலோ மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது பெண் வீட்டார் கொடுத்த அன்பளிப்பபைத் திரும்பவும் கேட்பார்கள். இது அன்பளிப்பாக அவர்கள் தரவில்லை என்பதற்கு இதுவே ஆதாரமாகும். அன்பளிப்பின் அடிப்படை இலக்கணமே, எந்தவித எதிர்பார்ப்புமின்றி, பதிலுக்குப் பதில் என்ற முறையில் இல்லாமல் கொடுப்பதேயாகும். இந்த அடிப்படையெல்லாம் திருமணத்தில் கிடையாது. எனவே திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்காமல் பெண் வீட்டார் கொடுப்பதுவும் வரதட்சணைதான்.

நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் அப்படித் தான் கேட்டார்கள். அன்பளிப்பு வழங்கப்பட்ட அதிகாரி அவரது தந்தை வீட்டிலும், தாய் வீட்டிலும் இருந்தால் இந்த அன்பளிப்பு கிடைத்திருக்குமா? என்று கேட்டதைப் போன்று நாமும் பெண் வீட்டில் கேட்டுப் பார்த்தால் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படியெனில் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதில் எந்த அன்பளிப்பும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

எனவே திருமண ஒப்பந்தத்தை ஒட்டி எதுவும் செய்யக் கூடாது. பின்னால் நம் வீட்டில் ஒருவராக நமது மருமகன் ஆனபிறகு அவர்கள் வீட்டில் நம் பெண் ஒரு குடும்ப உறுப்பினராகிய பிறகு அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் சகஜம்தான். அதில் குறைகூற வாய்ப்பில்லை.

எனவே திருமணத்தின் போது (முன்போ பின்போ) பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படுபவை, மாப்பிள்ளை வீட்டார் அன்பளிப்பு என்ற பெயரில் பெற்றாலும், அதில் நம் பெண்ணின் வாழ்க்கை தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நம் பெண் மாமியார் வீட்டில் கொடுமைப் படுத்தப்படக் கூடாது என்பதற்காகவும் சமூகத்தில் எல்லோரைப் போன்று நாமும் முறையைச் செய்துவிடுவோம் என்ற அடிப்படையில்தான் தரப்படுகிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ளலாம். மேற்கண்ட நபியவர்களின் செயல்பாட்டிலிருந்து கேட்காமலே தந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிட வேண்டும். கொடுத்துவிட்டாலும் மறுத்துவிட வேண்டும்.

இன்னும் சிலர் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, செல்வமிக்க வீட்டில் பெண் தேடுவார்கள். கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைப் பார்த்து மணம் முடிப்பதைப் பார்க்கிறோம். ஏனெனில் இதுவெல்லாம் பிற்காலத்தில் நமக்குத் தான் வரவேண்டும் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். நாம் கேட்காமலே கிலோ கணக்கில் நகையைப் போட்டு அனுப்புவார்கள் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். இப்படி உள்ளூர ஆசை வைத்துக் கொண்டு வெளியில் நல்லவர்களைப் போன்று நடிப்பவர்களும் நபியவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆதாரங்கள் வாயிலாக தெரிகிறது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)’’ என்றார்கள்.

நூல்: புகாரி 1473, 7173, 7164

மேலும் பெண்கள் நான்கு நோக்கத்திற்காக திருமணம் முடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் இதற்கு ஆதாராமாகக் கொள்ளலாம். அதிலும் மார்க்கப் பற்று என்ற நோக்கமே வெற்றி கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டால், மார்க்கப்பற்று குறைவாக உள்ள பணக்காரப் பெண்ணை விட மார்க்கப்பற்று அதிகம் உள்ள ஏழைப் பெண்களைத் தேர்வு செய்வார்கள்.

(பார்க்க : புகாரி 5090)

இதுபோக பெண்களிடம் இருந்து வாங்குவது அநீதி என்பதை விளங்க வேண்டும். கொடுப்பதற்குத் தகுதி ஆண்களிடமும் பெறுவதற்குத் தகுதி பெண்களிடமும் தான் இருக்கிறது. இதைப்பற்றியும் குர்ஆன் பேசுகிறது. அப்படியெனில் நாம் தவறான முறையில் செல்வத்தைப் பெறவே கூடாது.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்!

(அல்குர்ஆன் 2:188)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2449

இப்படிப் பெண் வீட்டார் பல இடங்களில் பிச்சை எடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கும் போது வெளிப்படையில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் மனம் புழுங்கிக் கொண்டு, சாபமிட்டுக் கொண்டும் இறைவனிடம் எதிராகப் பிரார்த்தனை செய்து கொண்டும்தான் கொடுப்பார்கள். நிச்சயம் இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ்விடம் அதிகம் மரியாதை உண்டு என்பதைப் புரிந்து மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே பெண்களிடமிருந்து வெளிப்படை யாகவும் வரதட்சணை வாங்கக் கூடாது. மறைமுகமாகவும் வாங்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


குடும்ப வாழ்வில் பெண்ணுக்கும் சேர்த்து ஆண்கள் தான் பொருளாதாரப் பொறுப்பை சுமக்க வேண்டும் என்பதில் இவையும் அடங்கும் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.

EGATHUVAM FEB 2017